சுடச் சுடச் செய்திகள்

ரே பிராட்பரியின் ‘இடி முழக்கம்'

எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன்

எக்கல்ஸ், கால இயந்திர நிறுவனத்திற்குப் பத்தாயிரம் டாலர் கொடுத்து டைனோசர் காலத்திற்குப் பயணப்படுகிறார். ஒரு சிறிய குழுவாகச் சென்று டைனோசர்களை வேட்டையாடிக் கொல்லலாம்.  அப்போது தான் அவர்களின் ஊரில் தேர்தல் முடிந்து மோசமான சர்வாதிகாரி ஆட்சிக்கு வந்துவிடக்கூடும் எனும் அச்சம் நீங்கி நல்லாட்சி வழங்கும் புதிய பிரதமர் வென்றிருந்தார். 

எக்கல்ஸ் அதன் பொருட்டு நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைகிறார். துப்பாக்கிகளைச் சுமந்து கொண்டு கால இயந்திரத்தில் அந்த வேட்டைக் குழு பயணப்படுகிறது. எந்த டைனோசரைச் சுட்டு வீழ்த்த வேண்டுமோ அதை முன்னரே காலப் பயணம் செய்து நிறுவன நபர் அடையாளக் குறி இட்டிருப்பார். இயற்கையாகவே அந்த டைனோசர் சாகவிருக்கிறது. 

அதற்குச் சற்று முன்பு சென்று இவர்கள் அதை வேட்டையாடிக் கொல்வதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என நம்பினார்கள். 

அந்தரத்தில் மிதக்கும் மின் காந்த தட்டுக்களால் ஆன பாதை யில் நடக்க வேண்டும். தவறியும் கீழே ஒரு சிறு புல்லையும் மிதித்து விடக்கூடாது என நிறுவனம் எக்கல்சை எச்சரிக்கும். கவனக் குறைவாக கடந்த காலத்தில் இவர்கள் செய்யும் பிழை நிகழ்க் காலத்தில் என்னவாக வரும் என எவரும் அறிய முடியாது. 

உரிய நேரத்தில் பிரம்மாண்டடி ரெக்ஸ் டைனோசர் அவர்களுக்கு முன்தோன்றும். அதைத்தான் இவர்கள் சுட்டு வீழ்த்த வேண்டும். அதன் பேருருவைக் கண்டு எக்கல்ஸ் அஞ்சி பதறிவிடுவான். எச்சரிப்பதைக் காதில் வாங்காமல் வரையறுக்கப்பட்ட பாதையிலிருந்து விலகி நிலத்தில் காலூன்றி சில அடிகள் நடந்துவிடுவான். கால இயந்திரத்திற்குள் அஞ்சி ஒடுங்கி இருப்பான். வேட்டைக் குழு அவனைத் திட்டித் தீர்க்கும். 

பிறகு ஒருவழியாக வேட்டையை முடித்துக்கொண்டு சமாதானம் ஆகி கிளம்பிவிடுவார்கள். சில அடிகள் தரையில் கால் பதித்தது ஒன்றும் பெரும் பிழையில்லை. மன்னித்துவிடலாம் என அவர்கள் ஒரு முடிவிற்கு வந்திருப்பார்கள். 

கால இயந்திரம் மீண்டும் 2055ஆம் ஆண்டிற்கு வந்து சேரும். அப்போது கால பயண அலுவலகத்தின் ஆட்கள் பேசும் ஆங்கிலம் சற்றே திரிபுபட்டதாக இருக்கும். மனிதர்களின் நடத்தைகளிலும் ஏதோ சில மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டதைக் கவனிப்பான். அதைவிட அதிர்ச்சிக்குரிய செய்தி என்னவென்றால் எந்த சர்வாதிகாரி தேர்தலில் தோற்றதில் நிம்மதி அடைந்தானோ அவன் ஆட்சிக்கு வந்திருப்பான். 

குழப்பத்துடன் ஷூவில் ஒட்டியிருக்கும் சக்தியைக் காணும்போது தான் அதன் அடியில் ஒரு சிறிய வண்ணத்துப்பூச்சி செத்துக்கிடப்பதைக் காண்கிறான். ஒரு வண்ணத்துப்பூச்சியைக் கடந்த காலத்தில் மிதித்துக் கொன்றது நிகழ்காலத்தில் இத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா எனக் குழம்பித் தவிக்கிறான். 

மீண்டும் காலப் பயணம் சென்று தன் தவற்றைத் திருத்திக் கொள்ள வேட்டைக் குழு தலைவனிடம் கெஞ்சுகிறான். தலைவன் தன் துப்பாக்கியைக் கையில் எடுக்கும் போது ஒரு இடிமுழக்கம் கேட்கிறது.

ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பு. எங்கேயோ கேட்டது போல் உள்ளது அல்லவா? 

தசாவதாரம் திரைப்படம் நினைவுக்கு வரலாம். ‘கேயாஸ்’ கோட்பாட்டுக்கு அளிக்கப்படும் விளக்கம். தற்காலத்து வண்ணத்துப் பூச்சியைக்காட்டிலும் வரலாற்றில் வாழும் வண்ணத்துப் பூச்சியை அழிக்கும்போது அதற்கு நாம் கொடுக்கும் விலை அதிகம்.  

‘விசை’ படைப்பிலக்கியத் திட்டத்தில் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் இதுபோன்ற அறிவியல் புனை கதைகளையும் வரலாற்றுக் கதைகளையும் எப்படி வாசித்துப் புரிந்துகொள்வது, எப்படி எழுதுவது என்பதை விளக்குவார்.

தேசிய கலைகள் மன்றத்தின் ஆதரவில் தமிழ் முரசு ஏற்பாடு செய்துள்ள ‘விசை’ சிறுகதை, கவிதைப் பயிலரங்கு களில் நீங்கள் பங்கேற்கலாம். மே 4, மே 11 இரு சனிக்கிழமைகளிலும் காலை 9.45 முதல் மாலை 5.30 மணி வரை பயிலரங்குகள் நடைபெறும். காலை, மதிய உணவுகள் உண்டு. 

உங்கள் படைப்புகளுடன் விவரங்களை tamilmurasu@sph.com.sg என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். பெயர் பதிவுக்கு இன்றே இறுதிநாள்.

கட்டணம் மாணவருக்கு: $10, பெரியவருக்கு: $15.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon