இந்திய-சீன பொருளியல் திறன்களை ஒப்பிட்ட பிரதமர் லீ

இந்தியா தனது ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தினால் உலகப் பொருளியல் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்கை அந்நாடு ஆற்ற முடியும் என்று பிரதமர் லீ சியன் லூங் கருதுகிறார். அமெரிக்காவின் அட்லாண்டிக் மன்றம் செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய இணைய நேர்காணலில் பிரதமர் லீ இவ்வாறு கூறினார். 

அமெரிக்க-சீன பதற்றநிலை பற்றியும் தற்போதைய கொவிட்-19 தொற்று நிலவரம் பற்றியும் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் வர்த்தகப் பதற்றம் நீடிக்கும் சூழலில் உலகப் பொருளியல் வளர்ச்சிக்கு இந்தியா எவ்வாறு பங்களிக்க முடியும் என்று தமிழ் முரசு கேட்டதற்கு திரு லீ பதிலளித்தார்.

“பொருளியல் ரீதியில் வளர்வதற்குத் தேவையான அதிக ஆற்றலை இந்தியா தன்வசம் கொண்டுள்ளது. சீனாவைப் போலவே அதிக மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில் சீனாவைவிட அதிக இளையர்கள் உள்ளார்கள். இருப்பினும், சீனா தற்போது அடைந்திருக்கும்  நிலையை இந்தியா இன்னும் எட்டவில்லை. 

“உலக உள்நாட்டு உற்பத்தியில் சீனாவின் பங்கு கிட்டத்தட்ட 16% என்பதோடு உலக வர்த்தகப் பங்களிப்பில் 12%. இந்தியாவின் உலக உள்நாட்டு உற்பத்தி சீனாவின் பங்களிப்பில் ஐந்தில் ஒரு பங்கும் உலக வர்த்தப் பங்களிப்பில் சீனாவின் பங்களிப்பில் ஆறில் ஒரு பங்கும் வகிக்கிறது.
“இதன்காரணமாக இரு நாட்டு பங்களிப்பின் அளவும் வேறுபடுகிறது. 

“இருந்தபோதிலும்  இந்தியா அதன் உற்பத்தித்திறன் ஆற்றலை வெளிப்படுத்தி சீனா கடந்த 40 ஆண்டுகளில் கண்ட வளர்ச்சிபோல  வளர முடிந்தால் ஆசியாவுக்கும் உலகத்துக்கும் இந்தியாவால் பெரும் பங்கு ஆற்ற முடியும்,” என்று பிரதமர் லீ சொன்னார்.

“அதே நேரத்தில் சீனாவுடனும் அதனால் ஆக்கபூர்வமான உறவை வளர்த்துக்கொள்ளவும் அதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் சீனாவைவிட இந்தியாவில் அதிக சிக்கல்கள் உள்ளன. 

“அவற்றைக் கடந்து முன்னேற இந்தியா மிகவும்  கடினமாக முயன்று வருகிறது. அதன் தற்போதைய பிரதமரும் அதற்கு முயற்சி எடுத்து வருகிறார். எனினும் அந்த வளர்ச்சி வேகத்தை எட்ட சற்று காலம் எடுக்கும். அப்படி இந்தியா வளர்ச்சி அடையும் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்றார் பிரதமர்.

தாம் பேட்டியளித்தது குறித்து பிரதமர் லீ தமது ஃபேஸ்புக்கில் மகிழ்ச்சி தெரிவித்தார். “பல நாடுகள் தங்களது சொந்த விவகாரங்களில் கவனம் செலுத்தும் நிலையை கொள்ளைநோய் ஏற்படுத்தினாலும் நாம் இன்னும் உலக நாடுகளின் தோழர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய உலக வங்கியின் புள்ளிவிவரங்களின்படி உலகளவில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கு கடந்த ஆண்டு 3.2 விழுக்காடாகவும் உலக வர்த்தகத்துக்கான பங்களிப்பு கிட்டத்தட்ட 2.6 விழுக்காடாகவும் இருந்தன.கொவிட்-19 கிருமிப் பரவல் காரணமாக உலக

நாடுகள் பெரும் பொருளியல் நெருக்கடியைச் சந்தித்து வரும் வேளையில் 2019-20ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி 3.1% ஆகக் குறைந்துவிட்டது. ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டு பொருளியல் நிலவரம் தொடர்பான

இவ்விவரம் அண்மை யில் இந்திய அரசால் வெளியிடப்பட்டது. அங்குள்ள பொருளியல்  நிலைமையை இந்திய ரிசர்வ் வங்கி உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. 

பொருளியல் வளர்ச்சியை மேம்படுத்தும் திட்டங்கள் இந்தியாவுக்குத் தேவை என்றும் தேவைக்கேற்ப அவை அமலாக்கப்படும் என்றும் அவ்வங்கி அண்மையில் குறிப்பிட்டது.