வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் குறுகிய கால வர்த்தகப் பயணிகள் தனிமைப்படுத்தப்படாமல் வர்த்தகச் சந்திப்புகளை நடத்த புதிய கனெக்ட்@சாங்கி வசதி திறக்கப்பட்டுள்ளது. இது சிங்கப்பூர் எக்ஸ்போவில் அமைக்கப்பட்டுள்ளது.
கனெக்ட்@சாங்கியை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று அதிகாரபூர்வமாக திறந்துவைத்தார். பல வர்த்தகங்கள் மெய்நிகர் கூட்டங்களுக்கு மாறியுள்ள
போதிலும் சில இடங்களில் நேருக்கு நேர் நடைபெறும் சந்திப்புகளுக்கு ஈடாக அவை இருக்கமுடியாது என்றார் திரு ஹெங்.
“ஒப்பந்தம் செய்யவும் முக்கிய முடிவுகளை எடுக்க நேருக்கு நேரான சந்திப்புகள் தொடர்ந்து முக்கிய இடம் வகிக்கின்றன.
“உறவுகள், பங்காளித்துவம் வலுவடையவும் புதிய வர்த்தக வாய்ப்புகளை ஆராயவும் நேருக்கு நேர் கலந்துரையாடல்கள்அவசியமானவை.
“கொவிட்-19 சூழல் மாறிவரும் நிலையில் தொழில்நுட்பத்தையும் புத்தாக்கத்தையும் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
“இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நம்மை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். கொவிட்-19 சூழலுக்கு முன்பு இருந்த நிலை திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை,” என்றார் திரு ஹெங்.
முதல் கட்டமாக வெளிநாட்டு வர்த்தகப் பயணிகள் தங்குவதற்காக 150 அறைகளுடன் கனெக்ட்@சாங்கி நேற்று திறக்கப்பட்டது.
கொவிட்-19 சூழலிலும் சிங்கப்பூரில் அனைத்துலக வர்த்தகச் சந்திப்புகளைத் தொடர இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 சூழலில் வெளிநாட்டு வர்த்தகப் பயணிகளைத் தனிமைப்படுத்தாமல் வர்த்தகச் சந்திப்புகள் தொடர்ந்து நடைபெற உலகிலேயே முதல்முறையாக இத்தகைய இடம் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகச் சிறிய அறையில் நான்கு பேரும் ஆகப் பெரிய அறையில் 22 பேரும் சந்திப்பு நடத்தலாம்.
கனெக்ட்@சாங்கி இவ்வாண்டு முழுமையாக இயங்கத் தொடங்கும். அப்போது ஒரே நேரத்தில் 1,300 வர்த்தகப் பயணிகள் அதைப் பயன்படுத்தலாம்.
கனெக்ட்@சாங்கி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் புதிய வசதி திறக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் எல்லைகளை வர்த்தகங்களுக்குத் திறந்துவிடுவதே இந்தத் திட்டத்தின் இலக்கு.
இத்திட்டத்தின்கீழ், வர்த்தகப் பயணிகள் அனுமதிக்கப்பட்ட சில இடங்களில் மட்டுமே சந்திப்பு நடத்தலாம்.
சிங்கப்பூரில் இருக்கும் வரை அவர்கள் கனெக்ட்@சாங்கியைவிட்டு வெளியேற முடியாது.
தனிமைப்படுத்தப்படுவதற்குப் பதிலாக வர்த்தகப் பயணிகள் அடிக்கடி கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
நான்கு நட்சத்திர கனெக்ட்@சாங்கி அறையின் விலை $384லிருந்து தொடங்குகிறது. மூன்று வேளை சாப்பாடு, நொறுக்குத் தீனி அடங்கிய குளிர்பதனப் பெட்டி, சோப் மற்றும் ஷாம்பூ போன்ற குளியலுக்குத் தேவையான பொருட்கள், வைஃபை சேவை, கனெக்ட்@சாங்கி- விமான நிலையத்துக்கு இடை
யிலான இருவழி பயணம், கொவிட்-19 மருத்துவப் பரிசோதனைகள் ஆகியவற்றுக்கும் சேர்த்து அறைக்கான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கனெக்ட்@சாங்கியில் தங்க விரும்பும் வர்த்தகப் பயணிகள் விமான நிலையத்தில் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அங்கு அழைத்துச் செல்லப்படுவர். முதல்முறை நடத்தப்படும் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள் வெளிவரும்வரை அவர்கள் அறைக்குள் இருக்க வேண்டும்.
மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர ஏறத்தாழ ஆறு மணி நேரம் எடுக்கும்.

கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு இல்லாதவர்கள் வர்த்தகச் சந்திப்புகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அறைகளில் உள்ளூர், வெளிநாட்டு வர்த்தகர்களுடன் சந்திப்பு நடத்தலாம்.
அப்போது பாதுகாப்பான இடைவெளி விதிமுறை நடைமுறையில் இருக்கும்.
அறையில் வெளிநாட்டு வர்த்தகப் பயணிகள் இருக்கும் இடத்திலிருந்து உள்ளூர் வர்த்தகர்கள் இருக்கும் இடத்துக்கு காற்று போக முடியாதபடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணி
களுக்கும் ஊழியர்களுக்கும் இடையிலான தொடர்பைக் குறைக்க பயணிகளின் உணவு, தேவையான பொருட்கள் ஆகியவை அவர்களின் அறைக்கு வெளியே வைக்கப்படும்.