“மற்றவர்களைச் சுற்றி வெகுநேரம் இருந்ததால் சகோதரர்களில் சிலருக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. எனவே, களைப்பாறுவதற்கு இது ஒரு சிறந்த இடம்,” என்று தமது தங்குவிடுதியில் உள்ள மெத்திருக்கை (sofa) ஒன்றில் சாய்ந்து அமர்ந்தவாறு திரு ஜெயராமன் திருநாவுக்கரசு, 26, கூறினார்.
தமிழகத்தைச் சேர்ந்த கட்டுமான ஊழியரான இவர், துவாஸ் வியூ பிளேசில் உள்ள தங்குவிடுதியாக மாற்றப்பட்ட தொழிற்சாலையில் மேற்பார்வையாளராகவும் உள்ளார். இந்த விடுதியில் 180 பேர் வசிக்கின்றனர்.
சோஃபா, கம்பளம், திறன் தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகளுடைய சௌகரியமான வரவேற்பறை ஊழியர்களுக்குக் கிடைத்துள்ளது.

தங்குவிடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகளில் உள்ள இடங்களை ஊழியர்களின் வசதிக்காக மேம்படுத்தும் ‘விடுதியிலிருந்து வீடு’ எனும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. ‘டோர்ம் மம்ஸ்’ எனும் தொண்டூழியக் குழு ஒன்று கடந்த ஆண்டு செப்டம்பரில் இத்திட்டத்தைத் தொடங்கியது.
பிரியா மதன் மோகன், 53, என்பவரது யோசனை இது. ‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ எனும் அரசு சாரா அமைப்பின் இயக்கம் ஒன்றின்கீழ் இயங்குகிறது அவரது குழு.

கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவலுக்கு முன்பு நண்பர்கள் சிலரால் ‘டோர்ம் மம்ஸ்’ குழு தொடங்கப்பட்டது. சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் உள்ள கட்டுமானத் தளங்களில் வசிப்போருக்காக தலையணைகள், துணிமணிகள், அன்பளிப்புகள் ஆகியவற்றைச் சேகரிக்கும் முயற்சிகளில் அக்குழு ஈடுபட்டது.
நிதித் துறையில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் துணைத் தலைவராக இருந்த பிரியா, வேலை விடுப்பில் இருந்தபோது ‘அலையன்ஸ் ஆஃப் கெஸ்ட் வொர்க்கர்ஸ் அவுட்ரீச்’ எனும் அமைப்பில் தொண்டூழியம் புரிய முடிவெடுத்தார்.
தங்குவிடுதிகளாக மாற்றப்பட்ட கிட்டத்தட்ட 225 தொழிற்சாலைகளில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக உணவுத் திட்டத்தை அந்த அமைப்பு நடத்த பிரியாவும் அவரது நண்பர்களும் உதவினர்.
கொவிட்-19 பரவல் முறியடிப்புத் திட்டம் நடைமுறையில் இருந்த 10 வார காலகட்டத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உணவுப் பொட்டல விநியோகத்தை அவர்கள் ஒருங்கிணைத்தனர்.
முடக்கநிலையால் தங்குவிடுதிகளைவிட்டு வெளியேற முடியாத ஊழியர்களின் மனஉறுதியை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தபோது பிரியாவுக்கு ‘விடுதியிலிருந்து வீடு’ திட்டத்திற்கான யோசனை எழுந்தது.
அறைகலன்கள், வீட்டு உபயோகச் சாதனங்கள் உள்ளிட்டவற்றை அவ்வப்போது நன்கொடையாக பெற அவரது யோசனை வழிவகை செய்தது. ஃபேஸ்புக் மார்க்கெட்பிளேஸ் போன்ற சமூக வலைத்தளங்களில் பொருள்களை விற்பதற்குப் பதிலாக நன்கொடையாக வழங்குவது பற்றி மக்களின் விருப்பதைக் கேட்டறியவும் பிரியா முனைந்தார்.

‘விடுதியிலிருந்து வீடு’ திட்டத்தின்கீழ் வசதி செய்து தரப்பட்டுள்ள 14 விடுதிகளில் துவாஸ் வியூ ஸ்குவேரில் உள்ள வெளிநாட்டு ஊழியர் ரசூல் முகம்மது அபு பக்கர் சித்திக்கின் விடுதியும் ஒன்று.
கடந்த ஆண்டு ஜனவரியில் பங்ளாதேஷிலிருந்து சிங்கப்பூர் வந்தார் ரசூல், 22. விடுதி மேற்பார்வையாளராகவும் துப்புரவுப் பணிகளிலும் அவர் ஈடுபடுகிறார்.
கிருமிப்பரவல் காரணமாக விடுதிகள் முடக்கப்பட்டதையடுத்து, துவாஸ் பகுதியைவிட்டு அவர் வெளியேறவே இல்லை. ஜூரோங்கில் உள்ள ஜாலான் பாப்பானைத் தாண்டி அவர் வேறெங்கும் சென்றதில்லையாம். இரு வாரங்களுக்கு ஒருமுறை சளி/எச்சில் மாதிரி பரிசோதனைக்காக அவரது நிறுவனம் ஏற்பாடு செய்த வாகனத்தில் ஜாலான் பாப்பானுக்குச் சென்று விடுதிக்குத் திரும்பிவிடுவார்.
ஒவ்வொரு வாரமும் 500 வெளிநாட்டு ஊழியர்கள் வரை லிட்டில் இந்தியாவுக்குச் சென்றுவர அனுமதிக்கும் முன்னோடித் திட்டம் ஒன்றை மனிதவள அமைச்சு அண்மையில் தொடங்கியது. விடுதிகளில் வசிக்கும் திரு ரசூல் உட்பட கிட்டத்தட்ட 300,000
ஊழியர்கள் தங்களுக்கான நேரம் வரும்வரை காத்திருக்க வேண்டும். விடுதிகளில் வசிப்போர் லிட்டில் இந்தியாவுக்குச் சென்று வருவதற்கு முன் விடுதி நடத்துநர்கள் பல்வேறு தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும்.
“சௌகரியம் ஒருபுறம் இருக்க, இந்தத் திட்டம் (டோர்ம் டு ஹோம்) வெளிநாட்டு ஊழியர்களுக்கு உந்துதலைத் தந்தது. அவர்களது நலனில் மற்றவர்களும் அக்கறை கொள்கின்றனர் என்பதை அறிய நேரும்போது அது அவர்களின் மனத்திற்கு இதம் தருகிறது,” என்றார் பிரியா.
