வோங்: ஜிஎஸ்டியை உயர்த்தும் திட்டத்தில் மாற்றமில்லை

அடுத்த ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் பொருள் சேவை வரியை (ஜிஎஸ்டி) உயர்த்தும் திட்டத்தில் மாற்றம் இல்லை என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

வருமான வரி திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், வருவாய்க்கும் செல் வத்திற்கும் இடையிலான ஏற்றத்தாழ்வைக் கவனிக்க எல்லா வகையான தெரிவுகளையும் அரசாங்கம் தொடர்ந்து பரிசீலிக்கும் என்றார்.

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான ஆதரவும் இந்தப் பரிசீலனையில் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

ஜிஎஸ்டியை உயர்த்துவதற்கான நேரம் குறித்தும் செல்வ வரி விதிப்பு பற்றியும் பல்வேறு உறுப்பினர்கள் அக்கறையுடன் எழுப்பிய கேள்விகளுக்கு திரு வோங் பதிலளித்தார்.

இயோ சூ காங் தனித்தொகுதி உறுப்பினர் யிப் ஹான் வெங், செங்காங் குழுத்தொகுதியைச் சேர்ந்த பாட்டாளிக் கட்சி உறுப்பினர் லூவிஸ் சுவா போன்றோர் அந்த உறுப்பினர்களில் அடங்குவர்.

சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சமூக செலவினங்கள் தொடருவதால் அதற்கேற்ற வகையில் வருவாயை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் இருப்பதாகவும் இதனைத் தவிர்க்க இயலாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜிஎஸ்டியை 7 விழுக்காட்டிலிருந்து 9 விழுக்காட்டுக்கு உயர்த்து வது பற்றி 2018ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த உயர்வு மூலம் ஏற்படும் தாக்கத்தைச் சமாளிப்பதில் உதவ 2020ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் $6 பில்லியன் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக, குறைந்த வருவாய் குடும்பத்தினருக்கு அதிக உதவிகள் அதில் இடம்பெற்று இருந்தன.

"ஜிஎஸ்டி வரிவிகிதத்தை உயர்த்துவதற்கான காலத்தை முடிவெடுக்க நிதித் தேவை, தற்போதைய பொருளியல் சூழல் போன்றவை உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் அரசாங்கம் தொடர்ந்து பரிசீலிக்கும்," என்று திரு வோங் குறிப்பிட்டார்.

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான உதவிகள், அதிகமான நிவாரணங்கள் மற்றும் செல்வ வரிகள் போன்றவை குறித்து திரு சுவாவின் பரிந்துரைகளுக்குப் பதிலளித்த அமைச்சர், செல்வ வரி ஏற்றத்தாழ்வைக் கவனிக்கவும் சிறிய, நடுத்தர நிறுவனங்களை ஆதரிக்கவும் தேவையான அம்சங்களை அரசாங்கம் பரிசீலிக்கும் என்றார்.

"இருப்பினும் செல்வ ஏற்றத்தாழ்வைக் கவனிக்க சில அம்சங்களை அரசாங்கம் கவனத்துடன் ஆராய வேண்டி உள்ளது. என்ன செய்ய நினைக்கிறோம் என்பதை இப்போது வெளிப்படுத்த இயலாது. இருப்பினும் எல்லா வகையான தெரிவு

களையும் அரசாங்கம் தொடர்ந்து ஆராயும். வருவாய்க்கும் செல்வத்திற்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு, சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான ஆதரவு போன்றவை அந்தப் பரிசீலனையில் இடம்பெறும்," என்றார் திரு வோங்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!