மலேசியாவின் 10வது பிரதமராக அன்வார் இப்ராகிம் பதவி ஏற்கிறார்

பக்கத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவர் அன்வார் இப்ராகிம் மலேசியாவின் 10வது பிரதமராக இன்று வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு பதவி ஏற்கிறார்.

இதன்மூலம் பிரதமராக இவரது 24 ஆண்டுகால காத்திருப்பு ஒரு முடிவுக்கு வருகிறது.

மலேசியாவின் ஒன்பது மாநில மன்னர்களைச் சந்தித்த பிறகு மாமன்னர் இந்த முடிவை எடுத்ததாக தேசிய அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

“மன்னர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர், மலேசியாவின் 10வது பிரதமராக அன்வார் இப்ராகிமை நியமிக்க மாமன்னர் ஒப்புதல் அளித்தார்,” என்று அரச தலைமை அதிகாரி ஃபாட்லி சம்சுதீன் இன்று வியாழக்கிழமை பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

கடந்த சனிக்கிழமை நடந்த பொதுத் தேர்தலில் எந்தவொரு கூட்டணிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் மலேசியாவில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தது.

அதையடுத்து, கூட்டணிகளைத் தாண்டிய ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க மாமன்னரின் பரிந்துரையைப் பெரும்பாலான கட்சிகள் ஏற்றுள்ளன.

தேசிய முன்னணிக் கூட்டணியைச் சேர்ந்த அம்னோ கட்சி, ஐக்கிய அரசாங்கத்தில் சேர இன்று வியாழக்கிழமை உறுதி தெரிவித்துள்ளது. முன்னதாக, எதிர்க்கட்சிக் கூட்டணியாக இருக்கப்போவதாக தேசிய முன்னணி கூறியிருந்தது.

மற்ற அரசியல் கட்சிகளும் ஐக்கிய அரசாங்கத்தில் சேர உறுதி தெரிவித்துள்ளன.

ஒத்த சிந்தனை உடைய கட்சிகளுடன் சேர்ந்து ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பதை தாம் பரிசீலிக்க இருப்பதாக பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியும் கூறியுள்ளது.

ஓரினப் புணர்ச்சி, அதிகார துஷ்பிரயோகம் போன்ற சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளால் 1998ல் துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட திரு அன்வார், 24 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு எழுச்சி பெற்றுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!