செய்தித் துறையைக் கொண்டாடும் உலக செய்தி தினம்

தமிழவேல், செய்தி ஆசிரியர்

உலக செய்தி நிறுவனங்கள் அனைத்தும் முக்கியமான திருப்புமுனையில், கரடுமுரடான பாதையில் சென்றுகொண்டிருக்கும் நேரம் இது. குறிப்பாக இணைய உலகின் அசுரவேக தாக்கத்தால் பல பாரம்பரிய செய்தி நிறுவனங்கள் இந்தோனீசிய காட்டுத்தீ ஏற்படுத்திய புகைமூட்டத்தில் சிக்கித் திணறும் மக்களைப் போல திணறுகின்றன.

செய்திகள் இப்போது உடனுக்குடன் வெளியாகின்றன.

இணைய வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடாக செய்தியாளர்கள் பம்பரமாகச் சுழன்றுகொண்டு வேலை புரிய வேண்டிய சூழல் இப்போது நிலவுகிறது. குறைந்துகொண்டே போகும் வாசகர் எண்ணிக்கை, விளம்பர வருமானம் ஆகிய சவால்களுக்கு இடையே பல செய்தித்தாள்கள் மூடுவிழா கண்டுள்ளன.

நமது அண்டை நாட்டின் மிகவும் தொன்மையான தமிழ் நேசன் செய்தித்தாள் அண்மையில் தனது கதவுகளை நிரந்தரமாக மூடியது. அடுத்த சில ஆண்டுகளில் தனது 90 ஆண்டு நிறைவை எட்டியிருக்கக்கூடிய நிலையில் தமிழ் நேசன் செய்தித்தாள் தனது கதவுகளை நிரந்தரமாக மூடியுள்ளது.

இத்தகைய சூழலில் பொய்த்தகவல்களும், ‘அரைவேக்காடு’ செய்திகளும் அதிகமாக இணையத்தில் பரவுகின்றன. அப்படிப்பட்ட சூழலிலும் செய்தித்துறை தர்மத்தைக் கட்டிக்காக்கும் அதே நேரத்தில் உண்மையான, தரமான, முழுமையான தகவல்களை வழங்குவதிலும் தமிழ் முரசு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் போன்ற செய்தித் தாட்கள் பல கடப்பாடுகளைக் கொண்டுள்ளன.

அத்தகைய கடப்பாட்டை பறைசாற்றும் விதமாக உலகின் பல நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 30 செய்தி நிறுவனங்கள் இன்று ஒன்றிணைகின்றன. தத்தம் சமுதாயத்தில் தங்களது செய்திகளின் மூலம் தாங்கள் ஏற்படுத்திய தாக்கம், மாற்றம், பெற்ற அனுபவம் போன்றவற்றை அந்த செய்தி நிறுவனங்கள் ஒரே தளத்தில் பகிர்ந்துகொள்ளவுள்ளன.

ஊழல் வழக்குகளை அம்பலப்படுத்திய செய்திகள் முதல் மனித வாழ்க்கையை, சாதனைகளைப் பறைசாற்றும் சிறப்புக் கட்டுரைகள் வரை பலவிதமான செய்திகளை மட்டும் இந்த தளம் வழங்கவில்லை. ஒவ்வொரு செய்திக்குப் பின்னால் உள்ள கதை, செய்தி உருவான விதம், அந்தச் செய்தி எப்படி சேகரிக்கப்பட்டது, செய்தியாளரின் அனுபவங்கள் ஆகியவற்றை ஒரே தளத்தில் வழங்குகிறது உலக செய்தி தினம்.

சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசும் இந்த உலக செய்தி தினத்தில் பங்கேற்கும் 30 செய்தி நிறுவனங்களில் ஒன்று.

இதனுடன் சிங்கப்பூரின் எஸ்பிஎச் நிறுவனத்தைச் சேர்ந்த தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆங்கில நாளிதழ், பெரித்தா ஹரியான் மலாய் நாளிதழ் ஆகியவையும் இந்த புதிய முயற்சியில் பங்கேற்கின்றன.

சிங்கப்பூரின் சேனல் நியூஸ்ஏஷியா, மலேசியாவின் ‘தி ஸ்டார்’, ‘பெர்னாமா’, பிலிப்பீன்ஸின் ‘தி பிலிப்பீன் டெய்லி என்குவைரர்’, ‘மணிலா புல்லட்டின், தாய்லாந்தின் ‘தி பேங்காக் போஸ்ட்’, வியட்நாமின் ‘வியட்நாம் நியூஸ்’ ஆகிய தென்கிழக்காசிய செய்தி நிறுவனங்கள் இந்த உலக செய்தி தினத்தில் பங்கேற்க முன் வந்துள்ளன.

இந்தியாவின் புகழ்பெற்ற ‘தி இந்து’, ‘ டைம்ஸ் ஆஃப் இந்தியா’ உட்பட சீனாவின் ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ ஆகியவை உலக செய்தி தினத்தில் பங்கேற்க உறுதியளித்துள்ளன.

உலக ஆசிரியர்கள் மாநாடு (World Editors Forum) ஏற்பாடு செய்துள்ள இந்த உலக செய்தி தினம் கூகல் செய்தித் திட்டத்தின் (Google News Initiative) ஆதரவுடன் நடைபெறுகிறது. தரமான செய்திகளை வழங்கும் உலக ‘கூகல் பிளேட்ஃபார்ம்’ அமைப்பின் ஒரு திட்டம் இந்த கூகல் செய்தித் திட்டம்.

இத்திட்டத்தில் பங்கேற்கும் அனைத்து செய்தி நிறுவனங்களும் 30 செய்தி நிறுவனங்களின் செய்திகளைத் தங்கள் தளத்தில் பதிவேற்றம் செய்யும்.

உலக செய்தி தினத்தை முன்னிட்டு இன்று முதல் தமிழ் முரசிலும் சிறப்புக் கட்டுரைகள் இடம்பெறும்.

அவற்றை www.tamilmurasu.com.sg இணையத்தளத்தில் படிக்கலாம். ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் இதற்கென்று பிரத்தியேக இணையத்தளம் ஒன்றில் செய்திகள், இளையர்களுக்கான புகைப்படப் போட்டி போன்றவற்றை www.world newsday.org இணையப்பக்கத்தில் காணலாம்.

“செய்திகளைத் திரட்டுவது எளிதான காரியம் அன்று. அதற்காக நிறைய உழைக்க வேண்டும். நிறைய நேர்காணல்கள் செய்யவேண்டும்.

“நிபுணர்களிடம் கருத்துகள் கேட்கவேண்டும், தகவல்களைச் சரிபார்க்க வேண்டும், நம்பகமான ஆளிடமிருந்து தகவல் வந்துள்ளதா என்று பார்க்கவேண்டும், போதிய தகவல்கள் உள்ளனவா என்று பார்க்கவேண்டும்.

“ஒரு பிரச்சினையை ஆழமாக ஆராய்ந்து முறையாக செய்தியை வழங்க வேண்டும்,” என்றார் உலக ஆசிரியர் மாநாட்டின் தலைவரும், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தின் ஆங்கில, மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் முதன்மை ஆசிரியருமான திரு வாரன் ஃபெர்னாண்டஸ்.

“செய்தியாளர்கள், செய்தி நிறுவனங்களின் பணியையும் சமூகத்தில் அவர்கள் ஆற்றும் முக்கியப் பங்கையும் கொண்டாடுவதே இந்த உலக செய்தி தினத்தின் நோக்கம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!