தமிழகத்தின் தஞ்சாவூர் அருகே நேற்று அதிகாலை தேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் மாண்டனர். 15 பேர் காயமடைந்தனர்.
தஞ்சாவூரிலிருந்து 8 கிலோ
மீட்டர் தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் அப்பர் மடத்துக்கான கோயில் உள்ளது. ஆண்டுதோறும் அப்பர் பிறந்த நட்சத்திரமான சதய நட்சத்திர தினத்தில் இங்கே சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
94வது ஆண்டாக நடைபெற்ற திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெறும். வழக்கப்படி நேற்று முன்தினம் இரவு ேதரோட்டம் தொடங்கி, களிமேடு கிராமத்தின் பல்வேறு வீதிகள் வழியாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
நேற்று அதிகாலை 3.15 மணி யளவில் கீழத்தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்த தேர், ஒரு திருப்பத்தில் திரும்பியபோது மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்காரத் தட்டி உரசியது.
இதனால் தேரை இழுத்து வந்த மக்கள் மீதும் சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் 15 வயதுக்குட்பட்ட மூன்று சிறுவர்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.
கிட்டத்தட்ட 50 பேர் தேரிலிருந்து சற்று தள்ளி நின்றிருந்ததால் அதிகமான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.
சில மாதங்களுக்கு முன்னர் அப்பகுதியில் போடப்பட்ட தார் சாலை, விபத்துக்கு முக்கிய காரணம் என்று கிராம மக்கள் கூறினர். பழைய சாலையை பெயர்க்காமல் ஒன்றைரை அடி உயரத்திற்கு சாலை போடப்பட்டதால் பக்கவாட்டில் பள்ளங்கள் ஏற்பட்டதாகவும் திருப்பத்தில் தேர் நிலைதடுமாறி மின்கம்பியில் உரச அந்தப் பள்ளங்கள் காரணமாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் நடந்தது என்ன என்பதை அறிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
சம்பவத்தை அறிந்த இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்தும் பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்தனர்.
இதற்கிடையே, மாண்டோருக்கு நேற்று தமிழக சட்டமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். பின்னர் அவர் தேர் விபத்து நிகழ்ந்த களிமேடு கிராமத்திற்குச் சென்றார். உயிரிழந் தோரின் உடலுக்கு மரியாதை செலுத்திய அவர், மாண்டோரின் குடும்பத்தாருக்கு நிவாரண உதவி அளித்து ஆறுதல் கூறினார்.

