மகிழ்உலா, பண்ணை சுற்றுலா முதல் நட்சத்திரங்களுக்குக் கீழ் சொகுசு கப்பல் பயணம் வரை, இளம் குடும்ப உறுப்பினர்களைக் குதூகலப்படுத்தும் சில வழிகள் இதோ. உங்கள் $100 மின்னிலக்கப் பற்றுசீட்டுகளையும் சிறுவர் தள்ளுபடிகளையும் மீட்டுக்கொள்ளுங்கள்.
ஆண்டின் நிறைவு மாதங்கள், குறிப்பாகப் பள்ளி விடுமுறை நாட்கள், குடும்பத்துடன் குதூகலமாக செலவழிக்கும் பொன்னான நேரம்.
தீவு முழுவதும் குடும்பத்துக்கு உகந்த நடவடிக்கைகள் பல. இவற்றுள் சில எல்லோருக்கும் தெரிந்தவை, சில இளையர்களாலும், உள்ளத்தால் இளமையாய் உள்ளவர்களாலும் இன்னும் கண்டுபிடிக்கப்படாதவை.
மேலும், மின்னிலக்கச் சுற்றுலாப் பற்றுச்சீட்டுச் சலுகைகளை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு திட்டமிட இப்போதே நல்ல நேரம்.
சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான உங்கள் அனுபவத்தை நீங்கள் டிசம்பர் 31க்குள் பதிவு செய்து, மார்ச் 31க்குள் பயன்படுத்தவும். ஆக, மின்னிலக்கச் சுற்றுலாப் பற்றுச்சீட்டுச் சலுகைகளை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு திட்டமிட இப்போதே நல்ல நேரம்.
குடும்பங்களுக்குச் சிறந்தது
18 வயதுக்கும் குறைவான சிறுவர்களைக் கொண்ட குடும்ப உறுப்பினர்கள், சுற்றுலாத் தலங்களிலும், சுற்றுப்பயணங்களிலும் அதிகபட்சமாக ஆறு சிறுவர்/இளையர் நுழைவுச்சீட்டுகளை $10 தள்ளுபடியுடன் வாங்கலாம். இது உங்களுக்குத் தெரியுமா?
தங்கள் இளம் குடும்ப உறுப்பினர்களைப் பள்ளி விடுமுறைகளின்போது வெளியே குதூகலப் பயணத்துக்குக் கூட்டிச் செல்ல நினைக்கும் மாமா, அத்தை, தாத்தா, பாட்டி ஆகியோருக்கு இது ஒரு நல்ல செய்தி. நீங்கள் அந்த சிறுவரின் நேரடி குடும்ப உறுப்பினராகவோ, சட்டபூர்வ பாதுகாப்பாளராகவோ இருந்தால், இந்தச் சுற்றுலாப் பற்றுச்சீட்டுச் சிறுவர் தள்ளுபடிகளைப் பெற தகுதி பெறுகிறீர்கள்.
இந்த சிறுவர்/இளையர் தள்ளுபடிகள் உங்கள் சுய $100 மின்னிலக்கச் சுற்றுலாப் பற்றுச்சீட்டுகளிலிருந்து வேறுபட்டவை. இவற்றைச் சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுப்பயணங்களிலும் சிறுவர்/இளையர் நுழைவுச்சீட்டு விலை தள்ளுபடிகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்தது $10 மதிப்புள்ள சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான சுற்றுலாப் பற்றுச்சீட்டுகளை நீங்கள் உபயோகித்திருக்க வேண்டும்.
தொல்லையில்லாமல் மீட்டுகொள்ளும் வழி
உங்கள் சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான சுற்றுலாப் பற்றுச்சீட்டுகளை மீட்டுக்கொள்வது சுலபம். உங்களுக்குத் தேவை எல்லாம் உங்கள் சிங்பாஸ்தான். ஐந்து அதிகாரத்துவ பங்காளர்களின் இணையத்தளங்களுக்குச் செல்லுங்கள். அவையாவன சாங்கி ரெக்கமெண்ட்ஸ், குளோபல்டிக்ச், க்ளூக், ட்ரேவலோகா, ட்ரிப்.காம். அதிகாரத்துவ பங்காளர்களின் இணையத்தளங்களில் உருள் செய்து உங்களுக்கு விருப்பமுள்ள அனுபவத்தைக் கண்டுபிடுயுங்கள் - தகுதி பெறும் ஹோட்டல்களும், சுற்றுப்பயணங்களும், சுற்றுலாத் தலங்களும் பற்றுச்சீட்டுகளின் சின்னம் ஏந்தியிருக்கும்.
உங்களுக்குத் தேவையானவற்றை உங்கள் ‘Shopping Cart’-ல் சேர்த்து விட்டு ‘Use SingapoRediscovers’-ஐ சொடுக்கி இணையப்பக்கத்திலிருந்து வெளியேறுங்கள். உங்கள் சிங்பாஸ் கணக்குள் சென்று நீங்கள் மீட்க விரும்பும் சுற்றுலாப் பற்றுச்சீட்டுகள் எண்ணிக்கையைத் தேர்வு செய்யுங்கள்.
அடுத்து 18 வயதுக்குக் குறைவான உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை உறுதிப்படுத்துங்கள். உருவாக்கப்பட்ட பற்றுச்சீட்டுக் குறியீட்டை நகல் எடுத்து வெளியேறும் இணையப்பக்கத்தில் ஒட்டினால், அதிகபட்சம் ஆறு சிறுவர்களுக்கான அல்லது இளையர்களுக்கான $10 சிறுவர்/இளையர் நுழைவுச்சீட்டுத் தள்ளுபடி தானாகவே செயல்படுத்தப்படும்.
இதைச் செய்ய உங்களுக்குச் சிரமமாக இருந்தால் அதிகாரத்துவ பங்காளர்களின் அலுவலகங்களுக்கு அல்லது தீவு முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள சமூக நிலையங்களுக்கு மற்றும் வசிப்போர் குழு நிலையங்களுக்குச் செல்லலாம். அங்கு சிங்கப்பூர் குடிமக்கள் தங்கள் சிங்கப்பூர் சுற்றுலாப் பற்றுச்சீட்டுகளைச் சிங்பாஸ் மூலம் மீட்டுக்கொள்ள உதவுபவர் இருப்பர்.
உங்களுக்கு சிங்பாஸ் கணக்கு இல்லை என்றால், நீங்கள் நியமிக்கப்பட்ட சமூக நிலையங்கள் மற்றும் வசிப்போர் குழு நிலையங்கள் ஆகியவற்றுக்கு உங்கள் அடையாள அட்டை, கடவுச்சீட்டு அல்லது தேசிய சேவை அடையாள அட்டை ஆகிய ஏதேனும் ஒன்றைக் கொண்டு சென்று பதிவு செய்துகொள்ளலாம். பிடோக் சமூக மன்றம், ஜாலன் புசார் சமூக மன்றம், சொங் பாங் வட்டாரம் 4 வசிப்போர் குழு நிலையம் ஆகியவை இதில் அடங்கும். அனைத்து இடங்களையும் அறிய இந்த இணைப்பை நீங்கள் சொடுக்கலாம்.
உங்கள் ஆண்டு இறுதி நடவடிக்கைகளைத் திட்டமிட ஏன் பள்ளி விடுமுறை முடியும்வரை காத்திருக்கவேண்டும்? முன்னதாகவே பதிவு செய்துகொள்ளுங்கள். அப்போதுதான் நீங்களும் உங்கள் சிறுவர்களும் குதூகலமான நேரத்தைச் செலவழிப்பது உறுதியாகிவிடும்.
உங்கள் குடும்பத்தார் அனைவரும் விரும்பும் சில அனுபவங்கள் இதோ.
நினைவில் கொள்ள ஒரு பயணம்

சிங்கப்பூரின் முதல், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய நகரமும், தீவின் ஆகப் பழமையான வீடமைப்புப் பேட்டைகளில் ஒன்றான, பல புராதனப் புதையல்களையும் நல்ல உணவுகளையும் கொண்டது குவீன்ஸ்டவுன் நகரம்.
‘SG Hike, Eat & Workshop @ Queenstown’ சுற்றுப்பயணம் மூலம் டங்க்லின் ஹால்ட், மெய் லிங் தெரு போன்ற பழைய பேட்டைகளை, அவை இடிக்கப்படுவதற்கு முன்பாகக் காணுங்கள். ஏழு வயது மற்றும் அதற்குக் மேற்பட்ட வயது சிறுவர்களுக்கு உகந்த இந்த அனுபவம், சிங்கப்பூரின் பழங்கால வாழ்க்கையைச் சற்று உற்றுப்பார்க்க வாய்ப்பளிக்கும். மூத்த சிங்கப்பூரர்கள் தங்கள் இளமைக் காலத்தை நினைவுபடுத்திக் கொள்வதற்கும், தங்கள் இளமைக் கால கதைகளைச் சிறுவர்களோடு பகிர்ந்துகொள்வதற்கும் வழிவகுக்கும்.
கோல்பார் உணவகத்தில் சுவைநீர் அருந்தி ஓய்வெடுத்துவிட்டு, சிறுவர்கள் போர்ட்ஸ்டவுன் சாலை வட்டாரத்திற்குச் சென்று அங்குள்ள ஆங்கிலேய காலத்துக் கட்டடங்களைப் பற்றிக் கற்றுக்கொள்ளலாம். இந்த இரண்டு மணி நேரப் பயணம் வருகையாளர்களுக்குப் பசுமையான தாவரங்களுக்கு நடுவே நடக்கும் அனுபவத்தைத் தரும். இந்த ரயில் கொரிடோர் அனுபவம் நியூயார்க்கின் த ஹைலைன் அனுபவத்தை பிரதிபலிக்கும். நிறைவாக, குவீன்ஸ்வேயில் மதிய உணவுக்கு லக்ஸாவைச் சுவைத்துவிட்டு, கிஃப்ட் பிளான்ட் பட்டறையில், இந்த பயணத்தை நினைவுகூறும் வகையில் ஒரு ‘டெரேரியம்’ செடியை உருவாக்கலாம்.

பயணத்தின் செலவு: $75
பயண நேரம்: காலை 8.30 -லிருந்து பிற்பகல் 1.00 வரை, புதன் முதல் சனி வரை
சந்திக்கும் இடம்: காமன்வெல்த் அம்ஆர்டி வெளியேறும் இடம் ஏ.

இயற்கையுடன் ஒன்றிணைதல்

நகர்ப்புற சிங்கப்பூரிலிருந்து வளர்க்கப்பட்ட விளைபொருட்களை நாம் பெரும்பாலும் சுவைக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. ‘Staycation & Farm’ சுற்றுப்பயணம் உங்களுக்கு அந்த வாய்ப்பை அளிக்கிறது. காலையில் மூன்று உள்ளூர் பண்ணைகளைச் சுற்றிப்பார்த்து அவை வளர்க்கும் புதிய விளைபொருட்களை அனுபவிக்கலாம். இபிஸ் பட்ஜெட் சிங்கப்பூர் ஹோட்டலில் நீங்கள் தங்கும் நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள, இந்த நான்கு மணி நேர சுற்றுப்பயணத்துக்குச் செல்லுங்கள். இந்த சுற்றுப்பயணத்துக்கு விருந்தினர்கள் ஹோட்டலில் இருந்து அழைத்துச் செல்லப்படுவார்கள்.
ஹே டெய்ரிஸ் ஆட்டுப் பண்ணையில் நீங்கள் புத்தம் புதியதாகக் கரக்கப்பட்ட ஆட்டுப் பாலை ருசிக்கலாம், மற்றும் $5-க்கு தீவனம் வாங்கி ஆடுகளுக்கு உணவளிக்கலாம். கோ ஃபா டெக்னாலஜி பண்ணையில் உங்களுக்குப் பிடித்த காய்கறிகள், எவ்வாறு வளர்க்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். சுங்கை புலோ ஈரநில காப்பகத்தில் தாவரங்களையும் விலங்கினங்களையும் பற்றிக் கண்டறியுங்கள். நிறைவாக, நீங்கள் இபிஸ் பட்ஜெட் சிங்கப்பூர் ஹோட்டலில் உள்ள உங்கள் அறையின் வசதிகளுக்குத் திரும்பலாம்.
பயணத்தின் செலவு: $70 முதல்
பயண நேரம்: பண்ணைச் சுற்றுலா புதன் முதல் ஞாயிறு வரை மட்டும் செயல்படும்

நிஜ நகைக் கொள்ளை இல்லை என்றாலும், அதைப் போல
ஒரு குடும்பமாக நகைக் கொள்ளை அடிப்பதை விட விறுவிறுப்பாக வேறு என்ன இருக்க முடியும்?

சரி, உண்மையில் நீங்கள் நகைகளைக் கொள்ளையடிக்கப் போவதில்லை. மாறாக, ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் சிக்கலான புதிர்களுக்கு ‘Jewel Heist Game’ சுற்றுப்பயணம் மூலமாக விடைகளைக் காண்பீர்கள். இம்மூன்று மணி நேர விளையாட்டு, ஒரு குழுவை மற்றொரு குழுவுடன் போட்டியிடச் செய்யும். நீங்கள், அங்குள்ள ஏழு மாடி மழை சுழல் நீர்வீழ்ச்சியைச் சுற்றி வளைந்து நெளியும் தளங்களிலிருக்கும் கடைகள் மற்றும் உணவகங்கள், நுட்பமாக வடிவமைக்கப்பட்ட பசுமையான இடங்கள் ஆகியவற்றைக் கண்டறிவீர்கள்.

இது ஒன்பது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறுவர்களைக் கொண்ட குடும்பங்களுக்குச் சிறந்தது. விளையாட்டுச் சுற்றுப்பயணத்தில் கண்காணிப்புக் கேமராக்களை அகற்றுவது, கழிவறைகளை வெள்ளத்தில் மூழ்கடிப்பது மற்றும் தப்பிக்கும் வழிகளைக் கண்டுபிடிப்பது போன்றவற்றைச் செய்து வெற்றி மகுடத்தைக் கைப்பற்றலாம்.
சிறுவர்கள், தங்கள் ஆர்வமான பார்வையோடு சின்னங்களையும் தடயங்களையும் தேடிக் கண்டுபிடிப்பதற்குப் பெரியவர்களுக்கு உதவுவார்கள். ஒரு குழுவாகச் செயல் திட்டத் திறனை வெளிப்படுத்தவும், வலுவான பிணைப்புகளை உருவாக்கவும் இது ஒரு சிறந்த வழியாகும்.
பயணச் செலவு: $65 முதல்
பயண நேரம்: சனி, ஞாயிறு மட்டும், பிற்பகல் 2.30-லிருந்து 5.30 வரை

தனிச்சிறப்பான நில, கடல் பயணம்

நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய ‘வாத்து’ வடிவ வாகனங்கள் சிங்கப்பூர் வீதிகளில் செல்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ‘Singapore DuckTours’ பயணத்தில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் ஏன் அறிந்துகொள்ளக்கூடாது?
இந்த ஒரு மணிநேர சாகசம் நீரில் தொடங்கும், பிறகு வாத்து வாகனம் துறைமுகத்திலிருந்து நீந்தி வெளியேறியவுடன் நகருக்குள் ஓடிவிடும். இவ்வழகிய பயணம், மரீனா பே சேண்ட்ஸ், கரையோரப் பூந்தோட்டங்கள் மற்றும் எஸ்ப்ளனேட் போன்ற சிங்கப்பூரின் அடையாளச் சின்னங்களை ஒரு வித்தியாசமான கோணத்தில் காண வாய்ப்பளிக்கிறது.

வாத்து வாகனம், சிங்கப்பூர் ராட்டினத்தைக் கடந்து கரை மூலம் நகர்ப்புறத்துக்குச் செல்லும் முன், மெர்லயன் அமைந்துள்ள இடத்தில் குடும்பத்துடன் ‘வீஃபீ’ புகைப்படம் எடுக்க மறக்காதீர்கள்.
நிறைவாக, சன்டெக் சிட்டியின் ஆகப் பெரிய நீரூற்றான The Fountain of Wealth-ல் வரம் ஒன்றை வேண்டிக்கொள்ளுஙள். குதூகலம் விரும்பும் குடும்பங்களுக்கு இது ஓர் அழகான நாளாக அமையும்.
பயணச் செலவு: $34.40 முதல்
பயண நேரம்: வெள்ளி முதல் திங்கள் வரை

நட்சத்திரங்களுக்குக் கீழே ஒரு சொகுசு கப்பல் பயணம்

நீரில் மிகவும் தெளிவான, இதமான பயணத்திற்கு, 'The Southern Islands: Discovery Sunset Sail with Dinner' சுற்றுப்பயணத்திற்குப் பதிவு செய்யுங்கள்.
திறந்த தளப் படகில் சவாரி செய்து, அந்தி மறைந்தவுடன் மின்னும் விளக்குகளால் நிரம்பியக் கடலின் தென்றலை அனுபவியுங்கள். நிபுணத்துவம் வாய்ந்த கடல் வழிகாட்டிகள் உங்களுக்குத் தீவுகளைப் பற்றிய மறந்துப்போன புராணக்கதைகளையும் சிங்கப்பூரின் நீர்நிலைகளைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் அனைத்தையும் எடுத்துரைப்பார்கள்.

இந்தப் பயணம், சுவையான ‘பெண்டோ’ இரவு உணவோடு வருகிறது. இது சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் மகிழ்ச்சியான, இதமான நேரத்தை வழங்குகிறது. நீங்கள், சிங்கப்பூரை விட்டு வெளியேறி, ஒரு சமுத்திரச் சாகசப் பயணத்தில் அந்த இரண்டு மணிநேரத்தையும் அபூர்வமாகச் செலவிட்டதாக உணர்வீர்கள்.
பயணத்தின் செலவு: $70 முதல்
பயண நேரம்: மாலை 6.30 -லிருந்து இரவு 8.30 வரை (சனி, ஞாயிறு)
சந்திக்கும் இடம்: மரினா சவுத் படகுத்துறை

குறிப்பு: மேற்காணும் சுற்றுப்பயணங்களின் விலைகள் அனைத்தும் சரியானவை (25 நவம்பர் 2021 பதிப்புத் தேதியில்). மின்னிலக்கச் சுற்றுலாப் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு உங்கள் அனுபவங்களை டிசம்பர் 31-குள் பதிவு செய்து, மார்ச் 31-குள் பயன்படுத்தவும்.
சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தோடு ஒரு கூட்டு முயற்சி.