நாடு திரும்பும் உள்ளூர்வாசிகள், நீண்டகால விசா வைத்திருப்போர்
வெளிநாடுகளில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர், சிங்கப்பூர் திரும்புமுன் தடுப்பூசிச் சான்றிதழைத் தங்களது மின்னணுச் சுகாதார உறுதிமொழி அட்டையில் பதிவேற்றம் செய்யும்படி குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் ஊக்குவிக்கிறது.
அந்த உறுதிமொழி அட்டையானது மின்னணு எஸ்ஜி வருகை அட்டையின் ஒரு பகுதி என்று ஆணையம் நேற்று வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
கொரோனா தடுப்பூசிச் சான்றிதழைப் பதிவேற்றம் செய்வது, அவர்களது கொவிட்-19 தடுப்பூசி ஆவணம் தானாகவே அனுப்பப்பட்டு, அது 'ஹெல்த்ஹப்' அல்லது 'டிரேஸ்டுகெதர்' செயலியில் தோன்ற வகைசெய்யும் என்று ஆணையம் தெரிவித்தது.
அதனுடன், விரைவான குடிநுழைவு அனுமதிக்கு ஏதுவாக சிங்கப்பூர் வந்திறங்கியதும் அவர்கள் தானியக்கத் தடங்களைப் பயன்படுத்தவும் அது அனுமதிக்கும் என்றும் அது கூறியது.
"அப்பயணிகளின் தடுப்பூசிச் சான்றிதழ்களைக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் நேரில் சரிபார்க்க வேண்டியதில்லை என்பதால் வருகைக் குடிநுழைவு முகப்புகளில் அனுமதி பெறுவது விரைவாகும்," என்று ஆணையம் தெரிவித்தது.
வெளிநாடுகளில் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான மின்னிலக்கச் சான்றிதழை இங்கு வருமுன் பதிவேற்றம் செய்யாதோர், அச்சான்றிதழை முகப்பு அதிகாரிகளிடம் காட்டி, குடிநுழைவு அனுமதி பெற வேண்டும் என்றும் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், அதற்கான சான்றிதழை மின்னணுச் சுகாதார உறுதிமொழி அட்டையில் பதிவேற்றம் செய்ய வேண்டியது இல்லை. அவர்களது தடுப்பூசி ஆவணங்கள் தானாகவே ஆணையத்தின் குடிநுழைவுக் கணினி அமைப்பிற்கு அனுப்பப்பட்டிருக்கும்.
"அவர்கள் இங்கு வந்திறங்கியபின் குடிநுழைவு அனுமதி பெற தானியக்கத் தடங்களைப் பயன்படுத்தலாம்," என்று ஆணையம் தெரிவித்தது.
பயணிகளின் வருகை அதிகரித்து இருப்பதையடுத்து இந்நடவடிக்கை இடம்பெறுகிறது.
இம்மாதம் 9ஆம் தேதிவாக்கில், தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தில் 12 நாடுகள் இடம்பெற்றிருக்கும் என்று ஆணையம் குறிப்பிட்டது.
'இ-பாஸ்' படிப்படியாக அறிமுகம்
வெளிநாட்டுப் பயணிகளுக்கு மின்னணு முறையில் வருகை அனுமதி (இ-பாஸ்) அளிப்பது படிப்படியாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன்பின், கைமுறையாகக் கடப்பிதழ்களில் ஒப்புதல் முத்திரை இடும் நடைமுறை முடிவிற்கு வரும்.
பயணிகள் குறிப்பிட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு 'இ-பாஸ்' அனுப்பப்படும்.
சிங்கப்பூரில் அதிகபட்சம் எவ்வளவு காலம் தங்கியிருக்கலாம், அதற்கான கடைசி நாள் என்பன போன்ற வருகை அனுமதி தொடர்பான விவரங்கள் அதில் இடம்பெற்று இருக்கும்.
சென்ற மாதம் 10ஆம் தேதியில் இருந்து சாங்கி விமான நிலையத்தில் 'இ-பாஸ்' முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
வரும் டிசம்பர் மாதத்திற்குள் சிங்கப்பூரின் மற்ற சோதனைச்சாவடிகளிலும் அம்முறை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
அதனுடன், எஸ்ஜி வருகை அட்டை இணையவாயில் வழியாக ஓர் இணையவழித் தகவலறியும் தளமும் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும். அதன்மூலம், வெளிநாட்டுப் பயணிகள் தங்களது 'இ-பாஸ்' தொடர்பான விவரங்களை மின்னிலக்க முறையில் மீட்டெடுக்கலாம்.
இடைப்பட்ட காலத்தில், தங்களது 'இ-பாஸ்' தொடர்பில் ஏதேனும் கேள்விகள் இருந்தால் வெளிநாட்டுப் பயணிகள் 6214 8427 என்ற ஆணையத்தின் பிரத்தியேக நேரடி அழைப்பு எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
இதனிடையே, கொவிட்-19 தொற்று அபாயம் அதிகமுள்ள நாடுகள், பகுதிகளிலிருந்து வரக்கூடிய பயணிகளைக் கையாண்டு வரும் சாங்கி விமான நிலைய நான்காம் முனையத்தில் அதிகாரிகளுடன் கூடிய குடிநுழைவு முகப்புகள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு உள்ளன. பயணிகளின் நுழைவு அனுமதியை அதிகாரிகள் மதிப்பீடு செய்யுமுன், பயணிகளே தங்களது கடப்பிதழ்களை வருடும் வகையில் அவை மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன. கைரேகைக்குப் பதில் கருவிழி, முக அடையாளங்களைச் சரிபார்க்கும் முறைக்கு மாறிவிட்டதாலும் கொவிட்-19 பரவும் அபாயம் குறைகிறது.