கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அதிநவீன அக்னி-5 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
அணுகுண்டுகளைத் தாங்கி, 5,000 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள இலக்கை நிலப்பரப்பில் இருந்து துல்லியமாக தாக்கக்கூடிய அக்னி-5, ஒலியைவிட வேகமாக செல்லக்கூடியது.
நொடிக்கு 8.16 கிலோமீட்டர் வேகத்திலும் ஒரு மணி நேரத்துக்கு 29,401 கிலோமீட்டர் வேகத்திலும் பாயும் திறன் கொண்டது.
ஒடிசா மாநிலத்திலுள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து நேற்று முன்தினம் இந்திய நேரப்படி இரவு 7.50 மணிக்கு அக்னி-5 செலுத்தப்பட்டதாக இந்தியத் தற்காப்பு அமைச்சின் செய்தி தெரிவித்தது.
திட எரிபொருளால் இயங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ள இந்த ஏவுகணை துல்லியமாக இலக்கைத் தாக்கி அழித்தது. சோதனையில் முழு வெற்றி கிடைத்துள்ளதை அடுத்து இந்த ஏவுகணை இந்திய ராணுவத்தில் இணைக்கப்படும் என்று அச்செய்தி கூறியது.
இந்தியத் தற்காப்பு ஆய்வு, மேம்பாட்டு அமைப்பும் (DRDO) பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்டும் இணைந்து உருவாக்கிய அக்னி-5 கிட்டத்தட்ட 50,000 கிலோ எடைகொண்டது. 17.5 மீட்டர் நீளமும் 2 மீட்டர் விட்டமும் கொண்டது.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவிவரும் எல்லைப் பிரச்சினையால் இருநாடுகளும் எல்லைகளில் படைகளைக் குவித்து வைத்துள்ளன. இச்சூழலில் இந்தியாவின் இந்த ஏவுகணைச் சோதனை முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. சீனாவின் எந்தப் பகுதியையும் அக்னி-5 ஏவுகணையைக்கொண்டு தாக்கமுடியும்.
சீனா 12,000 கிலோ மீட்டர் முதல் 15,000 கிலோ மீட்டர்வரை தாக்கும் டாங்ஃபெங் - 41 ஏவுகணைகளைக் கொண்டுள்ளது. மேலும் பக்கத்து நாடான பாகிஸ்தானும் அணுவாயுதங்களைப் பெற்றுள்ளநிலையில், இந்தியாவில் அணுவாயுத தற்காப்புத் திறனை அக்னி-5 அதிகரிக்கும் என்று அறியப்படுகிறது.
இருந்தபோதிலும், அணுவாயுதங்களை முதலில் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.