முதல் தொகுப்பு மொடர்னா தடுப்பூசி மருந்து இன்று (பிப்ரவரி 17) பிற்பகல் சிங்கப்பூருக்கு வந்து சேர்ந்தது.
கொவிட்-19 பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் நாட்டின் மற்றொரு முன்னேற்றப் படியாக இது கருதப்படுகிறது.
எதிர்பார்க்கப்பட்டதற்கு முன்னதாகவே மொடர்னா கொவிட்-19 தடுப்பூசி சிங்கப்பூருக்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் பிரதமர் லீ சியன் லூங்.
மொடர்னா தடுப்பூசிகளுடன் பெல்ஜியத்தின் ப்ரஸ்ஸல்சிலிருந்து கிளம்பிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஐக்கிய அரபு சிற்றரசுகளின் ஷார்ஜாவில் இடைநின்று, சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்துக்கு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு வந்து சேர்ந்தது. திட்டமிடப்பட்டதற்கு முன்னதாகவே தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளன.
முதல் தொகுப்பு மொடர்னா தடுப்பூசிகள் மார்ச் மாதத்தில் சிங்கப்பூருக்கு வந்து சேரக்கூடும் என இம்மாதம் 3ஆம் தேதி சுகாதார அமைச்சு குறிப்பிட்டிருந்தது.
தற்போது ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி சிங்கப்பூரில் போடப்பட்டு வரும் நிலையில், இங்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டாவது தடுப்பூசி மொடர்னா நிறுவனத்தினுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
கிடைத்துள்ள மருந்தகத் தரவுகளைக் கொண்டு ஆராய்ந்ததில் மொடர்னா தடுப்பூசி 94% திறனுடன் செயல்படுவதாகவும் அதனைப் போட்டுக்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகளைவிட நன்மைகள் அதிகம் இருப்பதாகவும் சுகாதார அறிவியல் ஆணையம் இம்மாதம் 3ஆம் தேதி தெரிவித்தது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில், இந்தத் தடுப்பூசி போட்டுக்கொள்வோரிடையே கொவிட்-19 பரவல் 94% குறைந்திருப்பதை அந்தத் தரவுகள் காட்டின.