சிங்கப்பூரில் இரண்டாம் கட்டத் தளர்வு: நிம்மதி திரும்புகிறது, நம்பிக்கை அரும்புகிறது

கொவிட்-19 கிருமிப் பரவல் மட்டுப்பட, இரண்டாம் கட்டமாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கடைகளைத் திறக்க முடிந்ததால் வர்த்தகர்கள் நிம்மதி! நண்பர்கள், உறவினர்களைக் கண்டு பேச, உணவுக்கடைகளில் ஒன்றாக உணவு, பானம் அருந்த முடிவதால் பலரும் மகிழ்ச்சி! விதிகளை முறையாகக் கடைப்பிடித்து, முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் விரைவில் கொரோனா கிருமியை முற்றாக அழித்தொழித்து, இயல்புநிலைக்குத் திரும்பி விடலாம் என எல்லாரிடத்திலும் அசைக்க முடியாத நம்பிக்கை!

கொவிட்-19 கிருமித்தொற்றுப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பிற்கு வந்ததில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கும் மேலாக லிட்டில் இந்தியாவில் கடைகள் மூடப்பட்டிருந்தன.

சிங்கப்பூர், வெளிநாட்டு இந்தியர்களின் நாடித்துடிப்பாக விளங்கும் லிட்டில் இந்தியாவிற்குச் செல்ல முடியாத ஏக்கம் பலருக்கு. 

இரண்டாம் கட்டத் தளர்வு நேற்று முன்தினம் நடப்பிற்கு வந்ததை அடுத்து மூடப்பட்ட கடைகள் திறக்கப்பட, வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் கடைகளுக்குத் திரும்பினர்.

லிட்டில் இந்தியா வட்டாரத்திற்கு நேற்று முன்தினம் சென்றிருந்த போது ‘சேஃப்என்ட்ரி’ எனும் மின்னிலக்க வருகைப்பதிவு, உடல் வெப்பநிலைப் பரிசோதனை, கடைகளில் கிருமிநாசினி பயன்பாடு உள்ளிட்ட பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை வர்த்தகர்கள் நடைமுறைப்படுத்தி இருந்ததைக் காண முடிந்தது.

நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டத்தின்போது, இணையவழி வர்த்தகம் வாயிலாக சில கடைகளால் தொடர்ந்து செயல்பட முடிந்தது. ஆயினும், அதற்காக தங்களது வர்த்தக செயல்முறைகளையும் அவை மாற்றியமைக்க வேண்டி இருந்தது.

வாடிக்கையாளர்களிடம் நகைகளை முறையாக விற்பது எப்படி என்பது குறித்து அவற்றைத் தயாரிக்கும் வெளிநாட்டு  நிறுவனங்கள் வழங்கிய பயிற்சியில் தம் ஊழியர்களைப் பங்கேற்கச்  செய்தார் சிராங்கூன் சாலை, ‘அபிராமி பாப்புலர் ஜுவல்லர்ஸ்’ நகைக் கடை உரிமையாளர் திரு பழனியப்பன் ராமநாதன்.

‘ஸூம்’ எனும் மெய்நிகர் சந்திப்புத் தளம் வாயிலாக அந்தப் பயிற்சி இடம்பெற்றது.

கடை மூடப்பட்டிருந்த வேளையில் சவாலாக இருந்ததாகக் கூறிய அவர், கடந்த மே மாதத்தில் இணையவழி விற்பனை ஓரளவு ஆதரவு தந்தது என்று சொன்னார். 

‘’கொவிட்-19 பிரச்சினை தோன்றாமல் இருந்திருந்தால் இணையவழி வர்த்தகத்தின் நேர்மறைத் தாக்கத்தை நாங்கள் உணர்ந்து இருக்கமாட்டோம். வெளிநாடுகளிலிருந்தும் எங்களது நகைகளை வாடிக்கையாளர்கள் வாங்க, இதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை இந்த அனுபவத்தின் வாயிலாகக் கற்றுக்கொண்டோம்,” என்றார் திரு ராமநாதன்.

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு நகையை தொட்டுப் பார்க்கும்போது நெகிழிக் கையுறைகளை அணிய அவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இலவச முகக்கவசங்களும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள கோமள விலாஸ் சைவ உணவகம், நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்தபோது வியாபாரத்தில் தாக்குப்பிடிக்க, இதர பங்காளிகளின் செயலி வழியாக வீட்டிற்கே உணவு விநியோகிக்கும் சேவையை அறிமுகம் செய்தது.   

வாடிக்கையாளர்கள் இப்போது உணவகங்களிலேயே அமர்ந்து உண்ணலாம் என்றாலும் பாதுகாப்பு இடைவெளி விதிகளுக்கு இணங்க, கோமள விலாஸ் சைவ உணவகம் ஏறத்தாழ 40 விழுக்காடு வரையில் அமர்ந்து உண்ணும் வசதிகளை குறைக்க வேண்டியதாயிற்று. 

அந்த உணவகத்தில் உண்ண விரும்பும் வாடிக்கையாளர்கள் கடைக்கு வெளியே இருந்தபடி தங்களுடைய உடல் வெப்பநிலையைப் பரிசோதித்த பிறகு உள்ளே நுழையலாம்.

சிரமமான வர்த்தகச் சூழலைச் சமாளிக்க, உணவு வகைகளை அதிகப்படுத்தி, உணவை வாங்கிச் செல்லும் நேரத்தைக் குறைக்க முயல்வதாக அந்த உணவகத்தின் இயக்குநர் திரு ராஜகுமார் குணசேகரன் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் ‘குட்டே (Gooday)’ அழகு நிலையத்தில் புருவம் திருத்தல், முடியகற்றல் சேவைக்காக வாடிக்கையாளர்கள் பொறுமையுடன் வரிசையில் காத்திருந்தனர்.

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை முன்னிட்டு, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் துடைக்கும் துண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. முக அழகுச் சேவை வழங்கும்போது ஊழியர்கள் சிறப்பு அங்கியை அணிந்துகொள்கின்றனர்.

முடிதிருத்தம் போன்ற இதர சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து முன்பதிவு செய்து வருவதால் வர்த்தகம் படிப்படியாகப் பழைய நிலைக்கு திரும்பும் என நம்புகிறார் ‘குட்டே’ உரிமையாளர் திரு பி.செல்வராஜூ.

“இரு மாதங்களுக்குப் பின் கடையைத் திறந்துள்ளதால் அதிகமான சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வழங்கி, வாடிக்கையாளர்களை ஈர்க்க முயல்கிறோம். மக்கள் நடமாட்டம் மிகுந்த சிராங்கூன் சாலையை மீண்டும் பார்க்க வேண்டும் என்பதே என் விருப்பம். அதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம்,” என்றார் ‘லிலி எக்ஸ்பிரஸ்’ தையல் கடையின் மேலாளர் திருமதி ஹமீத் ஸுலைஹா, 43.

தங்களுக்குத் தேவையான பொருட்களையும் சேவைகளையும் மீண்டும் பெற முடிவதில் பலருக்கும் மகிழ்ச்சி. அதே நேரத்தில், விதிகளைக் கடைப்பிடித்து, முன் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதையும் அவர்கள் உணர்ந்துள்ளனர்.

வீட்டில் இறைவழிபாட்டிற்குத் தேவையான பூசைப் பொருட்கள் தீர்ந்துவிட்ட நிலையில், இரண்டாம் கட்டத் தளர்வு நடப்பிற்கு வந்ததும் முதல் வேலையாக நேற்று முன்தினம் லிட்டில் இந்தியா வந்து, அவற்றை வாங்கிச் சென்றார் இல்லத்தரசியான திருமதி பார்கவி, 65.

லிட்டில் இந்தியாவில் மக்கள் நடமாட்டத்தைப் பார்க்க முடிவது ஒருவகையில் மகிழ்ச்சியைத் தந்தாலும் அங்கு செல்வதால் கொரோனா கிருமி தம்மைத் தொற்றிவிடுமோ என்ற அச்சமும் அவருக்கு இருக்கிறது.

தாம் சென்ற நகைக் கடையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தமக்குப் பாதுகாப்பு உணர்வைத் தரும்படி இருந்ததாகச் சொன்னார் திருமதி விஜயலட்சுமி, 63. 

இனி நண்பர்களை தேக்கா சந்தையில் சந்தித்து உணவு உண்பது பாதுகாவல் அதிகாரியான 63 வயது துரைராஜ் வி.சின்னத்தம்பிக்கு நற்செய்தி என்றாலும் வெளியே எந்நேரமும் முகக்கவசம் அணிய வேண்டி இருப்பது சற்று சிரமமாக இருப்பதாக அவர் உணர்கிறார். இருப்பினும், தற்போதைய கிருமித்தொற்று நிலவரத்தைக் கருதி, அனைவரும் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என அவர் கருதுகிறார்.

புருவம் திருத்தும் சேவைக்காக லிட்டில் இந்தியாவுக்கு வந்திருந்த குமாரி ப்ரசில்லா ‌‌‌ஷாலினி, 31, முதல் நாளிலேயே அச்சேவைக்காக அதிகமானோர் திரள்வர் என எதிர்பார்க்கவில்லை. இதனால், இன்னும்  சில காலத்திற்கு நண்பர்களைச் சந்திப்பது போன்ற வெளியே செல்லும் நடவடிக்கைகளை முடிந்தவரை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார் அலுவலக ஊழியரான குமாரி ஷாலினி.

“லிட்டில் இந்தியா வட்டாரத்தின் செழிப்பு, உள்ளூர்வாசிகள், வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் சுற்றுப்பயணிகளையே பெரிதும் நம்பியுள்ளது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் வர்த்தகங்கள் பழைய நிலைக்குத் திரும்ப சிறிது காலம் காத்திருக்க வேண்டும்,” என்று ‘லி‌‌‌ஷா’ எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் தலைவர் திரு ராஜ்குமார் சந்திரா கூறினார்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online