வெளிநாட்டு ஊழியர்களுக்கு நம்பிக்கை தரும் தீபாவளிக் கொண்டாட்டம்

பெரும்பாலான நாள்களில், திரு மதியழகன் கார்த்திகேயனின் உணவில் சோறு, குழம்பு, காய்கறிகள் மட்டுமே இடம்பெற்றிருக்கும்.
ஆனால், தீபாவளித் திருநாளான இன்று கூடுதலாகச் சற்றுப் பணம் செலவிட்டு, ஒன்றரைக் கிலோ நண்டு வாங்கி வந்தார் 38 வயது இந்திய ஊழியரான திரு கார்த்திகேயன்.

வெஸ்ட் லைட் மண்டாய் விடுதியில் உள்ள தமது அறையில் அவரும் உடன் வசிக்கும் சக ஊழியர்கள் மூவரும் தரையில் ஒன்றாக அமர்ந்து, தாங்கள் சமைத்த நண்டு, மீன், ஆட்டிறைச்சியோடு உண்டு மகிழ்ந்து, தீபாவளியைக் கொண்டாடினர்.

இருள் நீங்கி ஒளிபிறக்கும் திருநாளாம் தீபாவளியை நம்பிக்கை அளிக்கும் நன்னாளாகவும் இவர்கள் கருதுகின்றனர்.

westlite_2.jpg

Property field_caption_text
  • வெஸ்ட்லைட் மண்டாய் விடுதியிலுள்ள தங்களது அறையில் தீபாவளி வழிபாட்டில் ஈடுபடும் வெளிநாட்டு ஊழியர்கள். படம்:  ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“சென்ற ஆண்டு தீபாவளியின்போது, நாங்கள் விடுதி அறையிலேயே  முடங்கிக் கிடந்தோம். அதிகமான உணவுப்பொருள்களை வாங்கவும் முடியவில்லை என்பதால் குறைவாகவே சமைத்தோம். ஆனால், இம்முறை அப்படியில்லை. இவ்வாண்டில் எங்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது,” என்றார் திரு கார்த்திகேயன்.

கடந்த ஆண்டு கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக, வெளிநாட்டு ஊழியர்கள் பெரும்பாலும் விடுதி அறையைவிட்டு வேலையிடத்திற்கு மட்டுமே செல்ல முடிந்தது.

ஆனால் இப்போது, விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் அருகிலுள்ள கேளிக்கை நிலையங்களுக்குச் சென்று, தங்களின் நண்பர்களைச் சந்தித்து, ஒன்றாய் உணவருந்த முடிகிறது. ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி போட்டுக்கொண்ட அவ்வூழியர்களில் 3,000 பேர் லிட்டில் இந்தியா சென்றுவர முடிகிறது.

அவ்வாறு செல்வதற்கு முன்னும் பின்னும் அவர்கள் ‘ஏஆர்டி’ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

ஆயினும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதை இருளுக்குப் பின்னே தோன்றும் ஒளியாகப் பார்க்கிறார் திரு கார்த்திகேயன். எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவது தொடர்பில் வெளியாகும் செய்திகளும் இவருக்கு நம்பிக்கையை அளித்துள்ளன.

சிங்கப்பூரில் கடந்த 13 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் இவர், தமிழ்நாட்டில் வசிக்கும் தம் பெற்றோரைக் கடந்த ஆறாண்டுகளாகப் பார்க்கவில்லை.

“அவர்களைப் பிரிந்திருப்பது வேதனை தருகிறது. விரைவில் அவர்களை நேரில் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்,” என்றார் திரு கார்த்திகேயன்.

அடுத்த ஆண்டு சீனப் புத்தாண்டின்போது, இன்னும் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவிடும் என்றும் அதற்கு மேலும் முகக்கவசம் அணியத் தேவையிராமல் போகலாம் என்றும் இவர் நம்பிக்கையுடன் சொன்னார்.

வெஸ்ட்லைட் மண்டாய் விடுதியில் இவரைப்போல் 4,000 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கியுள்ளனர்.

விடுதி நடத்துநரான செஞ்சுரியன் நிறுவனம், தீபாவளியை ஒட்டி வெளிநாட்டு ஊழியர்களுக்காகப் பல நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. 

அந்நிறுவனம் நடத்திவரும் ஒன்பது விடுதிகளில் வசிக்கும் 28,000 ஊழியர்களுக்கு மொத்தம் $750,000 மதிப்பில் அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன. ‘டார்ட்ஸ்’ போன்ற விளையாட்டுகளிலும் அவர்கள் பங்கேற்றனர்.

westlite_3.jpg

Property field_caption_text
  • தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெஸ்ட்லைட் மண்டாய் விடுதிவாசிகள் அனைவர்க்கும் அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விடுதிகளில் முழுநிறைவு தரும் சூழல் இல்லையென்றாலும் அது மேம்படும் என்று நம்பிக்கை கொண்டுள்ள திரு கார்த்திகேயன், எல்லாரையும் பாதுகாப்பாக வைத்திருக்கவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதை உணர்ந்துள்ளதாகவும் சொன்னார்.

“மற்ற நாடுகளை ஒப்பிட, சிங்கப்பூர் மேம்பட்ட நாடு. ஏனெனில், இங்கு தடுப்பூசிகளும் மருந்தும் கிடைக்கின்றன. ஊழியர்களில் சிலர் மூன்றாவது தடுப்பூசியும் (பூஸ்டர்) போட்டுவிட்டனர்,” என்றார் இவர்.

“இன்னும் பல கட்டுப்பாடுகள் இருப்பதால் நாங்கள் 100% மகிழ்ச்சியுடன் இல்லை. ஆனால், சென்ற ஆண்டைக் காட்டிலும் இம்முறை அதிக மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறோம்,” என்றும் இவர் சொன்னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!