பிரதமர் லீ சியன் லூங், கொவிட்-19 விதி முறைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளார். அதன்படி, மார்ச் 29 முதல், ஒன்றுகூடும் குழுவில் இடம்பெறுவோர் எண்ணிக்கை 10 என இரட்டிப்பாகிறது. மேலும், வெளிப்புறங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை.
வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களில் 75 விழுக்காடுவரை வேலையிடங்களுக்குச் சென்று பணியாற்றலாம். 1,000 பேருக்கு மேல் ஒன்றுகூடும் பெரிய நிகழ்வுகளில் இடத்தின் கொள்ளளவில் 75 விழுக்காடுவரை பங்கேற்பாளர்கள் இடம்ெபறலாம்.
கொவிட்-19 கிருமித்தொற்றுடன் வாழும் சூழலை நோக்கிய உறுதியான, அதேநேரம் படிப்படியான முன்னேற்றத்தின் ஒரு பகுதி இவை என்று நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது பிரதமர் குறிப்பிட்டார்.
வெளிப்புற தொற்றுப் பரவல் அபாயம் கணிசமாகக் குறைந்து வருவதால் முகக் கவசத்தை வெளியிடங்களில் அணிவது என்பது அவரவர் விருப்பாக ஆக்கப்படும் என்று கூறிய திரு லீ, அதேநேரம் உள்புற இடங்களில் முக்கவசம் அணிவது கட்டாயம் என்பது தொடரும் என்றார்.
"இந்த பெரிய நடவடிக்கைக்குப் பின்னர், நிலைமை சீராகும்வரை நாம் பொறுத்திருப்போம். எல்லாம் நல்லபடியாக நடக்குமானால், நாம் இன்னும் சில தளர்வுகளை மேற்கொள்வோம். இருப்பினும் எந்தவொரு திருப்பத்தையும் சந்திக்க நாம் மனரீதியில் தயாராக இருக்கவேண்டும்," என்றார் பிரதமர்.
கிருமிப் பரவல் என்பது தொடர்ந்து நடைபெறக்கூடியது என்பதால் மற்றொரு அலை வீசக்கூடும் என்று கூறிய அவர், எனவே கட்டுப்பாடுகள் மீண்டும் திரும்பலாம் என்பதை மறுப்பதற்கில்லை என்றார். கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூர் பெரும் திருப்பு முனையை எட்டியிருப்பதால் கட்டுப்பாடு களைத் தளர்த்தக்கூடிய நிலை தற்போது ஏற்பட்டிருப்பதாக திரு லீ விளக்கினார்.
"சிங்கப்பூர் மக்கள்தொகையில் தகுதி யுள்ளோரில் கிட்டத்தட்ட 95 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
"அதேபோல மொத்த மக்கள்தொகையில் 71 விழுக்காட்டினர் பூஸ்டர் என்னும் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்," என்றார் திரு லீ.
ஓமிக்ரான் வகைக் கிருமியால் உரு வான அலை, உச்சத்திற்குச் சென்று தற்போது தணிந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், பலரும் தொற்றுக்கு ஆளாகி மீண்டு வந்திருப்பதால் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக மக்கள்தொகை மாறி இருக்கிறது என்றார்.
10 பேர்வரை ஒன்றுகூட அனுமதி; 75% ஊழியர்கள் வேலையிடங்களுக்குத் திரும்பலாம்; வெளியிடங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை
திருப்புமுனையை எட்டியிருப்பதால் விதிமுறைகளைத் தளர்த்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. நிலைமை சீராகும் வரை பொறுத்திருப்போம். எல்லாம் நல்லபடியாக நடக்குமானால், இன்னும் சில தளர்வுகளை மேற்கொள்வோம். ஆயினும் எந்தவொரு திருப்பத்தையும் சந்திக்க மனரீதியில் நாம் தயாராக இருக்க வேண்டும்.
பிரதமர் லீ சியன் லூங்

