லிட்டில் இந்தியா ஆர்க்கேடில் உள்ள உணவகத்தில் சுயசேவை 'புஃபே' விருந்து வழங்கியது உட்பட பல பாதுகாப்பு நிர்வாக நடைமுறை விதிமீறல்களுக்காக பனானா லீஃப் அப்போலோ இந்திய உணவகத் தொடர் உணவக நிறுவனத்தின் மீது அடுத்த வாரம் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது.
அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மிகாமல் வாடிக்கையாளர்கள் தங்கள் கடையில் கூடுவதை உறுதிப்படுத்தத் தவறியது, அமர்ந்து சாப்பிடும் வாடிக்கையாளர்களிடையே ஒரு மீட்டர் பாதுகாப்பு இடைவெளியை உறுதிப்படுத்தாதது, சுயசேவை ‘புஃபே’ விருந்து வழங்கியது, அங்கு சாப்பிடும்போது வாடிக்கையாளர்கள் பேச அனுமதித்தது, வாடிக்கையாளர்கள் அங்கு காணொளி பார்க்க அனுமதித்தது போன்றவற்றுக்காக வரும் 17ஆம் தேதி நீதிமன்றத்தில் அந்த உணவகத்தின் மீது குற்றம் சாட்டப்படும்.
கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) (கட்டுப்பாட்டு ஆணை) விதிமுறைகள் 2020ன்கீழ் பல விதிமீறல்களைச் செய்ததாக பனானா லீஃப் அப்போலோ உணவகத்துக்கு எதிராக ஜனவரி 20 அன்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் மாஜிஸ்ட்ரேட் புகார் ஒன்றைப் பதிவு செய்தது.
உணவு, பானக் கடைகள், கடைத்தொகுதிகள் மற்றும் பொது இடங்களில் சீனப் புத்தாண்டு காலகட்டத்தில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய கடந்த வாரத்தில் அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்ததை அடுத்து இந்த புகார் அளிக்கப்பட்டது.
அந்த வாரத்தில் மொத்தம் 12 உணவு, பானக் கடைகள், 102 தனிநபர்கள் விதிமீறலுக்காக தண்டிக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது.
அவற்றில் 6 உணவு, பானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. 5 உணவு, பானக் கடைகளும் 29 தனிநபர்களும் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளை மீறியதற்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு இன்று (பிப்ரவரி 10) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
பூங்காக்கள், கடற்கரைகளில் கொவிட்-19 விதிகளை மீறியதற்காக 73 தனிநபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேம்படுத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளால் சைனாடவுனிலும் கூட்டம் குறைந்திருப்பதாகக் கூறப்பட்டது. இம்மாதம் 5ஆம் தேதி தொடங்கிய விரிவுபடுத்தப்பட்ட கூட்ட கட்டுப்பாட்டு நடைமுறைகள் காரணமாக கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தற்போது 20% கூட்டம் குறைந்திருப்பதாக அமைச்சு தெரிவித்தது.
எண் 200 டர்ஃப் கிளப் ரோட்டில் இருக்கும் ஆஹ் யட் சீஃபுட் உணவகம் இம்மாதம் 6ஆம் தேதி ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த 65 பேரை இரவு உணவு விருந்துக்கு அனுமதித்தது. அவர்கள் மொத்தம் 6 மேசைகளில் அமர்ந்திருந்தனர்.
ரிவர் வேலி ரோட்டில் இருக்கும் ஈஸ்ட் டிரஷர் சீன உணவகம் ஜனவரி 29ஆம் தேதி ஒரே குழுவைச் சேர்ந்த 16 வாடிக்கையாளர்களை இரண்டு மேசைகளில் அமர அனுமதி அளித்தது. அது ஒரு நிறுவனம் ஏற்பாடு செய்த இரவு விருந்து என்பது விசாரணையில் தெரியவந்தது. அந்த நிறுவனத்துக்கும் உணவருந்திய 16 பேருக்கும் முறையே $1,000 மற்றும் $300 (ஒவ்வொருவருக்கும்) அபராதம் விதிக்கப்பட்டது.
விவோசிட்டியில் இருக்கும் கிறிஸ்டல் ஜேட் ஜியான் நான் உணவகம் வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்த 16 வாடிக்கையாளர்கள் இரண்டு மேசைகளில் உணவருந்த பிப்ரவரி 6 அன்று அனுமதித்தது. விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
இந்த மூன்று உணவு, பானக் கடைகளையும் பிப்ரவரி 19ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

நார்த் பிரிட்ஜ் ரோட்டில் இருக்கும் ஸம் ஸம் உணவகம் வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் ஒரு மீட்டருக்கும் குறைவான இடைவெளியில் அமர்ந்து உணவருந்த பிப்ரவரி 5 அன்று அனுமதி அளித்தது. கடந்த ஆண்டு மே மற்றும் டிசம்பர் மாதங்களில் பாதுகாப்பு விதிமீறல்களுக்காக அந்த உணவகத்துக்கு முறையே $1,000 மற்றும் $2,000 அபராதம் விதிக்கப்பட்டது. அண்மைய விதிமீறலுக்காக அந்த உணவகம் பிப்ரவரி 9 முதல் 18 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
நியூ பிரிட்ஜ் ரோட்டில் இருக்கும் டிங் கார்டன் உணவகம் விதிமீறலுக்காக பிப்ரவரி 6 முதல் 15 வரை மூட உத்தரவிடப்பட்டது. அதே ரோட்டில் இருக்கும் வாங்சி மியூசிக் உணவகம் பிப்ரவரி 6 முதல் 25ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
எண் 1 பகோடா ஸ்திரீட்டில் இருக்கும் சுவான் கார்டன் உணவகம், ஜாலான் மெம்பினா மற்றும் அப்பர் கிராஸ் ஸ்திரீட்டில் இருக்கும் ஈட்டிங் ஹவுஸ், தெலுக் ஆயர் ஸ்திரீட்டில் இருக்கும் கிம்ஸ் ஃபேமிலி ஃபூட் கொரியா உணவகம் மற்றும் எண் 72 பகோடா ஸ்திரீட்டில் இருக்கும் சிச்சுவான் உணவகம் ஆகியவற்றுக்கும் விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டது.