விடுதிகளில் ஊழியர்களுக்கு கைகொடுத்த அதிகாரிகளின் கடமை நிறைவு

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் இவ்வாண்டு தொடக்கத்தில் காட்டுத்தீ போல கொவிட்-19 கிருமித்தொற்று பரவியதை மறந்திருக்க மாட்டோம்.

அந்த நேரத்தில் வெளிநாட்டு ஊழியர்களையும் அவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளையும் கவனித்துக்கொள்ள ஏப்ரல் முற்பாதியில் பல அரசாங்க அமைப்புகளை உள்ளடக்கிய பணிக்குழு அமைக்கப்பட்டது.

இந்த அமைப்பிற்கு ஆதரவளிக்க 1,100க்கும் மேற்பட்ட உள்துறைக் குழு அதிகாரிகள் முன்வந்தனர். 21 தங்கும் விடுதிகளிலும் இரண்டு இதர தங்கும் இடங்களிலும் உள்ள ஏறத்தாழ 160,000 ஊழியர்களின் பாதுகாப்புக்கு இந்த அதிகாரிகள் உதவினர்.

இந்த அதிகாரிகள் நேற்று அதிகாரபூர்வமாக பணிக்குழு பொறுப்பிலிருந்து விலகி, தங்களின் வழக்கமான வேலைகளுக்குத் திரும்பினர்.

மனிதவள அமைச்சின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘உத்தரவாதம், பராமரிப்பு, ஈடுபாடு’ (ஏஸ்) குழு, முந்தைய பணிக்குழுவின் நடவடிக்கைகளை இன்று முதல் முழுமையாக மேற்கொள்ளத் தொடங்கும்.

‘ஐடிஎஃப்’ உறுப்பினராக எஸ்11@பொங்கோல் ஊழியர் தங்கும் விடுதியில் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜுலை 31ஆம் தேதி வரை உதவியவர் அதிகாரி திரு சேக் இஸ்மாயில், 37. சிங்கப்பூர்க் காவல் துறையின் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவில் மூத்த விசாரணை அதிகாரியாக இவர் சேவையாற்றுகிறார். தங்களின் 60களில் இருக்கும் தமது பெற்றோருக்கு, நாள்பட்ட நோய்கள் இருப்பதாகவும் அவர்களுடன் தங்கி வருவதாகவும் குறிப்பிட்டார் திரு சேக். இம்மாதம் 14ஆம் செய்தியாளர் கூட்டத்தில் தமது பெற்றோர் வழங்கிய ஆதரவையும் உதவியையும் நினைவுகூர்ந்த சேக், கண்ணீர் மல்கினார்.

“தொடக்கத்தில் என் பெற்றோர் தயங்கினர். ஆனால் மற்றவர்களுக்கு உதவி தேவைப்பட்டால் நான் முன் நின்று உதவுவேன் என்று அவர்களுக்குத் தெரியும். அவர்களுக்கு மாற்றுக் கருத்துகள் இருந்தாலும் என் முடிவை மாற்றிக்கொள்ளுமாறு சொல்லமாட்டார்கள். ஆனாலும் எனக்கு அவர்களின் நிலைமை புரிந்தது.

“அவர்களிடம் கவலைப்படத் தேவையில்லை என்று பக்குவமாக கூறிப் புரிய வைத்தேன். தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்கள், தரமான செயலாக்க திட்டங்கள் இருப்பதைப் பற்றி விளக்கினேன்,” என்றார் திரு சேக்.

பெற்றோருடன் வாழ்ந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதைத் தவிர்த்ததாக குறிப்பிட்டார் சேக்.

கொள்ளைநோய் பரவத் தொடங்கிய காலத்தில் மனிதவள பற்றாக்குறையால் ஒரு நாளுக்கு 16 மணி நேரம் வரை வேலை செய்ததைச் சுட்டினார் சேக். ஒரு நாள் வேலை ஒரு நாள் ஒய்வு என்று இருந்தபோதும் ஒய்வு நாட்களில் சாப்பிட்டு உறங்குவதற்கே நேரம் செலவாகிவிடும் என்று விளக்கினார்.

கிட்டத்தட்ட 13,000 ஊழியர்கள் தங்கும் ‘எஸ்11’ தங்கும் விடுதியில் இந்தியர்கள், பங்களாதே‌ஷியர்கள், சீன நாட்டவர் எனப் பல இன ஊழியர்களை அணுகி, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து உதவி நல்கும் பொறுப்பில் இருந்தார் திரு சேக்.

பல மொழி பின்னணிகளிலிருந்து வரும் ஊழியர்களிடம் பேசுவது ஒரு பெரிய சவால் என்றும் தமிழ் மொழி தெரிந்தது அச்சூழ்நிலையில் உதவியது என்றும் சொன்னார் திரு சேக்.

“ஊழியர்களுக்கு அதிகாரிகள் மீதுள்ள நம்பிக்கையை வளர்க்கவேண்டியது முக்கியம். அதற்காக அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்வது முக்கியம். தமிழில் பேச முடிந்தது என் அதிர்‌ஷ்டம். தமிழ் பேசும் வெளிநாட்டு ஊழியர்களிடம் என்னால் உரையாட முடிந்தது. மற்ற நாட்டவர்களிடம் பேச, ஆங்கிலம் தெரிந்த சிலரை அணுகி, அவர்களை வைத்து மொழிபெயர்த்து தொடர்புகொண்டேன். நாட்கள் செல்ல செல்ல, ஊழியர்களின் நம்பிக்கையைப் பெற்றேன். மேலும் பல வெளிநாட்டு ஊழியர்கள் அவர்களின் பிரச்சினைகள் குறித்துப் பேச என்னை நாடி வந்தனர்,” என்றார் சேக்.

வங்கிக் கணக்கு திருட்டு மோசடிக்கு பலியான ஊழியர் ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி நினைவுகூர்ந்தார் திரு சேக்.

“யாரோ அவரைத் தொலைபேசியில் அழைத்து ஒரு குறிப்பிட்ட வங்கியிலிருந்து அழைப்பதாக கூறினார். வங்கி கணக்கு, ஒரு முறை கடவுச்சொல் போன்ற விவரங்கள் தேவைப்பட்டதாக சொன்னார். அந்த ஊழியர் அனைத்தையும் தந்தார். வங்கிக் கணக்கிலிருந்த பணம் முழுவதும் களவாடப்பட்டபோது அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை,” என்றார் சேக்.

வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு அனுபவத்தைக் கொண்டு அந்த ஊழியருக்குத் தக்க உதவிகளை வழங்கி, பிரச்சினையைச் சமாளித்தார் சேக்.

இதுபோன்று பல சவால்களை எதிர்நோக்கி வந்த திரு சேக், சில நேரங்களில் வேலைப் பளு அதிகமாக இருந்தாலும் தம்முடன் வேலை பார்க்கும் சக பணியாளர்களின் ஆதரவால் வெற்றிகரமாக அவரின் பணியை நிறைவேற்றியதாக குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!