அடுத்த ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் பொருள் சேவை வரியை (ஜிஎஸ்டி) உயர்த்தும் திட்டத்தில் மாற்றம் இல்லை என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வருமான வரி திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், வருவாய்க்கும் செல்வத்திற்கும் இடையிலான ஏற்றத்தாழ்வைக் கவனிக்க எல்லா வகையான தெரிவுகளையும் அரசாங்கம் தொடர்ந்து பரிசீலிக்கும் என்றார்.
சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான ஆதரவும் இந்தப் பரிசீலினையில் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
ஜிஎஸ்டி வரியை உயர்த்துவதற்கான நேரம் குறித்தும் செல்வ வரி விதிப்பு பற்றியும் பல்வேறு உறுப்பினர்கள் அக்கறையுடன் எழுப்பிய கேள்விகளுக்கு திரு வோங் பதிலளித்தார்.
இயோ சூ காங் தனித்தொகுதி உறுப்பினர் யிப் ஹான் வெங், செங்காங் குழுத்தொகுதியைச் சேர்ந்த பாட்டாளிக் கட்சி உறுப்பினர் லூவிஸ் சுவா போன்றோர் அந்த உறுப்பினர்களில் அடங்குவர்.
சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சமூகச் செலவினங்களுக்கான செலவுகள் தொடருவதால் அதற்கேற்ற வகையில் வருவாயை அதிகரிக்க வேண்டிய அவசியத்தில் அரசாங்கம் இருப்பதாகவும் இதனைத் தவிர்க்க இயலாது என்றும் அமைச்சர் வோங் தெரிவித்தார்.
ஜிஎஸ்டியை தற்போதிய 7 விழுக்காட்டிலிருந்து 9 விழுக்காட்டுக்கு உயர்த்த 2018ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த உயர்வு மூலம் எற்படும் தாக்கத்தைச் சமாளிப்பதற்கு உதவ 2020ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் $6 பில்லியன் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, குறைந்த வருவாய் குடும்பத்தினருக்கு அதிக உதவிகள் அதில் இடம்பெற்று இருந்தன.


