எதிர்நீச்சல் இட்ட 2021: உலகம்

எழுத்து: எம்.கே. ருஷ்யேந்திரன், கங்காதேவி சுப்பிரமணியன், சதீஷ் பார்த்திபன், கி.ஜனார்த்தனன், கவி

கொள்ளைநோயும் பேரிடர்களும் ஆட்சிமாற்றமும் நிறைந்த ஆண்டாக அமைந்தது 2021. கிருமிப் பரவல் அச்சத்தை எதிர்கொண்டு இரண்டு அடி முன்னெடுத்து வைத்த உலகம், மீண்டும் ஆமையின் தன் கூட்டுக்குள் செல்வது போல ஓமிக்ரான் பரவலால் தன்னைச் சுருக்கிக் கொண்டது. 2021ல் உலக அரங்கில் நிகழ்ந்துள்ள குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைப் பார்க்கலாம்:

1. ஓமிக்ரான் எனும் கிருமி சுனாமி

இவ்வாண்டின் இரண்டாவது பாதியில் டெல்டா வகைக் கிருமிப்பரவல் அச்சத்திலிருந்து மெல்ல தலைதூக்கி, கட்டுப்பாடுத் தளர்வுகள், தடுப்பூசிப் பயணப் பாதைகள், மீண்டு வரும் பொருளியல் என உலக நாடுகள் நம்பிக்கையுடன் செயல்படத் தொடங்கின. ஆனால் அவற்றை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது ஓமிக்ரான் வகைக் கிருமியின் பரவல். தென் ஆப்பிரிக்காவில் நவம்பர் இறுதியில் அடையாளம் காணப்பட்ட ஓமிக்ரான், இன்று பல நாடுகளில் பெரும்பாலான கொவிட்-19 தொற்றுச் சம்பவங்களுக்குக் காரணமாகியுள்ளது. ஓமிக்ரான் பாதிப்பு டெல்டாவைவிட மிதமானது என்று தற்போதைய ஆய்வுகள் கூறினாலும் பல நாடுகளில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மீண்டும் கட்டுப்பாடுகளையும் பயண நிறுத்தங்களையும் அறிவித்துள்ளன அரசாங்கங்கள். நான்காவது தடுப்பூசிக்கும் அவை தயாராகி வருகின்றன. அதே நேரம் ஃபைசர், மெர்க் போன்ற நிறுவனங்கள் தயாரித்துள்ள கொவிட்-19 மாத்திரைகளையும் பணக்கார நாடுகள் விறுவிறுவென்று வாங்கி வருகின்றன.

2. மியன்மார் ஆட்சிக்கவிழ்ப்பு

பிப்ரவரி 1 அன்று, மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பு நாட்டை இருட்டில் ஆழ்த்தியது. கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் முறைகேடு இருந்ததாகக் கூறி ராணுவம் அதிகாரத்தைத் தன்வசமாக்கிக் கொண்டது. அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சியும் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்களும் தடுத்து வைக்கப்பட்டார். அன்றாட வாழ்க்கை சிரமமாகி விட்ட நிலையில் மியன்மார் மக்களின் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் தொடர்கின்றன. ஆர்ப்பாட்டங்களில் மாண்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஆங் சான் சூச்சிக்கு தற்போதைக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022ல் முறையான தேர்தல் நடத்தப்படும் என்று ராணுவம் உறுதிகூறுகிறது. ஆனால் மியன்மார் மக்கள் அதை நம்புவார்களா என்பது கேள்விக்குறியே.

3. தலிபான் ஆட்சி; கிருமித் தொற்றைத் தாண்டிய அச்சம்

உலகம் முழுவதையும் கொவிட்-19 பற்றிய அச்சம் ஆட்கொண்டிருந்தாலும் ஆப்கானிஸ்தான் மக்கள் மட்டும் அதையும் தாண்டிய பெரும் கவலையில் வாழ்கின்றனர். அமெரிக்கப் படைகள் வெளியேறியவுடன் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான் அமைப்பினர் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் ஆப்கானிஸ்தான் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது.

குறிப்பாக, பெண்களின் முன்னேற்றமும் சுதந்திரமும் முற்றிலும் பறிக்கப்பட்டது. பெண்கள் படிப்பதற்குத் தடை விதித்தது தொடங்கி, தொலைக்காட்சி நாடகங்களில் பெண்கள் நடிக்கக்கூடாது, குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் பெண்கள் ஆண் துணை இல்லாமல் தனியாக வெளியே செல்லக்கூடாது போன்ற உத்தரவுகள்தான் அதற்கு சாட்சி. அத்துடன் தலிபான் அமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியவுடன், அந்நாட்டிற்கான உலக நாடுகளின் ஆதரவும் நிதி உதவியும் நின்றுவிட்டது. எனவே அந்நாட்டு மக்கள் கொடிய வறுமையில் வாடுகின்றனர்.

4. அமெரிக்கா- புதிய அதிபரும் வரலாறு காணா வன்முறையும்2020 நவம்பரில் நடந்த அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வென்றார். இந்திய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபராத் தேர்வானார். ஆனால் இந்த வெற்றியையும் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்பின் தோல்வியையும் சக்ததுக் கொள்ள குடியரசுக் கட்சியினரால் முடியவில்லை.

டிரம்ப் ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், 2021 ஜனவரி 6ஆம் தேதி வன்முறையில் ஈடுபட்டனர். இதற்கு டிரம்பின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களே கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக இது போன்ற கலவரம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. இந்த வன்முறையில் எட்டு பேர் உயிரிழந்தனர். இவற்றை எல்லாம் மீறி ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், 2021 பிப்ரவரி 20ஆம் தேதி, அமெரிக்காவின் 46வது அதிபராக பதவி ஏற்றார். கமலா ஹாரிஸ், துணை அதிபராக பதவி ஏற்றார்.

5. 85 நிமிடம் நீடித்த அதிபருக்கான அதிகாரம்

நவம்பர் 9 2021 அன்று, அமெரிக்க நேரப்படி காலை 10.10 மணி முதல் அடுத்த சுமார் 85 நிமிடத்துக்கு அமெரிக்க அதிபருக்கான அதிகாரத்தைப் பெற்றார் துணை அதிபர் கமலா ஹாரிஸ். அந்த அதிகாரத்தைப் பெற்ற முதல் பெண் அவர். அதிபர் ஜோ பைடன் வழக்கமான 'கொலோனோஸ்கோபி' எனும் பெருங்குடல் ஆய்வுச் சிகிச்சைக்குச் சென்றதால் அவருக்கு மயக்க மருந்து தரப்பட்டது. அதனால் அதிபரின் அதிகாரம் தற்காலிகமாக திருவாட்டி கமலா ஹாரிசிடம் மாற்றப்பட்டது. அமெரிக்காவின் முதல் பெண், முதல் கருப்பின, முதல் ஆசிய வம்சாவளி துணை அதிபர் என்ற சிறப்பைப் பெற்றவவர் திருவாட்டி ஹாரிஸ்.

6. சுவெஸ் கால்வாயை முடக்கிய கப்பல்

மத்திய தரைகடலையும் செங்கடலையும் இணைக்கும் சுவெஸ் கால்வாய், கடந்த மார்ச் 23ஆம் தேதி முடங்கிப் போனது. ஜப்பானிய நிறுவனத்துக்குச் சொந்தமான எவெர் கிவன் சரக்குக் கப்பல் கால்வாயின் குறுக்கே சிக்கிக்கொண்டு ஆறு நாள் அதே இடத்தில் நின்றது. பன்னாட்டு கப்பல் வர்த்தகத்தின் முக்கிய பாதை சுவெஸ் கால்வாய். வேறு கப்பல்கள் அதைக் கடக்க வழியில்லாததால் உலக நாடுகளில் கப்பல் வர்த்தகமும் பொருள் விநியோகமும் தடுமாறியது.

7. மலேசியாவில் பதவிக்கு வந்த புதிய பிரதமர், பழைய கட்சி

நொடித்துப்போனவர்களில் 2,555 பேர் சிலாங்கூரைச் சேர்ந்தவர்கள் என்று மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் குறிப்பிட்டார். படம்: பெர்னாமா

கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து மலேசியாவில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை ஆட்சிமாற்றத்துக்கு வித்திட்டது. எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்த போதிலும், மலேசிய மாமன்னரின் ஒப்புதலுடன் நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. 2021 ஜனவரி 12ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை அவசரநிலை நீடிக்கும் என்றும் இக்காலகட்டத்தில் நாடாளுமன்றம் கூடாது, தேர்தல்கள் நடத்தப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சியின் 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசரநிலையை எதிர்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அரசியல் நெருக்கடியைச் சமாளிக்க பிரதமர் முகைதீன் யாசின், அம்னோவைச் சேர்ந்த சிலருக்கு தமது அமைச்சரவையில் இடம் அளித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் அரசியல் நெருக்கடியை அதிகரித்து, நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தின.

இதன் எதிரொலியாக மலாய் ஆட்சியாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார் மலேசிய மாமன்னர். இதையடுத்து, நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், திடீர் திருப்பமாக பெரிக்கத்தான் நேசனல் தலைமையிலான ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை அம்னோ கட்சி திரும்பப் பெற்றது. இதனால் பிரதமர் பதவியில் இருந்து முகைதீன் யாசின் விலக நேர்ந்தது. இதையடுத்து புதிய பிரதமராக அம்னோவின் இஸ்மாயில் சப்ரி யாகூப் பொறுப்பேற்றார். எதிர்க்கட்சிகளுடன் புரிந்துணர்வு செய்துகொண்ட அவரது அரசாங்கம் முன்னைய ஆட்சியின் தடுமாற்றத்தை ஓரளவுக்குத் தவிர்த்துள்ளது.

8. மலேசியாவில் நூறாண்டு காணாத பேரிடர்

மலேசியாவில் டிசம்பர் 17 முதல் 19 வரை வழக்கத்தைவிட அதிகமான மழை பெய்தது. சிலாங்கூர், பாஹாங், கிளந்தான், திரங்கானு, மலாக்கா, பேராக், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான் ஆகிய எட்டு மாநிலங்களில் பெருவெள்ளத்தை ஏற்படுத்தியது. நூறாண்டு காணாத பேரிடர் என்று அதிகாரிகள் வருணித்த அந்தப் பெருவெள்ளத்தில் குறைந்தது 48 பேர் மாண்டுவிட்டனர். கிட்டத்தட்ட 70,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். வெள்ளத்தைத் தடுக்கவும் அதன் பாதிப்பைக் குறைக்கவும் அரசாங்கம் ஆவன செய்யவில்லை என்று குறைகூறப்பட்டுள்ளது. ஆனால் மலேசிய மக்கள் ஒன்றுதிரண்டு தங்களால் முடிந்த உதவிகளை சகமனிதர்க்குச் செய்து, வெள்ளத்திலிருந்து மீண்டு வந்துகொண்டிருக்கின்றனர். டிசம்பர் 31ஆம் தேதி நான்கு மாநிலங்களில் கனமழை, வெள்ளத்துக்கான எச்சரிக்கையை அரசாங்கம் விடுத்தது.

9. மனம் திறந்து மனநலன் பற்றி பேசிய பிரபலங்கள்

பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்குரிய பொறுப்புகளிலிருந்து 2020ல் அதிகாரபூர்வமாக விலகிய இளவரசர் ஹேரியும் மேகன் மார்க்கலும் தங்களது அனுபவங்களைப் பற்றி புகழ்பெற்ற ஊடகவியலாளர் ஓப்ரா வின்ஃப்ரியிடம் பகிர்ந்தனர். அரச குடும்பத்தினரால் தாம் அவமதிக்கப்பட்டதாகவும் தமது பிள்ளையின் தோல் நிறம் குறித்து அக்குடும்பத்தில் ஒருவர் புண்படும்படி கருத்துரைத்ததாகவும் மேகன் மார்ச் மாதத்தின்போது கூறினார். 1995ல் இளவசரி டயானா அளித்துள்ள பேட்டிக்குப் பிறகு இந்தப் பேட்டி அரச குடும்பம் தொடர்பிலான ஆகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் மனநலம் பற்றிய விவாதங்களுக்கும் கலந்துரையாடல்களுக்கு இந்தப் பேட்டி வித்திட்டது.

இவ்வாண்டு பிரெஞ்சு டென்னிஸ் பொதுவிருதுப் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்த ஜப்பானிய டென்னிஸ் வீராங்கனை நவோமி ஓசாகா, பின்னர் தமக்கிருந்த மன அழுத்தங்கள் பற்றியும் மனம் திறந்தார். அவரது அனுபவங்கள் பலரை நெகிழ வைத்ததுடன், மனநலன் காப்பதன் அவசியத்தை மீண்டும் உலகத்தாருக்கு மீண்டும் வலியுறுத்தியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!