நாடாளுமன்றக் கட்டடத்திற்கு முன் ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ந்த சாலை விபத்து காரணமாக ஐந்து பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
நார்த் பிரிட்ஜ் ரோடு-பார்லிமெண்ட் பிளேஸ் சந்திப்பில் காலை 8.15 மணியளவில் நிகழ்ந்த விபத்தில் நீலநிற ஹோண்டா, கறுப்புநிற பிஎம்டபிள்யூ ஆகிய வாகனங்கள் சம்பந்தப்பட்டு இருந்தன.
ஹோண்டா காரை 12க்கும் மேற்பட்டோர் ஒரு பக்கமாகத் தூக்குவதைக் காட்டும் படங்கள் 'வாட்ஸ்அப்'பில் பரவின. மேலும் சிலர், சாலையில் விழுந்து கிடந்தவர்கள் மீது கவனம் செலுத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக ஐவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பேச்சாளர் கூறினார்.
காயமடைந்தவர்களில் இருவர் ஓட்டுநர்கள் என்றும் அந்த ஆடவர்களில் ஒருவரின் வயது 51, மற்றவரின் வயது 59 என்றும் போலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மற்ற மூவரும் வாகனங்களில் பயணம் செய்தவர்கள்.
அவர்கள் 28 வயதுக்கும் 61 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அந்த ஐவரும் சுயநினைவுடன் இருந்தனர்.
ஹோண்டா கார் தனியார் வாடகை வாகனம் எனப் பதிவு செய்யப்பட்டிருந்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' தெரிவித்தது. அதன் இடது பக்கம் பலத்த சேதமடைந்து இருந்ததையும் பிஎம்டபிள்யூ வாகனத்தின் முன்பக்கம் சேதமடைந்ததையும் இச்சம்பவத்திற்குப் பின்னர் எடுக்கப்பட்ட படங்கள் காட்டின. விசாரணை தொடர்கிறது.