பழம்பெரும் கலைஞர் ‘தங்கக் குரல்’ சுசிலா கிரு‌ஷ்ணசாமி காலமானார்

சிங்கப்பூரின் உள்ளூர் தொலைகாட்சி, வானொலி, மேடை நாடகக் கலைஞர் சுசிலா கிரு‌ஷ்ணசாமி (படம்) இன்று காலை காலமானார். அவருக்கு வயது 87. உடல்நலக்குறைவு காரணமாக கிட்டதட்ட ஒரு மாதமாக டான் டோக் செங் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவரது உயிர் காலை 5 மணியளவில் பிரிந்ததாக அவரது தங்கை திருமதி கமலா தியாகராஜன் கூறினார்.

திருமதி சுசிலாவின் கணவர் திரு கிரு‌‌‌ஷ்ணசாமி 2007ஆம் ஆண்டு காலமானார். தமது 11ஆம் வயதில் 1945ஆம் ஆண்டு வானொலிப் படைப்பாளராக ரேடியோ மலாயாவில் இருந்த அனுபவம் அவருக்கு உண்டு. நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்த பன்முகக் கலைஞரான திரு மதி சுசிலா, சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் நிறுவப்பட்ட காலம் முதல் அதில் முக்கிய அங்கம் வகித் ததோடு சங்கத்தின் தலைவியாகவும் சேவையாற்றினார். வரலாற்று நாடகங்கள், இலக்கிய நாடகங்களில் அவர் நடித்தார்.
தந்தை திரு வேலுவின் வழியில் சிங்கப்பூர் தொலைத்தொடர்புத் துறையில் 1954ஆம் ஆண்டு பணிபுரியத் தொடங்கிய திருமதி சுசிலா, பல வழிகளில் தடம் பதித்த சாதனையாளராக விளங்கினார்.

பணியில் சேர்ந்த அதே ஆண்டு ‘டெலிகாம்ஸ் போர்டு’ ஏற்பாடு செய்த போட்டியில் அவருக்கு ‘மிஸ் கோல்டன் வாய்ஸ்’ எனும் தங்கக் குரல் உடைய பெண் என்ற மகுடம் சூட்டப்பட்டது. செவ்விசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், ஒன்பது வயது முதல் அதில் பயிற்சி பெற்றார்.

வீணை, வயலின், ஹார்மோனியம் என பல இசைக்கருவிகளை வாசிக்கக் கூடிய திறன்பெற்றவர்.

1963ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தொலைக்காட்சி அறிமுகம் கண்டபோது தமிழில் அறிவிப்புகளைச் செய்தவர்களில் திருமதி சுசிலா கிருஷ்ணசாமியும் ஒருவர்.
விமான நிலைய தமிழ் அறிவிப்புகளில் இவரது குரலே ஒலிக்கும் என்பதால் இவருக்கு ‘விமான நிலையத்தின் இனிமையான குரல்’ என்றும் அவரை அடையாளப்படுத்தினர்.
கலை, கலாசாரத்தை ஊக்குவிப்பதில் ஆர்வமிகுந்த திருமதி சுசிலாவுக்கு சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் 1990ஆம் ஆண்டு ‘கலைச்செம்மல்’ விருதையும் 1998ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதையும் வழங்கியது.

1992ல் அவர் தொலைத்தொடர்புத் துறையிலிருந்து ஓய்வுபெற்றார். 2004ஆம் ஆண்டு வசந்தம் ஒளிவழியும் தனது பிரதான விழா நிகழ்ச்சியில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பித்தது.
“கலைத்துறையில் பன்முகம் கொண்ட சுசிலாவின் தமிழ் உச்சரிப்பு அற்புதமாக இருக்கும். தொலைக் காட்சி, வானொலி நடிகர்களை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கத்தின் தூண்களில் அவரும் ஒரு வர்,” என்று கூறினார் அச்சங்கத்தின் முன்னாள் தலைவரும் குடும்ப நண்பருமான திரு ச.வரதன், 86.
சிங்கப்பூர் தமிழ் நாடகத் துறை பெற்ற தலைசிறந்த நடிகைகளில் ஒருவர் திருமதி சுசிலா என புகழாரம் சூட்டினார் முன்னாள் மூத்த செய்தி ஒலிபரப்பாளர் திரு செ.ப. பன்னீர்செல்வம், 72.

“மூத்த தயாரிப்பாளர்கள் பலரின் நாடகங்களில் அவர் நடித்தார். பல நாடகங்களில் தாய் வேடத் தில் வந்தார். நான் எழுதிய வாழ்க்கைப் பாதை நாடகத்திலும் அவர் தாய் வேடத்தில் நடித்தார்,” என்றார் அவர்.

திருமதி சுசிலா கிரு‌‌‌ஷ்ணசாமி யின் மறைவு சிங்கப்பூர் நாடக உலகிற்குப் பேரிழப்பு என்றார் பிரபல வானொலிக் கலைஞர் திரு ரெ.சோம சுந்தரம், 73.

“எனக்கு வசனங்களைச் சொல்லிக் கொடுத்து, எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் அழகாக விளக்கினார்,” என்று தமது முதல் அனுபவத்தைப் பகிர்ந்தார் அவர்.
திருமதி சுசிலாவின் மறைவு மிகுந்த வருத்தம் அளிப்பதாக ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார் பிரபல உள்ளூர் நட்சத்திரம் திரு ச.வடிவழகன். தமிழ் முரசுடன் பேசிய அவர், “இளம் நடிகர்களுக்கு ஊக்குவிப்பு வழங்கிய அவரை சிறு வயது முதலே பார்த்து, ரசித்து வளர்ந்தேன். வயதான காலத்திலும் தமிழ் நாடகத்துறை நிறைய சாதிக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தார்,” என்றார் அவர்.

“தொழில்நுட்பம் இல்லாத அந்தக் காலத்திலேயே வானொலி, தொலைக்காட்சி நாடகங்களில் சிறந்த முறையில் தேர்ச்சி பெறுவது சாதாரண வி‌‌ஷயம் அல்ல. நமக்கெல்லாம் அவர் முன்மாதிரி,” என்றார் திரு சரவணன் அய்யாவு.

மறைந்த திருமதி சுசிலாவின் நல்லுடல் புளோக் 303 ‌ஷுன்ஃபூ ரோடு, #02-52, சிங்கப்பூர் 570303 முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை 4 மணிவரை வைக்கப்பட்டிருக்கும். அதன்பின் அங்கிருந்து கொண்டு செல்லப்படும் நல்லுடல், மாலை 5.45 மணிக்கு மண்டாய் தகனச் சாலையில்
தகனம் செய்யப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!