சிரமத்தில் உள்ள மாணவர்கள் பள்ளிப்படிப்பைத் தொடருவதில் உதவ கல்வி அமைச்சு முன்னோடித் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. பள்ளிக்குப் பிந்திய ஆதரவு மற்றும் மாற்றியமைக்கப்படக்
கூடிய விடுமுறைத் திட்டங்கள் போன்றவை இதற்குக் கைகொடுக்கும்.
அடுத்த சில ஆண்டுகளில் இத்தகைய ஆதரவு சுமார் 100 தொடக்கப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. இவ்வாறு விரிவாக்கம் செய்வதன் மூலம் கிட்டத்தட்ட 13,000 மாணவர்கள் பயனடைவார்கள் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் தங்களது தொடக்கப் பருவத்தில் சந்திக்கும் ஏற்றத்தாழ்வைக் குறைக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த விரிவாக்கம் அமைவதாகவும் அவர் சொன்னார்.
'மேம்படுத்தப்பட்ட பள்ளி வளங்கள் அதிகரிப்புத் திட்டம்' என்று அறியப்படும் இது 2019ஆம் ஆண்டு முதல் 23 பள்ளிகளில் முன்னோடித் திட்டமாக நடை
முறைப்படுத்தப்பட்டது.
அதன்மூலம் ஆண்டுதோறும் 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது படிப்பையும் வருகையையும் தொடர ஆதரவு பெற்று வருகின்றனர்.
இனி ஒவ்வொரு பள்ளியிலும் கூடுதலாக நான்கு முதல் ஐந்து ஆசிரியர்கள் வரை இத்திட்டத்தில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அடுத்த ஆண்டு மேலும் 24 பள்ளிகளுக்கு ஆதரவு நீட்டிக்கப்படும்போது இந்த நடைமுறை செயல்படுத்தப்படும் என்றும் கல்வி அமைச்சு நேற்று கூறியது.
2020 ஜனவரி முதல் சிங்கப் பூரின் நான்கு வட்டாரங்களில் 300க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாண வர்களுக்குப் பயனளிக்கும் சமூக மேம்பாடு முன்னோடித் திட்டமும் புதிய மாற்றம் பெற உள்ளது.
கல்வியாளர்களையும் சமூகப் பங்காளிகளையும் பாராட்டும் மெய்நிகர் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய திரு லீ, முன்னோடித் திட்டத்தின் பலன் ஊக்கு விப்பாக அமைந்துள்ளது என்றும் மாணவர்களின் வருகையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
"அதிகமான தொடக்கப் பள்ளி மாணவர்கள் அவர்களது பள்ளிக்கூடத்தின் மாணவர் பராமரிப்பு நிலையத்தில் சேர்ந்துள்ளனர்.
"அதேநேரம், முன்னோடித் திட்டத்தில் இடம்பெற்றுள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் தங்களது பள்ளித்தோழர்களுடன் இணைந்து பாடங்களைச் சிறப்பாகச் செய்கிறார்கள்," என்று பிரதமர் குறிப்பிட்டார்.
"சுதந்திரம் அடைந்தது முதல் மக்களின் முன்னேற்றத்தைத் திறம்படச் செய்து வரும் சிங்கப்பூர், வசதிகுறைவான சூழலில் வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளின் முன்னேற்றத்திற்குச் செய்யப்பட வேண்டியவை நிறைய உள்ளன. இது ஒரு முற்றுப்
பெறாத பணி.
"வசதியுள்ளவர்கள், வசதி குறைவானவர்கள் என்பது எல்லாத் தலைமுறையிலும் உள்ளது. ஒவ்வொரு தலைமுறையினரிடத்திலும் காணப்படும் வறுமை, வச தி குறைவு போன்றவற்றை ஒழிப்
பதில் சிங்கப்பூர் தொடர்ந்து உறுதியாக உள்ளது," என்றார் திரு லீ.
வசதிகுறைந்த மாணவர்களுக்கான திட்டம் விரிவடைகிறது