அமைச்சர் கிரேஸ் ஃபூ: கொவிட்-19 சமயத்தில் இனவெறி சம்பவங்கள் எழுகின்றன

கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரம் தொடங்கியதிலிருந்து சிங்கப்பூரில் சமூக வேறுபாடுகளின் அடிப்படையில் அழுத்தம் தென்படுவதாகவும் உள்ளூர்வாசிகளுக்கும் வெளிநாட்டவர்களுக்கிடையிலான மனவழுத்தம் அதிகரித்துள்ளதாகவும் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.

இதற்கு உதாரணமாக அவர் அண்மையில் ராபர்ட்சன் கீ பகுதியில் நடந்த வெளிநாட்டவர் மது அருந்துவதற்காக ஒன்றுகூடிய சம்பவத்தை சுட்டிக்காட்டினர்.

இது சமூக ஊடகங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டது.

"நம்மைவிட சற்று வித்தியாசமாக தோற்றமளிக்கும் நபர்கள் ஒரு இடத்தில் ஒன்றுகூடும்போது அதற்கு உடனடியாக உணர்வுபூர்வ எதிர்த்தாக்கம் வந்துவிடுகிறது என்று கூறிய அமைச்சர் கிரேஸ் ஃபூ, போலிஸ் விசாரணை முடிவதற்குள் வெளிநாட்டவர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்ற கருத்துகள் வெளிப்பட்டது என்றார்.

'சவால்மிக்க நேரங்களில் இன உறவுகள்' எனும் தலைப்பில் இன்று நடந்த மெய்நிகர் கலந்துரையாடலில் பேசிய அமைச்சர், இதுபோன்ற நேரங்களில் சமூக இணக்கம் முக்கியமானது என்று வலியுறுத்தினார்.

"இதுபோன்ற மோசமான காலக்கட்டத்தில், நம்மைவிட வித்தியாசமாக இருக்கும் ஒருவரை குறை கூறுவது எளிதானது, அது இன, சமய அல்லது தேச பின்னணி அடிப்படையில் இருக்கலாம். ஆனால் நாம் உணர வேண்டியது என்னவென்றால் கிருமிகள் ஒருவரை வேறுபடுத்துவதில்லை, மனிதர்களே அவ்வாறு செய்கின்றனர்," என விளக்கினார் அமைச்சர்.

இதற்கு எடுத்துகாட்டாக சமீபத்தில் முகக் கவசம் அணியாமல் வெளியே சென்ற ஒரு உள்ளூர் பெண்ணின் சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார்.

சமூக ஊடகங்களில் அந்த காணொளியை பார்த்த உள்ளூர்வாசிகள் அப்பெண் வெளிநாட்டவர் என பட்டம் சூட்டியதாக அவர் குறிப்பிட்டார்.

Onepeople.sg, 'ரோசர்ஸ் ஒஃப் பீஸ்' ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் நடந்தது. இதற்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழக அரசியல் சங்கமும் ஆதரவு வழங்கின.

அரசின் முயற்சிகளுக்கு அப்பால், சமூகங்களுக்கு இடையே நம்பிக்கை, மரியாதை, ஆதரவு ஆகியவற்றை கடைப்பிடிப்பது ஒவ்வொருவரின் பொறுப்பு என்றும் ஒரு வலுவான சிங்கப்பூர் சமுதாயத்தை உருவாக்குவதில் அனைவரின் பங்கும் அடங்கியுள்ளது என்றும் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் திருமதி கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலை போக்குவரத்து, தொடர்பு, தகவல் அமைச்சுகளின் மூத்த துணை அமைச்சரும் Onepeople.sg தலைவருமான டாக்டர் ஜனில் புதுச்சேரி வழிநடத்தினார்.

வெளிநாட்டவர் மீதான கடும் எதிர்ப்பு (xenophobia), இனவெறி போன்றவை தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் தோன்ற அவற்றை எப்படி ஆக்கபூர்வமாக சமாளிப்பது என்பது கலந்துரையாடலில் பேசப்பட்டது.

மற்ற நாடுகளில் நிலவுவரும் இனவெறி சம்பவங்களும் அதில் பேசப்பட்டது, குறிப்பாக இங்கிலாந்தில் தாக்கப்பட்ட சிங்கப்பூர் சீனர்களும் அவற்றில் அடங்குவர்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி ஆசிரியர் ஸாக்கீர் ஹுசேன், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழக பேராசிரியர் அகஸ்தீன் பாங், 'ரோசஸ் ஒஃப் பீஸ்' அமைப்பின் துணை தலைவர் ஃபஹிமா ஃபர்ஹா, 'சன்‌‌‌‌‌‌ஷாயின் இனி‌‌ஷியேட்டிவ் சிங்கப்பூர்' அமைப்பின் தலைவர் டாக்டர் எலி‌ஷியா ஆகியோர் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

கடந்த சில மாதங்களாக வெளிநாட்டவர் மீதான கடும் எதிர்ப்பு, இனவெறி தொடர்பான காணொளிகள், கருத்துகள் சமூக ஊடங்களில் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை எதிர்த்து தனிநபர்கள் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்று அமைச்சர் கிரேஸ் ஃபூ கேட்டுக்கொண்டார்.