விசை படைப்பிலக்கியத் திட்டம்: மர்மக் கதை எழுதும் உத்திகள்

எஸ்.வெங்கடேஷ்வரன், வைதேகி ஆறுமுகம்

விசை படைப்பிலக்கியத் திட்டத்தின் மற்றொரு பரிமாணமாக நேற்று எழுத்தாளர் சி.சரவணகார்த்திகேயன் சிறுகதைப் பயிலரங்கை வழிநடத்தினார். சிங்கப்பூரில் பிரஸ் ஹோல்டிங்ஸ் பயிற்சி அறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 25 தமிழ் எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். ”வெவ்வேறு சூழ்நிலைகளை எப்படிச் சமாளிப்பது, அதன் பின் புலம், அதைக் குறித்த புரிதல் ஆகியவற்றை வாசிப்பு மூலம் பெறலாம். தன்னைத்தானே புரிந்துகொள்ள இது வாய்ப்பளிக்கிறது. தனிமனித பரிசீலனை மிக இயல்பாக நடக்க இலக்கியம் ஒரு கருவி,” என்றார் எழுத்தாளர் சரவணகார்த்திகேயன்.

சிறு வயதிலிருந்தே வாசிக்க ஆரம்பித்தார் திரு சரவணகார்த்திகேயன். வாசிப்பிற்கு அடுத்த படிநிலையாக எழுத ஆசைப்பட்டார். பதின்மூன்று வயதில் எழுத ஆரம்பித்து சிறுகதை, கவிதை, கட்டுரைகள் என்று பல துறைகளில் தடம் பதித்து வருகிறார். அறிவியல், வரலாறு, புனைவு என்று பல பிரிவுகளில் மொத்தம் 15 நூல்களை எழுதியுள்ளார். காலப்போக்கில் கிடைத்த அங்கீகாரங்கள் அவரை மேலும் எழுதத் தூண்டின.

சுஜாதா விருது, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் பரிசு போன்ற பல விருதுகள் பெற்ற எழுத்தாளர் திரு சரவணகார்த்திகேயன். "எழுத்தில் சிறந்து விளங்க சில தியாகங்கள் செய்யத் தயா ராக வேண்டும். நேரத்தை நீங்கள் தான் ஒதுக்கவேண்டும்," என்று ஆலோசனை வழங்கினார் அவர். பிரபல தமிழ் எழுத்தாளர் திரு ராஜேஷ்குமாரின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தை குறிப்பிட்டு, விடாமுயற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் திரு சரவணகார்த்தியேகன். "ராஜேஷ்குமார் நீண்ட காலமாக ஒரு பத்திரி்கைக்கு எழுதி அனுப்பி கொண்டு இருந்தார். மூன்று ஆண்டுகளாக 167 கதைகளை எழுதி பத்திரிகைக்கு அனுப் பினார். ஆனால் அவரது எந்தக் கதையும் வெளியிடப்பட்டதில்லை.

"அவர் தொடர்ந்து கதைகளை அனுப்பிவந்தார். பின்னர், அவரது கதைகள் வெளியாகி மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தன. "இணையம் வழியாக இப்போது எளிதில் நமது கதைகளைப் பதிவு செய்துவிடலாம். பல முறை முயற்சி எடுக்க நாம் தயங்கக்கூடாது," என்றார் திரு சரவணகார்த்திகேயன். குறுநாவல், குறுங்கதை, நாவல் ஆகிய வகைமைகள் பற்றிப் பேசிய திரு சரவணகார்த்தி கேயன், அவை சிறுகதையிலி ருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்று விவரித்தார்.

வர்ணனை துல்லியமாக ஒரு கருத்தை வாசகர்களுக்கு சித்திரிக்கும் என்றும் காலம், இடம், மனிதர்கள், சூழல், சம்பவம் ஆகிய அம்சங்களைக் குறித்த தகவல்கள் வழங்கும்போது நம்பகத்தன்மையை வாசகர்களிடையே கிடைக்கிறது என்றும் குறிப்பிட்டார் அவர். "ஒரு பெண்ணை அழகாக வர்ணிப்பதன் மூலமாக வாசகர்களிடையே அக்கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கலாம். அதே சமயத்தில் வர்ணனை அளவுக்கு மிஞ்சிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்," என்றார் எழுத்தாளர் சரவணகார்த்திகேயன். பயிலரங்கின் இறுதி அங்கத்தில் பங்கேற்பாளர்கள் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு மர்மக் கதை எழுதும் பயிற்சியை மேற்கொண்டனர். அவர்களின் கதைகளுக்குப் புள்ளிகள் வழங்கி, வெற்றிபெற்ற குழுவுக்கு நூல்களைப் பரிசாக வழங்கினார் திரு சரவணகார்த்திகேயன்.

பயிலரங்கின் பங்கேற்பாளர்கள் அனுப்பிவைத்த கதைகளைப்பற்றி அவர் கருத்துரைத்தார். "நான் படித்த அனைத்து கதைகளும் சிங்கப்பூர் நிலவியலை குறிப்பிட்டிருந்தது. சாலைகள், இடங்கள், கட்டடங்கள் போன்றவற்றின் பெயர்கள் இயல்பாகவே கதைகளில் இடம்பெற்றன. வித்தியாசமாக, தன்னித்துவமாக இருக்கிறது. நம்பகத்தன்மையான கதைகளை எழுத இந்த உத்திகளைப் பயன்படுத்தலாம்," என்று கூறினார் திரு சரவணகார்த்திகேயன். இந்தக் காலச் சுழலுக்கு ஏற்ப சிறுகதை வடிவமைக்கும் முறையை கற்றுகொண்டதாக நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் பயிலும் ரஸியா பேகம் பகிர்ந்துகொண்டார்.

தமிழில் சிறப்பாக எழுத முற்படுபவர்களுக்கு இப்பயிலரங்கு சிறந்த வழிகாட்டி என்றார் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலாளர் திருமதி கிருத்திகா. "ஒரு கதையைத் தொடங்குவது, முடிப்பது, சரியான மொழி நடையில் எழுதுவது போன்ற உத்திகளைப் பயிலரங்கில் விரிவாகக் கற்றுகொண்டேன்," என்றார் மூன்று புத்தகங்கள் எழுதியுள்ள திருமதி அன்னலட்சுமி முருகையா, 61. இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்களை எழுத்தாளர்களாக்குவதற்கு இதுபோன்ற பயிலரங்குகள் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று 20 வயது மாணவி ரேவதி மனோகரன் கூறினார்.