(காணொளி) மரண வாயிலை சிலமுறை எட்டிப்பார்த்த பங்ளாதேஷ் ஊழியர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து கிளம்பினார்

மரண வாயிலை சிலமுறை எட்டிப் பார்த்து, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு கொவிட்-19லிருந்து விடுபட்டிருக்கிறார் சிங்கப்பூரின் 42வது கொவிட்-19 சம்பவம் என்று பலராலும் அறியப்படும் பங்ளாதேஷ் ஊழியர் திரு ராஜு சேகர்.

கிட்டத்தட்ட 5 மாதங்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற அந்த 39 வயது ஊழியர், 24 கிலோ எடை குறைந்து காணப்பட்டார்.

சிகிச்சையின் முடிவில் குணமடைந்து டான் டோக் செங் மருத்துவமனையிலிருந்து கிளம்பினார். அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தபோது அவரது கர்ப்பிணி மனைவி, என் கணவரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். அவர் முதன் முதலாக தந்தையாகப் போகிறார் என்று கண்ணீருடன் கேட்டுக்கொண்டார்.

மார்ச் 30ஆம் தேதி தந்தையான அவர், நம்பிக்கையுடன் புதிய வாழ்க்கைக்குத் தாயாராகி இருக்கிறார் திரு ராஜு.

மருத்துவமனை ஊழியர்களிடமிருந்து மகிழ்ச்சியுடன் விடைபெற்ற திரு ராஜு, முதலில் கொஞ்சம் இறைச்சி குழம்பு சாப்பிட விரும்புவதாகக் கூறினார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் மருத்துவமனையி அனுமதிக்கப்பட்ட அவர், மே மாத மத்தியில் டான்டோக் செங் மருத்துவமனையின் மறுவாழ்வு நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.

வெகுநாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தாலும் நோயிலிருந்து மீண்டு வந்த திரு ராஜுவின் மன உறுதி மருத்துவர்களையே வியக்க வைத்ததாக டான் டோக் செங் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்களுள் ஒருவரான டாக்டர் பெஞ்சமின் ஹோ.

முதலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சேகர் மிகவும் மோசமான உடல் நிலையில் இருந்தார் எனவும் இரண்டு, மூன்று தடவைகள் மரண வாயிலை எட்டிப்பார்த்தார் என்றும் டாக்டர் ஹோ குறிப்பிட்டார்.

“ராஜுவின் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து போனது; ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவானது. அவர் மாண்டுவிடுவாரோ என்று நாங்கள் கவலைப்பட்டோம்,” என்று தேசிய தொற்றுநோய்கள் தடுப்பு நிலையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவு இயக்குநருமான டாக்டர் ஹோ கூறினார்.

ஆனால், ராஜு குணமடைந்துவிட திண்ணம் கொண்டிருந்தார். அவர் குணமடைவதற்கு தம் குடும்பத்தின் மீது அவர் கொண்டிருந்த பாசம்தான். அடிக்கடி குடும்பத்தாரின் புகைப்படத்தை கைபேசி வழி பார்த்தார் எனவும் தம் குடும்பத்தாருடன் அவ்வப்போது கைபேசி வழி உரையாடி வந்தார்.

மறுவாழ்வு நிலையத்தில் 5 வாரங்கள் இருந்தபோது 10 கிலோ எடை கூடியது. குளிப்பது உள்ளிட்ட செயல்களைத் தாமாக் செய்துகொள்ளும் அளவுக்கு அவரது உடலில் வலு ஏற்பட்டது.

இருப்பினும் அவர் அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப சிகிச்சையைத் தொடர வேண்டும்.

கொரோனா கிருமி அவருக்கு பல விதங்களில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

அவரது உடலில் உப்பு, மெக்னீசியம் போன்றவற்றின் அளவு வெகுவாகக் குறைந்திருப்பதால் அவரது இதயத்தின் செயல்பாடு குறைந்துள்ளது.

அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டதுடன் தைராய்டு பிரச்சினையும் சிறுநீரகப் பிரச்சினையும் உள்ளது. தற்காலிகமாக அவர் ரத்த சுத்திகரிப்பு  செய்துகொள்ள வேண்டியுள்ளது.

பல நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததால் அவரது மூளையிலும் சில மாற்றங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தற்போது 60 நாட்கள் மருத்துவ விடுப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர் வேலை செய்வதற்குத் தயாராக இருக்கும்போது அவரது முதலாளியிடம் பேசி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தாயகம் திரும்பி, மனைவியையும் மகனையும் பார்க்க விரும்பும் திரு ராஜு, “அதற்கு இன்னும் மூன்று முதல் நான்கு மாதங்கள்வரை ஆகலாம்,” என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online