அறிவியல் புனைவுகள்

சுனில் கிருஷ்ணன்

அறிவியல் புனைவுகளின் வளர்ச்சியை அறிவியல் வளர்ச்சியுடன் சேர்த்தே புரிந்துகொள்ள வேண்டும். அறிவியலின் எல்லைகள் விரிய விரிய சாத்தியங்களும் விரிந்தன. விடை காணமுடியாத புதிர் என இவ்வுலகில் ஏதுமில்லை எனும் அளவிற்கு அறிவியல் உச்சத்தை எட்டியது. நவீன இலக்கியத்தின் முதல் அறிவியல் புணை கதை என பிரான்கைன்ஸ்டீனை சொல்லலாம். ஒரு இயந்திர மனிதனை உருவாக்கி அவனுக்கு உயிரளிக்க முடியும் எனும் சாத்தியத்தின் துவக்க விதை. அங்கிருந்து இன்று செயற்கை நுண்ணறிவு வரை அறிவியல் புனைகதை பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது.

அறிவியல் அனைத்தையும் வெற்றிகொள்ளும் எனும் நம்பிக்கை இரு விதமான புனைவு களங்களை உருவாக்கியது. மானுடன் உருவாக்கும் அறிவியல் இயற்கைக்கு எதிராக திரும்பும்போது பேரழிவை உருவாக்கும். அறிவியல் வளர்ச்சி பேராசையுடன் பினையும்போது என்ன நிகழும்? என்பது முதன்மை கேள்வி. ஊழிகாலம் குறித்த மத/ பண்பாட்டு நம்பிக்கைகள் சேர்ந்து ஊகப் புனைவுகளை உருவாக்கின. பின்னை ஊழிக்கால (post apocalypse) புனைவுகள் அறிவியல் புனைவுகளில் மிக முக்கியமான வகைமை. கற்பனையின் வலுவில் ஒரு எதிர்காலத்தை உருவாக்கி, மானுடவாழ்வில் சாரமென எவை எஞ்சும் எனும் வினாவை நோக்கி விரிபவை. மற்றொரு வகைமை என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மானுடத்தை எவ்வகையில் எல்லாம் பாதிக்கும்? அதை எதிர்கொள்ள மேலதிகமாக என்னவிதமான தொழில்நுட்பத்தை நாம் கையில் எடுக்க வேண்டும் எனும் கேள்வியை நோக்கி பயணிப்பது. அறிவியலின் மீது நன்னம்பிக்கை கொண்ட தரப்பு என இதை சொல்லலாம்.

ஊகப் புனைவு (speculative fiction), டிஸ்டோபியன் புனைவுகள் அறிவியல் புனைவுகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவை. சிறந்த உதாரணம் ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984. இந்நாவலை 1949 ஆம் ஆண்டு எழுதியிருக்கிறார். இன்று அந்நாவலை வாசிக்கும்போது தீர்க்கத்தரிசனம் போல் இருக்கும். ஊகப் புனைவு வரலாறை கேள்விக்குள்ளாக்கி மறுபரிசீலனை செய்யும் தன்மை கொண்டது. ஒருவேளை ஹிட்லர் இரண்டாம் உலக போரில் வென்றிருந்தால் உலக வரலாறு என்னவாக இருந்திருக்கும்? இவ்வகையான புனைவுகள் அரசியல் அதிகாரம் பற்றிய பிரக்ஞையில் எழுபவை. குறிப்பாக முற்றதிகாரத்திற்கு எதிர்வினையாக உருவானவை. ரெ பிராட்பரியின் ஃ பாரன்ஹீட் 451 கதையையும் இவ்வகையிலேயே சேர்க்கலாம்.

அறிவியல் அற்புதங்கள் முற்கால சமூகத்தில் மாயங்கள் மீதான நம்பிக்கையை இல்லாமல் ஆக்கின. இணையாக அறிவியல் புணை கதைகள் முற்கால தேவதை கதைளின் நீட்சியாக நிலைகொண்டன. ஹெச். ஜி வெல்ஸ் 'கால யந்திரம்' பற்றிய கற்பனைகளை ஐன்ஸ்டீனுக்கு ஐம்பது ஆண்டுகள் முன்னரே செய்கிறார். ஐன்ஸ்டீனின் வருகையும் சார்பியல் கோட்பாடும், க்வாண்டம் இயற்பியலும் அறிவியலில் எத்தகைய பாய்ச்சலை நிகழ்த்தியதோ அதேயளவு அறிவியல் புனைவுகளின் களத்தையே மாற்றியமைத்தன. இணை பிரபஞ்சம், கால பயணம், வேற்றுகிரக உயிரிகள் என அதன் பரப்பு விரிந்தது. உயிரி தொழில்நுட்பம், மரபணுவியல் வளர்ச்சி புதிய புதிய புனைகதை சாத்தியங்களை உருவாக்கி அளிக்கின்றன.

பொதுவாக புனைவுகளை எழுதும்போது எழுத்தாளர் அறுதியான தீர்மானத்துடன் எழுதுவது கலைத்தன்மை அடையாமல் போவதற்கான வாய்ப்பு அதிகம். அசோகமித்திரனின் 'ஒற்றன்' நாவலில் பெரும் வரைபடத்துடன் அமர்ந்திருக்கும் பிராவோ நினைவிற்கு வரலாம். அவன் தன்னுடைய நாவலை ஒருநாளும் முடிக்கபோவதில்லை. வரலாற்று புனைவிற்கும் அறிவியல் புனைவிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டிலும் எழுத்தாளன் ஒரு கருத்தை பின்தொடர்வது அனுமதிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் அறிவியல் புனைவு ஒரு கற்பனையான சூழலில் என்ன நிகழும், எப்படியிருக்கும் எனும் கேள்வியாகவே உதிக்கும். அறிவியல் புனைவு ' what if' எனும் கேள்வியை பின்தொடர்ந்து உருவாவது என சுருக்கமாக சொல்லலாம். கற்பனையின் ஆற்றலே அறிவியல் புனைவின் மிக முக்கிய கூறு.

அறிவியல் புனைவு மேற்கிலக்கியத்தில் தனக்கென தனித்த வாசிப்பு பரப்பைக் கொண்டது. ஐசக் அசிமோவ், மைக்கேல் க்ரிச்டன் என பெரும் நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தும் துறை. முந்தைய காலங்களில் மைய இலக்கிய வாசகர்கள் பெரும்பாலும் அறிவியல் புனைவை தூய இலக்கியமாக ஏற்றது இல்லை. ரே பிராட்பரி போன்றோர் விதிவிலக்கு. கிரகாம் கிரீன், உம்பர்தோ எகோ, ஓரான் பாமுக் போன்றோர் நவீன இலக்கியத்தின் இறுகிய எல்லையை தொடர்ந்து உடைத்தார்கள். பின்நவீனத்துவம் அலை வலுவானதும் அறிவியல் புனைவும் மைய இலக்கியம் நோக்கி நகர்ந்தது. அறிவியல் அழிவைத்தரும், அறிவியல் மானுட மீட்புக்கான சாதனம் எனும் இரு எல்லைகளில் தொடர்ந்து அறிவியல் புனைவுகளை எழுதும் நிலையை கடந்து அறிவியலின் இன்றியமையாத இருப்பை அங்கீகரித்து அது உருவாக்கக்கூடிய நவீன வாழ்வின் புதிய சிக்கல்களை, கேள்விக்குள்ளாக்கும் மதிப்பீடுகளை நோக்கி தற்கால அறிவியல் புனைவுகள் நகர வேண்டும். ஒரு நண்பர் முழுக்க ஆய்வு கூடத்திலேயே உருவாக்கப்படும் மாமிசத்தை பற்றிய ஆராய்ச்சி சுட்டியை அளித்தார். இப்போது இது ஒரு சுவாரசியமான கேள்வியை எழுப்புகிறது. காலம் காலமாக சைவ அசைவ பாகுபாடை கொண்டிருக்கும் இந்திய சமூகம் இந்த உணவை எப்படி எதிர்கொள்ளும்?

தற்கால தலை சிறந்த அறிவியல் புனைவு எழுத்தாளர்கள் என டெட் சியாங், சார்லஸ் யு, கென் லியு ஆகியோரைச் சொல்வேன். டெட் சியாங்கின் the lifecycle of software objects எது உயிர்? எது பிரக்ஞை? போன்ற கேள்விகளை கணினியுகத்தை முன்வைத்து எழுப்புகிறது. கென் லியுவின் 'good hunting' கதை சீன பின்புலத்தில் அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்மயமாதலை ஒரு மிகு புனைவு உருவகக் கதையாக சொல்கிறது. சார்லஸ் யு கால யந்திரத்தை மையமாகக் கொண்டு பவுத்த மெய்யியலை தொட்டுச் செல்லும் ஒரு கதையை 'How to live safely in a science fictional universe' வழியாக எழுதுகிறார். இவர்கள் மூவரும் கிழக்கு- மேற்கு என இரண்டு பண்பாடுகளும் உராயும்போது உருவானவர்கள். பவுத்த மெய்யியல் பின்புலத்தை அறிவியலோடு இணைத்து அறிவியல் புனைவின் எல்லைகளை புதிய உயரங்களுக்கு எடுத்து சென்றவர்கள். இந்திய இலக்கியம் இவர்களையே முன்னோடிகளாக கொள்ள வேண்டும். அறிவியல் புனைவின் மீது மைய இலக்கிய போக்கு முன்வைக்கும் விமர்சனம் என்பது துவக்க நிலையில் வாசகனுக்கு அதன் முதற்கோள் (hypothesis) அளிக்கும் ஆச்சரியத்திற்கு அப்பால் எதையும் அளிப்பதில்லை என்பதே. அறிவியல் புனைவோ, மிகு புனைவோ அது இலக்கியமாக ஆவது வாழ்வைப் பற்றிய பார்வைகளை அளித்து, அறக் கேள்விகளை எழுப்பி, மெய்யியல் விசாரணையாக பரிணாமிக்கும் போது மட்டுமே. ஜெயமோகனின் 'விசும்பு' மேற்கண்ட இதே வரிசையில் இந்திய மரபையும் நவீன அறிவியலையும் இணைக்கும் புள்ளியில் உருவான ஒரு முன்னோடி முயற்சி என சொல்லலாம். சுஜாதாவின் கதைகள், சுதாகர் கஸ்தூரியின் 6174, 7.83hz ஆகிய இரு நாவல்கள் தவிர்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாக வெகு சில அறிவியல் புனைவு கதைகளே தமிழில் எழுதப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்கள் எழுதுவதற்கு எத்தனையோ களங்கள் இன்னும் காத்திருக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!