மசெகவுக்கு வலுவான அதிகாரம் கொடுங்கள்

பிரதமர் லீ: நெருக்கடியில் இருந்து மீள ஒன்றுபட்ட சிங்கப்பூரர்களின் முழு ஆதரவுடன் கூடிய செயல்திறன்மிக்க அரசாங்கம் தேவை

கொவிட்-19 நோய்ப் பரவல், வலுவிழந்த உலகப் பொருளியல் போன்ற சவால்களை எதிர்கொண்டு வருவதால் சிங்கப்பூர் மிக முக்கியமான தருணத்தில் இருக்கிறது என்றும் இந்த நெருக்கடிநிலையைக் கடக்க, ஒன்றுபட்ட சிங்கப்பூரர்களின் முழுமையான ஆதரவுடன் கூடிய செயலாற்றல்மிக்க அரசாங்கம் தேவை என்றும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார்.

சிங்கப்பூரர்கள் தங்களுக்குச் சிறப்பான சேவையாற்றி வரும் ஓர் அமைப்பு முறையைக் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமையன்று நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை உலகமே உற்றுநோக்கி வருவதாக திரு லீ குறிப்பிட்டார்.

“சிங்கப்பூரர்கள் இன்னும் ஒன்றுபட்ட மக்களாக இருக்கிறார்களா, இப்போதைய நெருக்கடிநிலையில் இருந்து விடுபட தாங்கள் தேர்ந்தெடுத்த தலைவர்களுக்கு வலுவான ஆதரவளித்து, இணைந்து பணியாற்றுகிறார்களா என்பதை அறிய முதலீட்டாளர்கள் இந்தத் தேர்தல் முடிவுகளைத் தீர ஆராய்வர்,” என்று அவர் கூறியுள்ளார்.

அதனால்தான், கொரோனா தொற்றால் ஏற்பட்ட இந்த நெருக்கடிநிலையை சிங்கப்பூர் கடந்து செல்ல இந்தத் தேர்தலில் வலுவான அதிகாரத்தை வழங்கும்படி மக்கள் செயல் கட்சி கோருகிறது என்றார் திரு லீ.

நேற்றைய மெய்நிகர் ‘ஃபுல்லர்ட்டன்’ தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் லீ இவ்வாறு தெரிவித்தார். பொதுத் தேர்தலின்போது ஃபுல்லர்ட்டன் சதுக்கத்தில் மசெக பகல் நேரப் பிரசாரத்தை நடத்துவது வழக்கம். கொவிட்-19 காரணமாக இம்முறை அது இணையவழி பிரசாரமானது.

இந்தச் சிரமமான நிலையில் நாட்டை மீட்பதில், பொருளியலை வளர்ப்பதில், புதிய வேலைகளை உருவாக்குவதில் எதிர்க்கட்சிகளின் ஆற்றலைப் பற்றியும் அவர் கேள்வி எழுப்பினார்.

“குறைந்தபட்ச ஊதியம் அல்லது பொதுவான அடிப்படை ஊதியம் குறித்து எதிர்க்கட்சிகள் பேசிக்கொண்டே இருக்கின்றன. அமைதிக்காலத்தில் இத்தகைய முழக்கங்களை எழுப்புவது நாகரிகமாகிவிட்டது. இவையெல்லாம் போர்க்காலத்தில் எடுக்கப்படும் தீவிரமான திட்டங்கள் அல்ல,” என்றார் பிரதமர்.

அத்துடன், “ஒருவருக்கு வேலையே இல்லை எனும்போது குறைந்தபட்ச ஊதியம் எந்த வகையில் அவருக்கு உதவும்? அது நிறுவனங்களுக்கு மேலும் செலவைக் கூட்டி, இன்னும் பல ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க அழுத்தம் கொடுக்கும்,” என்றும் அவர் சொன்னார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து அரசாங்கம் கிட்டத்தட்ட $100 பில்லியன் மதிப்பிலான நான்கு வரவுசெலவுத் திட்டங்களைத் தாக்கல் செய்து இருக்கிறது. அதற்காக, கையிருப்பு நிதியில் இருந்து $52 பில்லியன் வரை எடுக்கப்பட்டுள்ளது.

“யார் யார் பாதிக்கப்பட்டுள்ளனர், யார் யாருக்கு அதிக உதவி தேவை, அவர்களுக்கு எப்படி உதவுவது, எது பலன் தரும், எது பலன் தராது என்பன பற்றி எல்லாம் அறிய வேண்டியது அவசியம். கடந்த மாதங்களில், நாங்கள் இவற்றை எல்லாம் முறையாகச் செய்துள்ளோம்,” என்று திரு லீ விளக்கினார்.

வாடகை, ஒப்பந்தத் தள்ளுபடி தொடர்பில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டது எதிர்பாராத நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்டார். அதைச் செய்யாதிருந்தால் விளைவுகள் கடுமையானதாக இருந்து இருக்கும் என்றும் அவர் சொன்னார்.

அதே நேரத்தில், இந்த வரவுசெலவுத் திட்ட, சட்டமியற்றல் நடவடிக்கைகள் எல்லாம் நெருக்கடிகால நிவாரணம்தான் என்றும் கால வரம்பில்லாமல் அவற்றால் தாக்குப்பிடிக்க முடியாது என்றும் பிரதமர் சுட்டினார்.

பொருளியலை மீட்டெடுத்து, அதிக அளவில் முதலீடுகளை ஈர்ப்பதே மிக அடிப்படையான தீர்வாக அமையும் என்றும் அதன் மூலமே அதிகமான வேலைகளை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கு, நிறுவனங்களின் நம்பிக்கையைக் கட்டிக்காப்பது மிக முக்கியம் என்றார் அவர்.

அதற்கு எடுத்துக்காட்டாக, 1985ஆம் ஆண்டு நாடு சந்தித்த பொருளியல் மந்தநிலையின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அவர் சுட்டிக்காட்டினார்.

அப்போது, எதிர்காலத்திற்காக நாட்டின் பொருளியலை மறுநிலைப்படுத்துவதற்கான பொருளியல் குழுவின் தலைவராக திரு லீ பொறுப்பேற்றார். மத்திய சேம நிதிப் பங்களிப்பு விகிதம் குறைப்பு போன்ற கடும் நடவடிக்கைகள் அப்போது எடுக்கப்பட்டன.

“சிங்கப்பூரர்கள் நிலைமையை அறிந்து, அரசு எடுத்த கடும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தனர். அந்த நடவடிக்கைகள் ஓராண்டிற்குள் நல்ல பலனைத் தந்தன. நமது பொருளியலும் மீண்டும் வளரத் தொடங்கியது. அரசியல் தலைமைத்துவம் என்பது அதுதான்,” என்றார் பிரதமர் லீ.

அவ்வேளையில் அமெரிக்காவின் ‘வால் ஸ்திரீட் ஜர்னல்’ பத்திரிகையில் சிங்கப்பூரில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து முழுப் பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

அதன் விளைவாக, பொருளியல் நெருக்கடி நிலவியபோதும் ஆப்பிள், சீகேட், மோட்டரோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சிங்கப்பூரில் முதலீடு செய்ய முன்வந்தன என்றார் பிரதமர்.

“சிங்கப்பூரர்கள் கடுமையாக உழைக்கக்கூடிய, செயலாற்றல் படைத்தவர்களாக இருந்ததை அந்நிறுவனங்கள் அறிந்திருந்தன; வளர்ச்சியை எட்டி, அதிகளவில் வேலைகளை உருவாக்குவதற்கு தொழிற்சங்கங்கள், முதலாளிகளுடனும் அரசாங்கத்துடனும் அணுக்கமான ஒத்துழைப்பு அளித்து வந்தன; நிறுவனங்கள் தங்களது எல்லாப் பிரச்சினைகளையும் ஒரே இடத்தில் தீர்க்கக்கூடியதாக பொதுச் சேவை விளங்கியது; சிங்கப்பூரில் முதல் தரமான அரசாங்கம் காணப்பட்டது ஆகிய நான்கு அம்சங்களே அதற்குக் காரணம்,” என திரு லீ விளக்கினார்.

பல வரம்புகளுடன் கூடிய சிறிய நாடாக இருந்தாலும் உலகளவில் சிங்கப்பூருக்கு உள்ள உயர்ந்த மதிப்பைக் கட்டிக்காக்க சிங்கப்பூரர்கள் மசெகவுக்கு அதிகாரம் அளித்தால் மட்டும் போதாது, இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு, நாட்டை வழிநடத்திச் செல்ல வலுவான அதிகாரம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘இதுவும் கடந்து போகும்’

தலைமைத்துவ புதுப்பிப்பு தொடர்ந்து இடம்பெறுவதை மசெக உறுதிசெய்யும் அதே வேளையில், தமது அமைச்சரவை சகாக்களுடனும் நான்காம் தலைமுறை அமைச்சர்களுடனும் இணைந்து இப்போதைய கொவிட்-19 நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டு, முன்னெடுத்துச் செல்வேன் என பிரதமர் லீ உறுதியளித்து இருக்கிறார்.

1985ஆம் ஆண்டில் நாடு சந்தித்த பொருளியல் மந்தநிலை, 1997-1998ல் ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடி, 2001 செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் மீது தொடுக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், ஜமா இஸ்லாமியா பயங்கரவாத அச்சுறுத்தல், 2003ல் ஆட்டிப்படைத்த சார்ஸ் தொற்று, 2007-2009ஆம் ஆண்டுகளில் நிலவிய உலகளாவிய நிதி நெருக்கடி போன்ற சவால்களை எல்லாம் சிங்கப்பூர் கடந்து வந்திருப்பதை திரு லீ சுட்டினார்.

“ஒவ்வொன்றும் மிகக் கடுமையான சவாலாக இருந்தது. ஒவ்வொரு முறையும் மோசமான நிகழ்வுகள் குறித்து கவலைப் பட்டோம். ஆனால், ஒவ்வொரு முறையும் அரசாங்கம் முன்னின்று வழிநடத்த, சிங்கப்பூரர்கள் ஒன்றாக அணிதிரள, அந்தச் சவால்களை எல்லாம் நாடு கடந்தது,” என்றார் அவர்.

அதேபோல, அண்மைய கொரோனா நெருக்கடியில் இருந்தும் நாடு விடுபடும் என்பதில் உறுதியாய் இருப்பதாக பிரதமர் கூறினார்.

“இந்த நெருக்கடியை நாம் எதிர்கொள்ளும் விதமே நாட்டின் எதிர்காலத்தை, சிங்கப்பூரில் நமது பிள்ளைகளுக்கான, பேரன் பேத்திகளுக்கான வாய்ப்புகளைத் தீர்மானிப்பதாக அமையும்,” என்றும் அவர் சொன்னார்.

நாட்டை அப்படியே, நல்ல நிலையில் அடுத்த அணியிடம் ஒப்படைப்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் பிரதமர் லீ தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!