சிங்கப்பூரில் 60 முதல் 69 வயதுக்கு உட்ப்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி அடுத்த மாத இறுதி வாக்கில் தொடங்கும் என்றும் மற்றவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்றும் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் இன்று (பிப்ரவரி 19) தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கு தடுப்பூசி வந்து சேர்வதில் தடைகள் ஏதும் இல்லாதபட்சத்தில், வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் சிங்கப்பூரில் ஒரு மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கும்.
தற்போதுவரை கிட்டத்தட்ட 250,000 சிங்கப்பூர்வாசிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஏறத்தாழ 110,000 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஏப்ரல்மாதத் தொடக்கம் வாக்கில் மேலும் ஒரு மில்லியன் மக்கள் தங்களது முதல் தவணை தடுப்பூசியை போட்டுக்கொள்வது இலக்கு என்று கொவிட்-19 பரவலைக் கட்டுக்குள் வைக்க அமைக்கப்பட்ட அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் மற்றொரு தலைவரும் கல்வி அமைச்சருமான லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார்.
“அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், மற்ற வயதினருக்கும் மார்ச் மாதத்துக்குப் பிறகு படிப்படியாக தடுப்பூசி போட முடியும்,” என்றார் திரு வோங்.
ஜாலான் புசார் சமூக நிலையத்தில் உள்ள தடுப்பூசி நிலையத்தில் செய்தியாளர்களிடம் இந்தத் தகவலை அமைச்சர்கள் பகிர்ந்துகொண்டனர்.

நேற்று முதல் இயங்கத் தொடங்கியுள்ள அந்த நிலையம் தினமும் காலை 8.30 முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது.
தஞ்சோங் பகார், அங் மோ கியோ சமூக மன்றங்களில் அமைந்துள்ள தடுப்பூசி நிலையங்களில் நடத்தப்பட்ட முன்னோட்ட தடுப்பூசி நடவடிக்கையில் 5,000க்கும் அதிகமான மூத்தோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.
வரும் திங்கட்கிழமை முதல் 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும்.
அந்த வயதினருக்கு, தடுப்பூசி போட பதிவு செய்யுமாறு கோரும் அறிவிப்புக் கடிதங்களை அடுத்த மூன்று வாரங்களில் பெறுவர்.
சிங்கப்பூரில் தற்போது 11 தடுப்பூசி நிலையங்கள் செயல்படுவதாகவும் அடுத்த வாரம் மேலும் 3 நிலையங்கள் சேவையில் சேரும் என்றும் திரு கான் குறிப்பிட்டார்.
அடுத்த மாத மத்தியில் 30 நிலையங்களும் ஏப்ரல் மாத இறுதி வாக்கில் 40 தடுப்பூசி நிலையங்களும் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை ஏற்பட்டால் கூடுதல் எண்ணிக்கையில் தடுப்பூசி நிலையங்கள் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.
முதல் தவணை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட 72 வயது முதியவர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு, தடுப்பூசியால் உடல்நலக் குறைவு ஏற்பட்டதற்கான ஆதாரம் ஏதுமில்லை என்று குறிப்பிட்டார் திரு கான்.
தடுப்பூசியுடன் தொடர்பு இல்லாவிட்டாலும் இத்தகைய சம்பவங்களை கடுமையானதாக எடுத்துக்கொள்வதாகக் குறிப்பிட்ட அமைச்சர், சூழலை மேலும் புரிந்துகொள்ள அத்தகைய நிகழ்வுகளின் தொடர்பில் ஆழமான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார்.
தடுப்பூசி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதன் தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கைகளைத் தெளிவாக்கும் என்றார் திரு கான்.
தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பாக, ஒவ்வாமை இருக்கிறதா, அதன் தன்மை என்ன என்பது போன்ற மருத்துவ நிலை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும்.