வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தேவைக்கு ஏற்ப கட்டித்தரப்படும் (பிடிஓ) வீடுகளுக்கான தேவை கடந்தாண்டில் 70 விழுக்காடு கூடியுள்ளது. 2020ல் பிடிஓ வீடுகளுக்கு 87,800 விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒப்பிட, 2019ல் 51,400 பிடிஓ விண்ணப்பங்களும் 2018ல் 38,500 விண்ணப்பங்களுமே செய்யப்பட்டுள்ளன.
திருமணம், குடும்பம் அமைத்தல் அதிகரித்ததும், பல தலைமுறையினர் சேர்ந்து வாழும் வழக்கம் குறைந்து வருவதும் தேவை அதிகரிப்புக் காரணம் என வீவக நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
எனினும், தேவையை ஈடு செய்யும் அளவுக்கு பிடிஓ வீடுகள் விற்பனைக்கு வரவில்லை. விற்பனைக்குத் தயாராக இருக்கும் வீடுகளின் எண்ணிக்கைக்கும் தேவைக்கும் இடையிலான இடைவெளி கடந்த மூன்று ஆண்டுகளாகக் கூடியுள்ளது.
குறிப்பாக, சென்ற ஆண்டில் 16,800 பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன. 2016ஆம் ஆண்டில் 14,600 வீடுகளும் 2018ஆம் ஆண்டில் 15,800 வீடுகளும் விற்பனைக்கு விடப்பட்டன.
முதிர்ச்சி அடைந்த குடியிருப்புப் பேட்டைகளிலும் முதிர்ச்சி அடையாத குடியிருப்புப் பகுதிகளிலும் தேவை தொடர்ந்து வலுவாக இருப் பதாக அறிக்கை குறிப்பிட்டது.
திருமணங்களும் குடும்பம் அமைத்தலுமே தேவை அதிகரிப்பின் காரணம் என வீவக கூறியது.
2020 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, கடந்தாண்டு மணம் புரிந்தோர் எண்ணிக்கை 977,000க்கு அதிகம். 2010ல் இந்த எண்ணிக்கை 880,000க்கும் அதிகமாக இருந்தது.
2010லிருந்து 2014 வரையில் 22,400 ஆக இருந்த சிங்கப்பூரர் திருமணங்களின் ஆண்டு சராசரி எண்ணிக்கை, 2015லிருந்து 2019 வரையிலான காலகட்டத்தில் 23,600 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், சமூக நடைமுறைகள், விருப்பங்களில் ஏற்பட்டுள்ள மாற்ற மும் தேவையைப் பெருக்கியுள்ளது.
அதிகமான இளம் தம்பதிகள், ஒற்றையர், வயதுவந்த பிள்ளைகளைக்கொண்ட முதியவர்கள் ஆகியோர், சொந்த வீட்டைப் பெற்றிருக்க விரும்புகின்றனர். இதன் விளைவாக சிறிய குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன என்றது வீவக. ஒற்றையர் வீடு வாங்கவும் ஆதரவு அதிகரிக்கப் பட்டுள்ளதாக அது கூறியது.
ஆனால், அதிக இடவசதி தேவை என்பதால் குடும்பங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார்.
அதேநேரத்தில், கடந்த மூன்றாண்டுகளில் ஒட்டுமொத்த பிடிஓ விண்ணப்பங்களில் ஆறு விழுக் காட்டினர் ஒற்றையர்கள். மேலும், 2019 செப்டம்பர் முதல் தகுதியுள்ள குடும்பங்களுக்கான மாதாந்திர குடும்ப வருமான உச்சவரம்பு $12,000லிருந்து $14,000 ஆகவும் ஒற்றையர்களுக்கு $6,000லிருந்து $7,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது என வீவக சுட்டியது.