மொழிக்குள் இயங்கும் மொழி - கவிஞர் சாம்ராஜ்

நவீன கவிதை குறித்துப் பேசுவதற்கு முன் கவிதை என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள முயலலாம். கவிதை என்றால் என்ன என்பதற்கு திட்டவட்டமான பதில் கிடையாது. வேண்டுமானால் உத்தேசமான, தோராயமான பதில்தான் உண்டு.

“கவிதை மாதிரி இருக்கு” என்ற வாக்கியத்தை நம் வாழ்வில் அநேக சந்தர்ப்பங்களில் கேட்கிறோம். கவிதைக்கும், இந்த வாக்கியத்தைக் கூறுபவருக்கும் ஒளி வருட இடைவெளி உண்டென்றாலும்கூட அவரும் சொல்கிறார். அழகான ஒன்றை, வசீகரமான ஒன்றை, பரிசுத்தமான ஒன்றைப் பார்த்தால் கவிதை மாதிரி இருக்கிறது என்று சொல்வது வழக்கமாயிருக்கிறது.

கவிதை என்றால் என்ன? கவிதை என்பது மொழிக்குள் இயங்கும் மொழி.

நாம் எல்லோரும் தந்திக் கம்பத்தில் அமர்ந்திருக்கும் குருவிகளைப் பார்த்திருக்கிறோம். அதையே கல்யாண்ஜியும் பார்க்கிறார்.

“இளையராஜாவின் இசைக் குறிப்புகளைப் போல தந்திக் கம்பத்தில் குருவிகள்” என எழுதும்பொழுது தந்திக் கம்பிகள் இசைக் குறிப்புகள் எழுதும் stave-வாக மாறி குருவிகள் music notation ஆக மாறும் மாய வித்தை நிகழ்கிறது.

அன்றாடம் வாழ்வில் எல்லோரும் பயன்படுத்தும் மொழிதான்; சொற்கள்தான். ஆனால் அது கவிஞனின் மொழியில் வேறொன்றாக மாறுகிறது.

கவிதை என்பதை துல்லியம் என்றும் சொல்லலாம். நாம் பார்க்காத கோணம் என்றும் சொல்லலாம், மிகப் பெரியதை மிகச் சிறியதில் சொல்வது என்றும் கூறலாம். வசீகரத் தத்துவம் என்று சொல்லலாம். “பனித்துளியில் தெரியும் பனைமரம்” என்று சுந்தரராமசாமியை துணைக்கு அழைக்கலாம். மொழி தீப்பிழம்பாகும் தருணம் என்றும் சொல்லலாம். மொழியின் பாலைவனத்தில் ஒற்றைக் கண்ணீர்த் துளி என்றும் கவிதையைச் சொல்லலாம்.

நாம் வாசித்த பழந்தமிழ் இலக்கியம், குறள், மத்தியகால சமயக் குறவர்களின் பாடல், கம்பராமாயணம், சித்தர் பாடல்கள், பாரதியின் கவிதைகள், மரபுக் கவிதைகள், நவின கவிதைகள் என எதுவாக இருந்தாலும் அது துல்லியமாக, கூர்மையாக, மிகுந்த அழகியலோடு இருக்க வேண்டும். அதுவே கவிதைக்கான எக்காலத்திற்குமான விதி.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு - தழல்

வீரத்திற் குஞ்சென்றும் மூப்பென்று முண்டோ?

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.

சிறிய நெருப்பை அக்கினிக் குஞ்சென்று சொல்வதற்கு ஒரு மகத்தான கவிஞன் தேவைப்படுகிறான். தழல் வீரத்திற் குஞ்சென்றும் மூப்பென்று முண்டோ? என்று சொல்லும் பொழுது கடவுளுக்கு நிகராக ஆகிவிடுகிறான் கவிஞன். நெருப்பில் இளைய நெருப்பு வயதான நெருப்பு என்று உண்டா?

சந்தோசம்

ஒரு காலியான பஸ்

விண்மீன் இரவு வழி விரைய

டிரைவர் பாடுகிறார் போலும்

சந்தோசம் அவர் பாடுகிறார் என்பதில்

குந்தர் கிராஸின் கவிதை இது. இந்தக் கவிதை நமக்கு உருவாக்கும் மனச்சித்திரம் என்ன? யாரோ ஒருவர் காலியான பேருந்து ஒன்று போவதைப் பார்க்கிறார். பேருந்துச் சத்தத்தை மீறி பாடலும் கேட்கிறது. காலியான பஸ், விண்மீன் இரவு, பாடும் டிரைவர் யார்? அந்த டிரைவர்? எங்கே போகிறது அந்த பஸ்? அவர் ஏன் பாடுகிறார்? போய்ச் சேரும் நாம் அறியோம். ஆனால் அந்தச் சித்திரம் அவ்வளவு வசீகரமாய் இருக்கிறது.

கணப் பொழுதில் நம்மை கடந்து போய் விடுகிறது அந்த பஸ். ஆனால் ஆயுளுக்கும் நம் மனதில் நின்று விடுகிறது. இது போன்ற அரிய கணங்களை, சித்திரங்களை உறைய வைப்பதே நல்ல கவிதையின் வேலை.

வயலில் நாற்று நடும் பெண்கள்

எங்கும் சேறு எங்கும் சேறு

அவர்களின் பாடல்களைத் தவிர

இது ஒரு ஜப்பானிய ஹைக்கூ எங்கோ ஒரு கிராமத்தில் விவசாயம் நடக்கிறது. மனிதர்கள் சேற்றுக்குள் இறங்கி அங்குமிங்குமாய் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றிலும் சேறு படிந்திருக்கிறது. அவர்கள் பாடலில் மாத்திரமே சேறு படியாமல் பரிசுத்தமாய் இருக்கிறது. இதை எழுதுவதற்கு எத்தனை மேதமை வேண்டும்!

பார் புகழும் மார்கழியை

ஏன் டிசம்பர்

பாதியில் கை விட்டுச் செல்கிறது

என்று ஞானக்கூத்தன் ஒரு கவிதையில் கேட்கும்பொழுது அத்தனை ஆச்சர்யமாக இருக்கிறது. மார்கழி மாதம் என்பது டிசம்பர் 13 அல்லது 14 வாக்கில் துவங்கி ஜனவரி 13-ல் முடிகிறது.

மாதங்களில் தான் மார்கழி என்று தன்னை வர்ணித்துக் கொள்கிறான் கிருஷ்ணன். குளிர் நிரம்பிய மாதம் மார்கழி.

தமிழ் நாட்காட்டியையும், ஆங்கில கிரிகோரியன் நாட்காட்டியையும் குறுக்கில் கடக்கும் ஒரு கவிஞன் இப்படிக் கேட்கிறான், "டிசம்பரால் எப்படி மார்கழியை கைவிட்டுப் போக முடிகிறது," என.

இந்தக் கேள்வி எவ்வளவு ஆழமானது! அழகானது! இந்தக் கேள்விகளின் வழிதான் கவிதை எப்பொழுதும் மாயமாய் மலை உச்சியிலிருந்து சுடர் விடுகிறது.

நான் சிரிக்கிறேன் என்பதற்காக

எனக்கு சோகமே இல்லையென்று

நினைக்கிறாயா?

இது அழ முடியாதவனின் சிரிப்பு

என் அதரம் முழுவதும் அக்கினி பிழம்பு

ஒரு துளிக்கே மரணமென்றால்

எனக்கு மாத்திரம்

ஏன் இத்தனை கோப்பை விஷம்

என்று இடதுசாரி கவிஞர் இளவேனில் கேட்கும்பொழுது எத்தனை துயரமாய் இருக்கிறது! இந்த கொடூர வாழ்வை இந்த வரிகளை மிஞ்சி சொல்லிவிட முடியுமா?

கவிதை எப்பொழுது பிறந்திருக்கும்? நம் மூதாதையர், ஆதிக் குகை இருட்டில் தாங்கள் வேட்டைக்குப் போய் திரும்பிய அனுபவத்தை தங்கள் சந்ததியினரிடம் விவரிக்கும்பொழுது, அந்த வர்ணனையில் பிறந்திருக்கலாம், சொல்ல முடியாத துயரத்தை மொழியின் முதுகில் ஏற்றிப் பார்க்கலாம் என்ற ஆசையில் பிறந்திருக்கலாம், ஆயிரம் ஆண்டுகள் தாண்டி நிற்கட்டும் தன் சொல் என்ற இறுமாப்பில் தோன்றியிருக்கலாம், தேசத்தையே கடல் கொண்டாலும் சுவடிவழி நான் உயிர் வாழ்வேன் என்ற அபார நம்பிக்கையில் எழுதப்பட்டிருக்கலாம்.

கடவுளுக்கு நிகராய் தனக்கும் ஒரு சிம்மாசனம் வேண்டும் என்ற தீராத வேட்கையில் நிகழ்ந்திருக்கலாம்.

இன்றைக்கும் அந்த ஆதி தீவெட்டி வெளிச்சத்தில்தான் நவீன கவிஞன் தன் மகத்தான கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கிறான்.

நேரடியாக

குகையிருட்டில்

மூங்கில் காட்டில்

வெடித்த சிக்கி முக்கித் தீயின்

வெளிச்சத்தைத் தரிசிக்கவில்லை

வெப்பத்தை ஸ்பரிசிக்கவில்லை

அதன் அணையாத யாத்திரையை

நம்புகிறேன்

ஆனால்

அடுத்த யுகங்களின் குகைகளுக்கும்

வெளிச்சம் தரும்

வீரியம் உண்டு அதற்கு,

தீயின்றித் தீராது உலகம்

தீயும் தீர்ந்து விடாது.

என்று வண்ணதாசன் சொல்லும்

அந்தத் தீயே கவிதை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!