தகுதியுள்ள முப்பது வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்கள் நாளை (நவம்பர் 1) முதல் முன்பதிவின்றி மொடர்னா தடுப்பூசி நிலையத்துக்கு நேரடியாகச் சென்று பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என சுகாதார அமைச்சு நேற்று தனது அறிக்கையில் தெரிவித்தது.
சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால வருகை அட்டைதாரர்கள் போன்றோரில் 30 வயதினரும் அதற்கு மேற்பட்ட வயதினரும் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு முன்னர் ஃபைசர்-பயோஎன்டெக்/கமிர்னட்டி அல்லது மொடர்னா தடுப்பூசியை இருமுறை போட்டி ருந்தால் அவர்களுக்கு இந்தப் புதிய ஏற்பாடு பொருந்தும் என்றும் அமைச்சு கூறியது.
60 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்கள் முன்பதிவின்றி எந்தவொரு தடுப்பூசி நிலையத்துக்கும் நேரடியாகச் சென்று பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்ற ஏற்பாடு தற்போது நடப்பில் உள்ளது. அது 30 வயதுடையவர்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது. மொடர்னா தடுப்பூசி நிலையங்களில் போதுமான அளவுக்கு பூஸ்டர் தடுப்பூசி இருப்பதால், தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.
மேலும், சினோவேக்-கொரோனாவேக் தடுப்பூசி தொடர்பான ஓர் அறிவிப்பையும் நேற்று அது வெளியிட்டது. ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி நிலையத்திற்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நேரடியாகச் சென்று சினோவேக்-கொரோனாவேக் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். இதற்குக் குறைந்த வயதினர் இந்தத் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம் என்பதே அந்த அறிவிப்பு.
பூஸ்டர் தடுப்பூசியின் ஆற்றல் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றை அமைச்சு சுட்டியது.
கொவிட்-19 தொற்றுக்கு எதிரான 70% ஆற்றலையும் மோசமான உடல்நிலை அபாயத்தை 90% குறைக்கும் ஆற்றலையும் பூஸ்டர் பெற்றிருப்பதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. எனவே இதனை அதிகமானோர் விரைவாகப் போட்டுக்கொள்வதை எளிமைப்படுத்த தான் விரும்புவதாக அமைச்சு கூறியது.
மொடர்னா தடுப்பூசி நிலையங்
களின் பட்டியலையும் அது வெளியிட்டது. போன விஸ்தா, ஹோங் கா நார்த், கெபுன் பாரு, பொத்தோங் பாசிர், பொங்கோல் 21, ராடின் மாஸ், தெம்பனிஸ் ஈஸ்ட், உட்லண்ட்ஸ், இயூ டீ ஆகிய சமூக மன்றங்களில் இந்த நிலையங்கள் அமைந்துள்ளன.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி ஏற்பாட்டையும் அமைச்சு விவரித்துள்ளது. விடுதி களில் தங்கியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள், கட்டுமானம், கடல்துறை, உற்பத்தித் துறை போன்றவற்றின் வொர்க் பெர்மிட் ஊழியர்கள் போன்றோருக்கான பூஸ்டர் தடுப்பூசி கால அட்டவணையை மனிதவள அமைச்சு தயாரிக்கும் என்றது அது.