தடைக்காப்பு ஆணையின்கீழ் இருக்கும் மாணவர்களும் ஊழியர்களும் முதல் நாள் செய்த ஆன்டிஜென் விரைவு சோதனையில் (ART) கிருமித்தொற்று இல்லை என உறுதியானால் பள்ளிக்குத் திரும்பலாம். இந்தப் புதிய நடைமுறை இன்று முதல் நடப்புக்கு வருகிறது.
புதிய நடைமுறையின்கீழ், தடைக்காப்பு ஆணை, விடுப்பு அல்லது முன் அனுமதி அடிப்படையில் விடுப்பு ஆகியவை தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, உயர் கல்வி நிலையங்களுக்கு இனிமேல் பொருந்தாது.
கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டுக் கழகமும் புதுப்பிக்கப்பட்ட தேசிய கொவிட்-19, தனிமைப்படுத்தல் நடைமுறைகளை நேற்று வெளியிட்டன.
கிருமித்தொற்றை நிர்வகிக்கும் செயல்முறையை எளிதாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கொவிட்-19 நோயாளிகளுக்கும் அவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்களுக்கும் நெறிப்படுத்தப்பட்ட விதிமுறைகளை நேற்று முன்தினம் அறிவித்தார். அதைத் தொடர்ந்து பள்ளிகளுக்கான நெறிமுறைகளும் புதிப்பிக்கப்பட்டுள்ளன.
தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், மில்லியனியா கல்விக்கழகம் ஆகியவற்றுக்கு விடுப்பு அல்லது முன் அனுமதி அடிப்படையில் விடுப்பு போன்றவற்றை இனிமேல் கல்வி அமைச்சு அளிக்காது.
இன்று முதல், கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ள மாணவர்களுக்கு ஏழு நாள் சுகாதார அபாய எச்சரிக்கை பிறப்பிக்கப்படும்.
அந்த உத்தரவில் உள்ள மாணவர்கள், ஏழு நாட்களும் பள்ளி செல்வதற்கு முன்பு பரிசோதனை மேற்கொண்டால் போதும்.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட அன்று, தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்வதுடன், ஏஆர்டி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கல்வி அமைச்சின் இணையத் தளம் கூறியது.
சோதனையில் கிருமித்தொற்று இல்லையென உறுதியானால், அவர்கள் வழக்கமான நடவடிக்கைகளைத் தொடரலாம். எனினும், அடுத்தடுத்த நாட்களில் கிருமிப் பரிசோதனையை அவர்கள் தொடர வேண்டும்.
தேசிய நெறிமுறைகளின்படி, தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டவர்கள் அல்லது வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவைப் பெற்றவர்கள், தடைக்காப்பு உத்தரவு அல்லது வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவுக் காலம் முடியும் வரை பள்ளிக்குத் திரும்ப அனுமதிக்கப்படமாட்டார்கள்.
சுகாதார அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டவர்கள் இன்று முதல் தங்கள் தேசிய ஆண்டு இறுதித் தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டுக் கழகமும் வெளியிட்ட அறிக்கை கூறியது.
புதிய நெறிமுறைகளின்படி, இந்த மாணவர்கள் தேர்வு நடைபெறும் இடத்திற்குச் செல்லவும் திரும்பி வரவும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். எனினும், தேர்வு எழுதும் விருப்பத்தை தங்கள் பள்ளிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.
மேலும், சுகாதார அமைச்சின் தேர்வு நெறிமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
இதன்படி, சுகாதார ஆபத்து எச்சரிக்கை உத்தரவு விடுக்கப்பட்ட முதல் நாளில் அவர்கள் கிருமிப் பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
பள்ளிக்குச் சென்றதும், அவர்கள் தங்கள் ஏஆர்டி கருவியின் புகைப்படத்தை எதிர்மறை சோதனை முடிவுகளுடன் தேர்வுக் கண்காணிப்பாளர்களிடம் காட்ட வேண்டும். தங்கள் அடையாள அட்டையை 'ஏஆர்டி' சோதனைக் கருவி அருகில் வைத்து படம் எடுக்க வேண்டும்.
அத்துடன், சுகாதார அபாய எச்சரிக்கை உத்தரவில் இருப்பவர்களுக்கான தேர்வு எழுதும் இடங்களில் கடுமையான பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், வேறு இடங்களில் அமர்வது, மூன்று மீட்டர் இடைவெளி கடைப்பிடிக்கப்படுவது, எழுத்துத் தேர்வுகளுக்கான தேர்வு பாணி இருக்கை முதலியவை அடங்கும்.
இதற்கிடையில், மருத்துவ விடுப்பில் உள்ளவர்கள் முழுமையாகக் குணமடைந்துவிட்டால் தேசிய நிலையிலான ஆண்டு இறுதித் தேர்வுகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
எனினும், பிசிஆர் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்ட மாணவர், சோதனை முடிவு தெரியவரும்வரை தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இறுதிச் சடங்குக்கோ அல்லது கடுமையாக நோய்வாய்ப்பட்டவரைப் பார்க்கவோ வெளிநாடு சென்று திரும்பியவர்கள் சிறப்பு ஏற்பாட்டின்கீழ் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
கொவிட்-19 தொடர்பான காரணங்கள் உட்பட, தகுந்த காரணங்களுக்காக தேர்வைத் தவறவிட்டவர்கள், சிறப்புப் பரிசீலனைக்கு விண்ணப்பிக்கலாம்.
அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய, பள்ளிகள் பள்ளி நாள் தொடங்கும்போது உடல் வெப்பநிலை சோதனை, கண்காணிப்பு, பரிசோதனை குறித்த கேள்விகள் போன்றவற்றை மேற்கொள்ளும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.