மலேசியாவில் தடுப்பூசி போட்டவர்களிடையே கடுமையான கிருமித்தொற்று பாதிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அனைத்து மக்களையும் பூஸ்டர் ஊசிகளைப் போட்டுக்கொள்ள சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் அழைப்பு விடுத்துள்ளார்.
சினோவேக் தடுப்பூசியின் வலிமை விரைவாகக் குறைவதால் பூஸ்டர் ஊசிக்கு மூன்று மாத இடைவெளிபோதும் என்று அவர் விளக்கினார். ஃபைசர், ஆஸ்ட்ரஸெனகா பூஸ்டர் ஊசிகள் 6 மாத இடைவெளியில் போடப்படுகின்றன.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும், உயிர்வாயு தேவைப்படும் நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் சினோவேக் ஊசி போட்டோர்.அண்மைய நோய்த்தொற்று வாரத் தில் (45) சினோவேக் ஊசி போட்ட இத்கைய 165 நோயாளிகள் சுங்கை பூலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒப்பிட, ஃபைசர் போட்ட 24 பேரும், ஆஸ்ட்ரஸெனகா போட்ட எழுவரும் அனுமதிக்கப்பட்டனர் என்று கைரி ஜமாலுதீன் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவில் 4,854 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. இதுவரை 2,586,601 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை பதிவான 41 இறப்பு களுடன் அங்கு மரண எண்ணிக்கை 29,978 ஆகியுள்ளது.