சுடச் சுடச் செய்திகள்

இந்திய நற்பணிப் பேரவை கலந்துரையாடலில் அமைச்சர் ஈஸ்வரன்: சவால்களை எதிர்கொள்ள தன்னம்பிக்கை தேவை

வேலை வாய்ப்புகள், திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வைக் குடியிருப்பாளர்களிடையே அதிகரிக்க சமூகத் தலைவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. எந்தெந்த துறைகளில் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன, அவற்றைப் பெற என்னென்ன திறன்களும் பயிற்சிகளும் தேவைப்படும், தன்னம்பிக்கை ஊட்டுவது ஆகிய அம்சங்களில் சமூகத் தலைவர்கள் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

“நம் அனைவருக்கும் தன்னம்பிக்கை தேவை. நம்மால் இதைச் சமாளிக்க முடியும், இந்தச் சவாலையும் கடந்து செல்ல முடியும் என்று தன்னம்பிக்கையுடன் நாம் முன்னேற வேண்டும். அதனால் தான் இந்த மூன்று அம்சங்களிலும் நம் சமூகத் தலைவர்களுக்கு ஒரு முக்கிய பொறுப்பு இருக்கிறது,” என்று சொன்னார் அமைச்சர் ஈஸ்வரன்.

மக்கள் கழக இந்திய நற்பணிப் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் மெய்நிகர் வழியாக நடந்த கலந்துரையாடல் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது அமைச்சர் ஈஸ்வரன் இதனைத் தெரிவித்தார்.

கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலால் ஏற்பட்டுள்ள பொருளியல் மந்தநிலை சமூகத் தலைவர்களுக்கு கவலையைத் தந்துள்ளதாக அவர் சொன்னார்.

தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரியுடன் சேர்ந்து அவர் கலந்துரையாடலை வழிநடத்தினார்.

மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய வேலைகள் மன்றம் 100,000 புது வேலை வாய்ப்புகளை உருவாக்கவுள்ளது. அரசாங்கம் உருவாக்கும் வேலை, பயிற்சி வாய்ப்புகளைச் சரியான மனப்போக்குடன் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

வெளிநாட்டினர் சிங்கப்பூருக்கு வந்து போட்டியிடுவது சிங்கப்பூரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படும் கருத்துகளுக்கு திரு ஈஸ்வரன் பதிலளித்தார்.

“எல்லாக் காலகட்டத்திலும் சிங்கப்பூரர்களும் திறனாளர்களும் தங்களின் திறன்களை மேம்படுத்த வேண்டும், அவர்களுக்கு வாய்ப்புகள் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அதேவேளையில், வெளிநாட்டினர் இங்கு வந்து நம்முடன் சேர்ந்து அவர்கள் உழைக்கும்போது, அவர்களை நமது பங்காளிகளாக கருத வேண்டும்.

“நாம் இணைந்து செயல்படும்போதுதான் அனைவருக்கும் ஒரு சிறந்த எதிர்காலம், வாய்ப்புகள் நிறைந்த எதிர்காலத்தை நம்மால் உருவாக்க முடியும்,” என்றார் அமைச்சர் ஈஸ்வரன்.

இந்திய சமூகத் தலைவர்கள், தொண்டூழியர்கள் என கிட்டத்தட்ட 200 பேர் பங்கேற்ற இந்தக் கலந்துரையாடல் ஏறத்தாழ இரண்டு மணி நேரம் நடைபெற்றது.

உலகளவில் பொருளியல் நிலவரம் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து பேசிய அமைச்சர் ஈஸ்வரன், சில துறைகள் பெரியளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும் தகவல், தொடர்பு தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

கொவிட்-19 சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்களுக்கு உதவி வழங்கப்படுவதன் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த டாக்டர் ஜனில், சுகாதாரப் பராமரிப்பு, போக்குவரத்து, குடியிருப்பு ஆகிய அம்சங்களில் மூத்த குடிமக்களுக்கு ஏற்படும் செலவுகளை கட்டுப்படியாகக்கூடிய நிலையில் வைத்திருப்பது முக்கியம் என்று குறிப்பிட்டார்.

கல்வியின் எதிர்காலம் குறித்த மற்றொரு கேள்விக்குப் பதில் சொன்ன அவர், “கடந்த சில ஆண்டுகளாக தொழில்துறைக்கும் கல்விக்கும் இடையே ஏற்படும் பிணைப்பைப் பார்க்கிறோம். முந்தைய காலத்தில் அது நமக்கு பயனளித்துள்ளது. எதிர்காலத்திலும் அது நமக்கு பயனளிக்கக்கூடும்,” என்று நம்பிக்கை அளித்தார்.

வழக்கமாக இந்தக் கலந்துரையாடல் தேசிய தினப் பேரணிக்குப் பிறகே நிகழும்.

ஆனால் செப்டம்பர் 2ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதமரின் உரையையும் கடந்த இரு வாரங்களாக நிகழ்ந்த விவாதங்களில் இடம்பெற்ற கருத்துகளையும் ஒட்டி இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon