பணம் ஒரு பக்கம், பாசம் மறுபக்கம்: எல்லைத் திறப்புக்காக ஏங்கிக் காத்திருக்கும் மலேசிய ஊழியர்கள்

கொவிட்-19 கிருமித்தொற்று, உலக மக்களுக்கு வெவ்வேறு விதமான சங்கடங்களை ஏற்படுத்தி உள்ளது. மலேசிய மக்களைப் பொறுத்தவரை பொருளாதார நெருக்கடிகளுடன் பாச உணர்வும் அவர்களைப் பாடாய்ப்படுத்துகிறது. பணத்திற்காக பாலத்திற்கு இந்தப் பக்கம் தங்கிவிட நேர்ந்தவர்கள் பாலத்திற்கு அந்தப் பக்கம் உள்ள உறவினர்களை நினைத்தே ஒவ்வொரு நாளையும் கழிக்கிறார்கள். பாசப் பிணைப்புகளை நேரில் கண்டு உறவாட, பாலத்தின் எல்லைப் பாதை அகலத் திறக்கும் நாளை நோக்கித் தவம் இருக்கிறார்கள்.

கடல்கடந்து வந்து சிங்கப்பூரில் வேலை பார்த்தாலும் அன்றாடம் வீடு திரும்பி குடும்பத்தினரைப் பார்த்து, வீட்டு சாப்பாடு சாப்பிட்டு பழகிவிட்ட மலேசியர்கள் பலருக்கு ஜோகூர் கடற்பாலத்தைத் தினமும் கடப்பது அன்றாடச் செயல்களில் ஒன்று.

கிட்டத்தட்ட 100,000 பேர் அன்றாடம் மலேசியா-சிங்கப்பூர் எல்லையை சாலைவழி கடந்து வேலையிடத்துக்கும் வீட்டுக்குமாய் பயணம் செய்தனர். சராசரியாக தினமும் 415,000 பேர் உட்லண்ட்ஸ் வழியாகவும் துவாஸ் இரண்டாம் பாலம் வழியாகவும் கடந்தனர்.

கொவிட்-19 கிருமிப் பரவல் இதையெல்லாம் நிறுத்திவிட்டது.

உலகெங்கும் அதிவேகமாகப் பரவும் கொள்ளைநோயைக் கட்டுப்படுத்த மலேசியா, மார்ச் மாதம் 18ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை செயல்படுத்தியது. தென்கிழக்காசியாவின் பெரிய நாடுகளில் ஒன்றான மலேசியா, கொவிட்-19 கிருமிப் பரவலைத் தொடக்கத்திலேயே கட்டுக்குள் கொண்டுவந்ததில் உலகின் பாராட்டைப் பெற்றது.

“கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டபோது, சுமார் ஐந்து மணி நேரம் காப்பிக் கடையில் உட்கார்ந்து யோசித்தேன். போகலாமா, அல்லது இங்கேயே இருந்துவிடலாமா என்று ஒரே குழப்பம். முதலாளி அளித்த நம்பிக்கையால் வந்துவிட்டேன்,” என்றார் பாதுகாவலராகப் பணியாற்றும் 25 வயது துரைசிங்கம் பிரகா‌ஷ் குமார்.

அவரைப் போன்று மூட்டை முடிச்சுகளோடு உடனே சிங்கப்பூருக்குப் புறப்பட்டு வந்தவர்களில் எவருமே இத்தனை மாத காலம் இங்கேயே தங்கிவிட நேரும் என நினைத்திருக்கவில்லை.

இரண்டு வாரம் வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டதாக எண்ணிக்கொண்டு குடும்பத்தினருடன் இருந்துவிடலாம் என்று நினைத்தவர்களும் பல மாத காலம் வருமானம் இல்லாமல் முடங்கிவிட நேரும் எனக் கருதவில்லை.

“சேமிப்பு கொஞ்சம் இருந்ததால் வீட்டில் இருந்துவிடலாம் என்று எண்ணினேன். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து வருமானத்திற்கு என்ன செய்வது என்று எண்ணி, சிங்கப்பூர் வர ஏற்பாடுகள் செய்தேன்,” என்றார் சிங்கப்பூர் நிரந்தரவாசியான கார்த்திகேசு செல்லதுரை, 43. கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் கழித்து மீண்டும் சிங்கப்பூர் வந்தார் அவர்.

நீண்டகாலமாக சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த பல மலேசிய ஊழியர்களுக்கு இந்தக் காலகட்டம் புதிய வாழ்க்கைமுறையைப் பின்பற்ற வைத்துள்ளது.
கடற்பாலத்திற்கு அப்பால் இருக்கும் தீவு தங்களின் வேலையிடம் என்று மட்டுமே எண்ணியிருந்த இது தங்குமிடமாகவும் வாழ்விடமாகவும் மாறியுள்ளது.
முதன்முதலில் வேறொரு நாட்டில் குடிபெயர்ந்த சூழலை அவர்கள் எதிர்நோக்குகின்றனர்.

“இந்தியாவிலிருந்தோ மற்ற நாடுகளிலிருந்தோ வரும் வெளிநாட்டு ஊழியர்கள் நீண்டகாலத்திற்குக் குடும்பத்தினரைப் பார்க்கமாட்டோம் என்ற மனநிலையில் வருகின்றனர். ஆனால் மலேசியர்கள் அப்படி இல்லை. தினமும் வீட்டுக்குப் போய்விடுவோம் என்ற நினைவிலேயே இருந்துவந்தனர். அதனால்தான் மிகுந்த மனசோர்வில் சிலர் உள்ளனர்,” என்றார் கிட்டத்தட்ட முப்பது மலேசியர்களைத் தமது பாதுகாவல் சேவை நிறுவனத்தில் பணியமர்த்தியுள்ள 46 வயது திரு கேரி ஹாரிஸ்.

பாதுகாப்புச் சேவை, சுகாதாரப் பராமரிப்பு, துப்புரவு, கழிவு நிர்வாகம், கட்டட நிர்வாகம், தளவாடம், போக்குவரத்து என பல அத்தியாவசியச் சேவைகள் வழங்கும் துறைகளில் மலேசியர்கள் பலர் பணியாற்றுகின்றனர்.

சிங்கப்பூரின் உற்பத்தித் துறையிலும், சில்லறை வர்த்தகம், உணவகம் போன்ற சேவைத் துறையிலும் பலர் அங்கம் வகிக்கின்றனர்.

ஏறத்தாழ ஆறு மாதங்களாக சிங்கப்பூரிலேயே தங்கிவரும் இந்த மலேசிய ஊழியர்கள், புதிய இயல்பை ஏற்றுவருகின்றனர்.

உலகையே ஆட்டிப்படைத்துவரும் இந்தக் கிருமித் தொற்று காலத்தில் வெளிநாட்டினரான தங்களை சிங்கப்பூர் மக்கள், முதலாளிகள், அரசாங்கம் அரவணைத்துள்ளதில் பெருமிதமும் கொண்டுள்ளனர் அவர்கள்.

மலேசியாவின் ஜோகூர் பாருவில் தங்கி வந்த பெரும்பாலானோருக்கு சிங்கப்பூரில் வாடகைக்கு வீடோ ஓரறையோ எடுப்பது கூடுதல் செலவு. இருப்பினும் வருமானத்தை நிலைபெறச் செய்ய அதுவே வழி என்பதையும் அவர்கள் ஏற்றுள்ளனர்.

இங்கு தங்கியிருப்பது மலேசியர்களுக்கு கூடுதல் செலவாக இருக்கும் அதேநேரத்தில், அதனால் இங்கு சிலருக்கு வருவாய் கிடைக்கிறது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் பொது அறை ஒன்று சராசரியாக $600 முதல் $700 வரை மாத வாடகையை முன்பு பெற்றது. தற்போது அந்தக் கட்டணம் $800 முதல் $900 ஆகியுள்ளது என்றார் சொத்துச் சந்தை முகவர் குமாரி அனிதா.

“ஆயிரக்கணக்கான மலேசியர்களுக்கு உடனடியாக வீடமைப்பு வசதி தேவை உள்ள காரணத்தால் வாடகை உயர்ந்துள்ளது,” என்றார் அவர்.

ஊழியர்களுக்குச் சிரமம் என்றாலும் வேலையிழப்பு, வருமானக் குறைவு ஏற்பட்டு வரும் இக்கட்டான இன்றைய சூழலில் சிங்கப்பூரர்கள் சிலர் தங்களின் வீட்டின் ஓரறையை வாடகைக்கு விட்டு வருவாய் தேடுகின்றனர். சுற்றுப் பயணிகள் இல்லாமல் வருமானம் இழந்த ஹோட்டல்களும் மலேசிய ஊழியர்களுக்கு அறைகளை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!