வெளிநாட்டு ஊழியர் தீர்வை கழிவுக்கு நிறுவனங்கள் வரவேற்பு; விரைவில் வேலைகளை மீண்டும் தொடங்க கோரிக்கை

சிங்கப்பூரில் கொவிட்-19 பிரச்சினை வலுக்கத் தொடங்கிய ஏப்ரல் மாதத்திலிருந்து கட்டுமானம், கடற்துறை கப்பல் பட்டறை, பதனீடு போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் வேலையை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

வருமானம் நின்றுபோனாலும் அந்த நிறுவனங்கள் தொடர்ந்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவது உள்ளிட்ட செலவினங்களைக் கையாள வேண்டிய சூழலில், பல நிறுவனங்கள் கையிருப்பைப் பயன்படுத்த வேண்டியதாயிற்று.

இந்த நிலையில், வெளிநாட்டு ஊழியர் தீர்வையில் நேற்று அறிவிக்கப்பட்ட கழிவு பல நிறுவனங்களின் பொருளியல் அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது.

அதே வேளையில், தொடர்ந்து செலவினங்களைச் சமாளிக்க, வேலைகளை விரைந்து தொடங்க வேண்டியது அவசியம் என்று அந்த நிறுவனங்கள் கருதுகின்றன.

மேற்கண்ட துறைகளில் பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தியிருக்கும் சிறிய, நடுத்தர உபஒப்பந்ததாரர்களுக்கு இந்த கூடுதல் ஆதரவு பயனளிக்கும் என்று சிங்கப்பூர் ஒப்பந்ததாரர்கள் சங்கத் (SCAL) தலைவர் இங் யெக் மெங்.

சில நிறுவனங்கள் சுமார் 500 வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளன. அவர்களின் தங்குமிட செலவு, ஊழியர் தீர்வை போன்றவற்றின் தொடர்பில் சராசரியாக  ஒவ்வொரு ஊழியருக்கும் மாதந்தோறும் $1,000 செலவாகும் என்றார் அவர். ஊழியர்களுக்கான ஊதியமும் செலுத்தப்பட வேண்டும்.

வேலை ஆதரவுத் திட்டம், தீர்வைக் கழிவு போன்ற அரசாங்க ஆதரவுத் தொகுப்புகள் இல்லாமல் பல நிறுவனங்கள் இவ்வளவு தூரம் தாக்குப்பிடித்திருக்க முடியாது என  அவர் குறிப்பிட்டார். கட்டுமானத் துறையில் சுமார் 3,000 நிறுவனங்களைப் பிரதிநிதிக்கிறது SCAL.

இந்த ஆதரவுகளின் மூலம் வேலையிழப்புகள் குறைக்கப்பட்டதுடன் உள்ளூர் ஊழியரணியில் 100,000க்கு மேற்பட்டோர் பலனடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

முழு திறனுடன் நிறுவனங்கள் விரைவில் பணியைத் தொடங்குவது அவசியம் என டீம்பில்ட் இஞ்சினியரிங் அண்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜானி லிம் குறிப்பிட்டார். குறைவான ஊழியர்களைக் கொண்டு பணிகளைத் தொடங்கினால் உற்பத்தித்திறன் குறைபாடு இருக்கும் என்றார் அவர்.