தீபாவளித் திருநாள் நெருங்குவதை அடுத்து, லிட்டில் இந்தியாவில் கூட்ட நெரிசலைத் தடுக்கும்விதமாக மேம்பட்ட பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிராங்கூன் சாலை - கேம்பல் லேன் சந்திப்பில் பாதசாரிகள் சாலையைக் கடக்குமிடம், இம்மாதம் 29-31 தேதிகளில் மாலை 6 மணியில் இருந்து இரவு 1 மணிவரையிலும் தீபாவளிக்கு முந்திய நாளில் மாலை 6 மணியில் இருந்து இரவு 2 மணிவரையிலும் மூடப்படும் என்று சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் தெரிவித்துள்ளது.
“சுங்கை சாலையிலும் டன்லப் ஸ்திரீட்டிலும் உள்ள மற்ற இரு சாலையைக் கடக்குமிடங்களுக்கு மக்கள் திருப்பிவிடப்படுவர். உச்ச வேளைகளில் லிட்டில் இந்தியாவின் முக்கியப் பகுதிகளில் நெரிசல் ஏற்படாமல் தடுப்பதை இது உறுதிப்படுத்தும்,” என்று கழகம் கூறியது.
காணொளி: சக்தி மேகனா, திமத்தி டேவிட்
அத்துடன், கடைக்காரர்கள் தங்களது பொருள்களை நடைபாதைகளிலும் விற்பனைக்கு வைக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த, அவர்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக கழகம் தெரிவித்தது. அவ்வாறு செய்யும்போது வழிகள் குறுகலாகி, நெரிசல் ஏற்பட நேரிடலாம்.
வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக, சில வணிகர்கள் தங்களது செயல்பாட்டு நேரத்தையும் நீட்டிக்கவுள்ளன. இவ்வாண்டிலும் இரவுச் சந்தை இடம்பெறாது.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, தீபாவளித் திருநாள் கொவிட்-19 சூழலுக்கு இடையே கொண்டாடப்படவுள்ளது.
நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும்.
