சுடச் சுடச் செய்திகள்

உலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவு புத்தாக்க மையம் சிங்கப்பூரில்

ஜெர்மனியின் நுண்சில்லு உற்பத்தி நிறுவனமான இன்ஃபினியோன் டெக்னாலஜிஸ் அடுத்த மூன்று ஆண்டுகளில் இங்கு $27 மில்லியனை முதலீடு செய்து, சிங்கப்பூரில் உலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவு புத்தாக்க மையத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.

அதன் சிங்கப்பூர் கிளையில் பணியாற்றும் 2,200 ஊழியர்களில் 1,000க்கு மேற்பட்டோருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து, வரும் 2023ஆம் ஆண்டுக்குள் சுமார் 25 உன்னத செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களில் அவர்களை ஈடுபடுத்த தமது நிறுவனம் இலக்கு கொண்டுள்ளது என்று இன்ஃபினியோன் டெக்னாலஜிஸ்  ஆசிய பசிபிக் நிறுவனத்தின் தலை வரும் நிர்வாக இயக்குநருமான திரு சுவா சீ சியோங் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் இன்ஃபினியோன் டெக்னாலஜிஸ்  ஆசிய பசிபிக் நிறுவனம் கால்பதித்த 50ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் நேற்று பேசிய திரு சுவா, “உலகம் முழுவதும் நிறுவனங்களைக் கொண்டுள்ள இன்ஃபினியோன், சிங்கப்பூரில்தான் அதன் முதலாவது உலக அளவிலான முழுமையான செயற்கை நுண்ணறிவு மையத்தை அமைக்கவுள்ளது.

“செயற்கை நுண்ணறிவு இனி எங்கள் வர்த்தகங்கள் மற்றும் உற்பத்தி செயல்முறைகளில் ஒரு முக்கிய அங்கமாக விளங்கும்,” என்றார்.

கடந்த பத்தாண்டுகளில் அந்நிறுவனம் சிங்கப்பூரில் சுமார் $700 மில்லியனை முதலீடு செய்துள்ளது.

நேற்றைய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான திரு ஹெங் சுவீ கியட், “கொவிட்-19 நெருக்கடி காரணமாக மின்னிலக்கத் தொழில்நுட்பத்துக்கு விரைவாக மாறிக்கொள்ள விழையும் நிறுவனங்களுக்கு, உலகளாவிய பகுதி மின்கடத்தி தொழில்துறைதான் முதுகெலும்பாக இருக்கிறது.

“உலக புகழ்பெற்ற பகுதிமின்கடத்தி பொருட்களைத் தன் கையகத்தே வைத்துள்ள இன்ஃபினியோன், செயற்கை நுண்ணறிவு தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய சிறந்த நிலையில் உள்ளது.

“சிங்கப்பூரின் பகுதி மின்கடத்தி தொழில்துறைக்கு இன்ஃபினியோன் நிறுவனம் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. அது சிங்கப்பூரர்களுக்கு பல நல்ல வேலைகளை உருவாக்கித் தந்துள்ளது,” என்று கூறினார்.

பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் திரு பே சுவான் ஜின்,”தனது உலகளாவிய செயற்கை நுண்ணறிவு புத்தாக்க மையத்தை சிங்கப்பூரில் அமைக்க இன்ஃபினியோன் எடுத்துள்ள முடிவு, சிங்கப்பூருடன் அது கொண்டுள்ள நீண்டகால நட்புக்கு ஒரு மைல்கல்,” என்றார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon