மியன்மாரில் ராணுவ ஆட்சி: ஓராண்டுக்கு அவசரநிலை பிரகடனம்; ஆங் சான் சூச்சி உட்பட தலைவர்கள் கைது

மியன்மார் ராணுவம் அந்நாட்டில் ஓராண்டிற்கு அவசரநிலையை அமல்படுத்தி இருக்கிறது. முன்னாள் துணை அதிபரான ஜெனரல் மியிண்ட் சுவீ என்பவர் புதிய இடைக்கால அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆங் சான் சூச்சி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவசரநிலை முடிந்த பிறகு நியாயமான, நேர்மையான முறையில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று ராணுவம் அறிவித்துள்ளது.

நாட்டின் நிலைத்தன்மையைக் கட்டிக்காக்க அவசரநிலை அவசியம் என்று ராணுவத்தின் மியவாடி தொலைக்காட்சி வழியாக அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் நடந்த பெரும் முறைகேடுகளைத் தடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டதாக ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

“2020 நவம்பர் 8ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் பல கட்சிகள் போட்டியிட்ட நிலையில், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற பெரும் முறைகேடுகளைத் தடுப்பதில் தேர்தல் ஆணையம் தோற்றுவிட்டது,” என்று ராணுவத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் நிலைத்தன்மையைக் குலைப்பதில் மற்ற கட்சிகளுக்கும் பங்கிருப்பதாகக் குற்றம் சாட்டிய ராணுவம், “சட்டப்படி நிலைமையைச் சீர்செய்ய வேண்டியிருப்பதால் அவசரநிலை பிறப்பிக்கப்படுகிறது,” என்றும் கூறியிருக்கிறது.

அத்துடன், சட்டம், நிர்வாகம், நீதி ஆகிய துறைகளுக்கான பொறுப்பு ராணுவத் தலைமைத் தளபதி மின் ஆங் ஹிலைங்கிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

ஆளும் ஜனநாயக தேசிய லீக் கட்சியைச் சேர்ந்த ஆங் சான் சூச்சி, அதிபர் வின் மைன்ட், மூத்த தலைவர்கள் எனப் பலரும் இன்று அதிகாலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறி ராணுவம் குற்றம் சாட்டி வந்த நிலையில், மியன்மாரில் பதற்றமும் ஆட்சி கவிழ்க்கப்படலாம் என்ற அச்சமும் இருந்து வந்தது.

இதனிடையே, “ராணுவத்தின் நடவடிக்கைகள் நாட்டை மீண்டும் சர்வாதிகாரத்தின்கீழ் தள்ளிவிடும். அதை ஏற்றுக்கொள்ளாது, முழு மனத்துடன் ராணுவப் புரட்சிக்கு எதிராகப் போராட வேண்டும் என வலியுறுத்துகிறேன்,” என்று ஆங் சான் சூச்சியின் பெயரில் ஜனநாயக தேசிய லீக் கட்சி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தேர்தலில் வென்றபின் இன்று முதன்முதலாக நாடாளுமன்றம் கூடவிருந்த நிலையில், அதற்குச் சில மணி நேரங்களுக்குமுன் தலைநகர் நேப்பிடாவில் தொலைத்தொடர்புச் சேவைகளும் தொலைக்காட்சி ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டன.

முக்கிய நகரமான யங்கூனில் நகர மண்டபப் பகுதியை ராணுவ வீரர்கள் ஆக்கிரமித்தனர்.

நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளும் தற்காலிகமாக மூடப்படும் என்று மியன்மார் வங்கியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஜனநாயகத்திற்காகப் போராடியதால் பல்லாண்டுகாலமாக வீட்டுச் சிறையில் அடைபட்டுக் கிடந்தபின், 2015ல் நடந்த பொதுத் தேர்தலில் வென்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார் நோபெல் பரிசு வென்றவரான ஆங் சான் சூச்சி, 75. இதனால் அவர் உலகப் புகழ் பெற்றார்.

ஆயினும், ராணுவ நடவடிக்கைகளால் 2017ல் ராக்கைன் மாநிலத்தில் இருந்து பல நூறாயிரக்கணக்கில் ரோஹிங்யா மக்கள் வெளியேற்றப்பட்டபோது மௌனம் காத்ததால் தமக்கிருந்த நற்பெயருக்கு அவர் களங்கம் தேடிக்கொண்டார்.

1948ல் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற பிறகு, 1962லும் 1988லும் மியன்மாரில் ராணுவப் புரட்சி ஏற்பட்டது.

மியன்மாரில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து உலகின் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த அரசியல் நெருக்கடியில் தொடர்புடைய தரப்பினர் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண்பர் என நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் விரைவில் அங்கு நிலைமை சீரடையும் என எதிர்பார்ப்பதாகவும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

இந்நிலையில், ஜப்பானில் உள்ள மியன்மார் நாட்டவர், மியன்மாரில் இன்று அரங்கேறிய அரசியல் நெருக்கடிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக பேரணியை நடத்தினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!