டாக்சி ஓட்டிகளுக்கு $112 மி. கூடுதல் உதவி

டாக்சி ஓட்டிகள், டாக்சி நிறுவனங்கள், தனியார் வாடகை வாகன நிறுவனங்களுக்குக் கூடுதலாக $112 மில்லியன் நிதியுதவியை அரசாங்கம் அறிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் $77 மில்லியனும் மார்ச்சில் $120 மில்லியனும் உதவித் தொகையாக அறிவிக்கப்பட்டது.

இந்தச் சிரமமான காலகட்டத்தில் இருந்து மீள்வதற்காக டாக்சி ஓட்டிகளுக்கும் டாக்சி நிறுவனங்களுக்கும் கைகொடுக்க இந்தக் கூடுதல் உதவி அறிவிக்கப்பட்டு உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது.

இந்த $112 மில்லியனில் $106 மி. சிறப்பு நிவாரண நிதிக்குச் சென்றுவிடும். அத்திட்டம் மேலும் ஆறு மாதங்களுக்கு, அதாவது 2021 மார்ச் வரை நீட்டிக்கப்படுகிறது.

இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு நிவாரண நிதித் திட்டம் மூலம் டாக்சி ஓட்டிகளுக்கு மாதந்தோறும் $300 வழங்கப்பட்டு வருகிறது. இப்போது பலனடைந்து வருவோருடன் மேலும் 40,000 டாக்சி ஓட்டிகள் அத்திட்டத்தின்மூலம் பலன்பெறத் தகுதிபெறுவர் என எதிர்பார்க்கப் படுகிறது.

டாக்சி ஓட்டிகளுக்கான வாடகைக் கழிவை நீட்டிப்பதாக டாக்சி நிறுவனங்களும் உறுதியளித்துள்ளன. அதன் மதிப்பு $29 மி. எனத் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், டாக்சி ஓட்டிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையில், அடுத்த ஆண்டு செப்டம்பர் இறுதி வரை அவர்கள் விநியோகச் சேவையில் தொடர்ந்து ஈடுபட அனுமதிக்கப்படுவர்.

இதனிடையே, தனியார் வாடகை கார் ஓட்டுநருக்கான தொழில்முறை உரிமம் (பிடிவிஎல்) பெறுவதற்கான தகுதி விதிகளிலும் ஆணையம் மாற்றங்களைச் செய்துள்ளது.

இனி குறைந்தது 30 வயதை எட்டிய சிங்கப்பூரர்கள் மட்டுமே புதிதாக அந்த உரிமம் பெற விண்ணப்பிக்க முடியும். இந்தப் புதிய விதிகள் உடனடியாக நடப்பிற்கு வருகின்றன.

நேற்று மாலை 5.30 மணிக்கு முன்பாக ‘பிடிவிஎல்’ உரிமம் கோரி வந்த விண்ணப்பங்கள் பழைய தகுதி விதிகளின்கீழ் பரிசீலிக்கப் படும் எனத் தெரிவிக்கப்பட்டது. பழைய விதிகளின்கீழ், 21 மற்றும் அதற்கு மேல் வயதுடையவர்கள், ஈராண்டு காலமாக ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால் ‘பிடிவிஎல்’ உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று இருந்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon