தொடங்கியது வேலை, வந்தது தீபாவளி; உற்சாகத்தில் ஊழியர்கள்

தீபாவளிக்கு 15,11 வயதுகளில் இருக்கும் தமது இரு மகள்களுக்கும் புத்தாடை, நகை வாங்கி ஊருக்கு அனுப்புவார் திரு லட்சுமணன் முரளிதரன். ஊரில் விதவிதமான ஆடைகள் கிடைக்கும் என்றாலும் சிங்கப்பூரிலிருந்து அப்பா வாங்கி அனுப்பும் உடைகளுக்காக மகள்களும் ஆசையுடன் காத்திருப்பார்கள். சிங்கப்பூரில் வேலை பார்க்கும் கடந்த 24 ஆண்டுகாலத்தில் இந்த வழமையிலிருந்து அவர் தவறியதில்லை.

“கடந்த ஆண்டு தீபாவளியை ஊரில் குடும்பத்துடன் கொண்டாடினேன். 500 சிங்கப்பூர் வெள்ளிக்குப் பட்டாசு வாங்கி ஊரில் இருக்கும் எல்லாக் குழந்தைகளுடனும் வெடித்து குதூகலத்துடன் கொண்டாடினேன். அந்த மகிழ்ச்சியான நினைவுகள் எப்போதும் எனக்கு உற்சாகத்தைத் தரும். இந்த ஆண்டும் தீபாவளிக்கு ஊருக்குப் போகக் திட்டமிட்டிருந்தேன். கொவிட் எல்லாத் திட்டங்களையும் நசுக்கிவிட்டது,” என்று சோகத்துடன் கூறினார் திரு முரளிதரன், 46.

தங்கும் விடுதி ஊழியர்கள் தேக்காவுக்கோ, வெளி இடங்களுக்கோ செல்ல இன்னும் அனுமதிக்கப்படவில்லை. வேலையிடத்துக்கும் தங்குமிடத்துக்கும் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

“வழக்கமாக தீபாவளி அன்று காலையில் நண்பர்களுடன் கோயிலுக்குப் போவோம். பிறகு உணவகத்திற்குச் சென்று சாப்பிடுவோம். சேலை, துணிமணி என்று வாங்கி இந்தியாவிற்கு அனுப்புவோம். இம்முறை எதுவும் சாத்தியமில்லை என்பது மனவேதனையைத் தருகிறது,” என்றார் முரளிதரன்.

பாதுகாப்பு நடைமுறைகளுடன் ஊழியர்களைத் தேக்காவிற்கு அழைத்துச் செல்ல தங்கள் முதலாளி, மனிதவள அமைச்சிடம் அனுமதி கேட்டு வருகிறார் என்றும் கொவிட்-19 நிலைமை சீர்பட்டு வருவதால் விரைவில் வெளியில் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளார் எஸ்11 ஊழியர் தங்கும் விடுதியில் குடியிருக்கும் முரளிதரன்.

“கொவிட்-19 சூழ்நிலை பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. பலருக்கும் வேலை தொடங்கி விட்டது எல்லாருக்கும் மனநிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. தன்னம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்று முரளிதரனும் அவரது நண்பர்களும் கூறினர்.

கடந்த ஆறு ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரியும் கட்டுமானத் துறை ஊழியரான திரு பிரம்மதேவன் செல்லையா, 33, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் விமான நுழைவுச்சீட்டுகளின் விலை அதிகமாக இருக்கும் என்பதால் அந்த நேரத்தில் ஊருக்குப் போவதைத் தவிர்ப்பார்.

“விடுப்பு நாட்களையும் பணத்தையும் சேமிப்பதற்காக அடிக்கடி ஊருக்குச் செல்வதில்லை. கோயில் திருவிழா, முக்கிய குடும்ப நிகழ்வுகள் என்றால் செல்வேன். தீபாவளிக்கு வீட்டுக்குப் பணம் அனுப்புவேன். வேலைக்குப் போட காற்சட்டை வாங்குவேன். இந்த ஆண்டு அதுவும் சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன்,” என்றார் சற்று வருத்தத்துடன்.

பல மாத முடக்கநிலைக்குப் பின்னர் மீண்டும் வேலைகள் தொடங்கியிருப்பதுதான் எங்களுக்குத் தீபாவளிக் கொண்டாட்டம் என்று பல வெளிநாட்டு ஊழியர்களும் கூறினர். சிங்கப்பூரர்கள் பலரும் ஜூன் மாதம் முதல் வெளியில் செல்லத் தொடங்கிவிட்டாலும் அண்மைய காலம் வரை பல ஊழியர்கள் தங்கள் தங்குமிட அறைகளிலேயே அடைபட்டுக் கிடந்தனர். ஆகஸ்ட் மாதத்திலிருந்துதான் மெல்ல மெல்ல பெரும்பாலானோர் பணிக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

கொவிட்-19 சூழலால் ஏற்பட்ட மன உளைச்சல்


நடமாட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக ஆறு மாதங்களுக்கும் மேலாக அறையிலேயே முடங்கியிருந்த திரு பிரம்மதேவன் இம்மாதம்தான் வேலைக்குத் திரும்பினார்.

“வேலை நிறுத்தப்பட்டிருந்ததால் பல பிரச்சினைகள். முதல் மூன்று மாதங்களுக்கு மாதம் $300, பிறகு ஒரு மாதம் $100, கடந்த இரண்டு மாதங்களுக்கு மாதத்திற்கு $50 எனக் கிடைத்தது. $300 கிடைத்தபோது குடும்பத்திற்கு சிறிய தொகையையாவது அனுப்ப முடிந்தது. 50 வெள்ளியில் ஒரு மாதத்திற்குத் தேவையான ‘மேகி மீ’, மைலோ, கோபி வாங்குவதே சிரமம். இதில் ஊருக்கு எப்படி பணம் அனுப்புவது. அதனால் என்னைப் போல் பலரும் மன உளைச்சலில் உழன்றனர்,” என்றார் திரு பிரம்மதேவன்.

வேலைக்குப் போக முடியாமல் அறையில் அடைந்துகிடப்பது, வருமானம் இன்மை, கடன் அடைக்க முடியாமல் தள்ளாடுவது, குடும்பத்தைப் பார்க்க முடியாதது போன்ற காரணங்களால் மனஉளைச்சலுக்கு இரையாகியுள்ளனர் சில ஊழியர்கள். அதில் சிலர் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு மோசமான உளைச்சளுக்கு ஆளாகியுள்ளனர்.

ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் சிங்கப்பூரில் ஊழியர்கள் உயிரை மாய்த்துக்கொண்ட அல்லது மாய்த்துக்கொள்ள முயற்சி செய்த சில சம்பவங்கள் நடந்தன.

இயற்கைக்கு மாறான விதத்தில் ஜூலை 24ஆம் தேதி, சிங்கப்பூர் ஊழியர் 37 வயது திரு கோவி. வீராச்சாமி இறந்தார். பெற்றோர், மனைவி, மூன்று வயதில் பெண் குழந்தை, எட்டு மாத ஆண் குழந்தை ஆகிய குடும்ப உறுப்பினர்கள் அவரது வருமானத்தை எதிர்பார்த்து இருந்தனர்.

“வீராச்சாமி மனஉளைச்சலால் உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல் கிடைத்தது. அவர் இறந்து ஏறத்தாழ ஒரு மாதத்திற்குப் பிறகு, என் ஊரைச் சேர்ந்த ராஜகோபால் என்றவரும் சிங்கப்பூரில் இறந்துவிட்டார்,” என்றார் தஞ்சை மாவட்டம், சிவவிடுதி கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமியின் உறவினர் திரு ரெங்கராஜ், 35.

“கடன் கட்ட முடியாத நிலை, வேலையிடத்தில் சிக்கல் என்று ஊழியர்களின் மனசு குழம்பியுள்ளது. சிலர் அதனால் உயிரை மாய்த்துக்கொண்டுவிடுகிறார்கள். அவர்களின் குடும்பம்தான் பெரும் வேதனைக்கு ஆளாகிறது. எங்கள் ஊரில் கணவர் இறந்தபின் மனைவி ஓர் ஆண்டுக்கு வீட்டைவிட்டு வெளியே செல்லமாட்டார். அடுத்த ஆண்டு ஏதாவது விவசாய, கூலி வேலை செய்து இரண்டு குழந்தைகளையும் அவர் வளர்க்கவேண்டும்,” என்று கவலையுடன் சொன்னார் திரு ரெங்கராஜ்.

ஊழியர்களின் மனம், உடல் நல மேம்பாட்டில் மேலும் ஆதரவு வழங்க அரசாங்கம் முயற்சி எடுக்கிறது. ஓய்வு நாட்களில் தங்கும் விடுதிகளைவிட்டு வெளியே செல்ல அவர்களை அனுமதிப்பது பற்றி ஆலோசிப்பதாகவும் அமைச்சர் லாரன்ஸ் வோங் ஆகஸ்ட் மாதம் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!