ஒரு நல்ல புத்தகம்

ஒரு
நல்ல புத்தகம்
நம் ஜன்னலைத் திறக்கிறது
அதன்வழி நமக்குள்
தேடலின் பறவைகளை
அனுப்புகின்றது...ரசனையெனும்
அதன்,
அலகுகளில் சேகரித்த
வெளிச்ச விதைகளிலும்...
உள்ளுணர்ந்த வேட்கையின்
தாகச் செரிப்பினிலும்...
தெரிந்தறியும் ஆழங்களின்
நெருக்கத் தீண்டலிலும்...
உயரங்களின் பரிமளத்தை
நுகர்ந்த அனுபவத்திலும்...
இயைந்து இயைந்து
பின்னப்படும்
ஞானக்கூடுகளில்,
படபடக்கின்றன
நல்ல புத்தகங்களின்
 பக்கங்கள்...
வார்த்தைகளின்
 திசையொலியில்
தர்க்க அலசலாகி
கேள்விகளாலான பறத்தலில்
வட்டமடித்துச் சுழன்று,
வாசிப்பெனும் கனிகளால்
நிறைந்திருக்கும்
உட்கூடுகளின் 
பஞ்சுப் படுகைகளில்,
ஆழ்ந்த அறிவுச்சுடருடன்
அமைதியாய்
 விழித்திருக்கின்றன
புத்தக கணங்கள்....
ஒரு
நல்ல புத்தகத்தைத்
தேடலும்...
படைப்பொழுங்குடன் 
தெரிதலும்...
கண்ணியமாய்
அதைத்
தேர்ந்தெடுத்துப் பகிர்தலும்
ஆயிரம் ஆலயங்களுக்குச் சமம்
அதுவே நல் அறம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தேசிய நூலகத்தில் நடைபெற்ற எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் எழுத்தாளர் சரவணகார்த்திகேயனுடன்(வலது) நிகழ்ச்சியை வழிநடத்திய டாக்டர் சரவணன் . படம்: தமிழ் முரசு

14 Jul 2019

தமிழிலக்கியத்தை வளர்க்கும் இடைநிலை இலக்கியங்கள்