104 ஊடக செய்தியாளர்கள் கொலை

1 mins read
ac91fc1d-a294-4b5b-a8b1-58d7ec9e8586
இந்த ஆண்டு 55 பாலஸ்தீன ஊடக ஊழியர்கள் மாண்டனர். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

பிரசல்ஸ்: 2024ஆம் ஆண்டு உலக செய்தியாளர்களுக்கு மேலும் ஒரு மோசமான ஆண்டாக அமைந்துள்ளது.

இந்த ஆண்டு முழுவதும் உலகின் பல பகுதிகளில் 104 செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் காஸாவில் உயிரிழந்ததாக அனைத்துலக செய்தியாளர் சம்மேளனம் (IFJ) செவ்வாய்க்கிழமை கூறியது.

இருப்பினும், செய்தியாளர்களின் மரண ஆண்டாக வரலாற்றில் பதிவான 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு மரணமடைந்த செய்தியாளர்களின் எண்ணிக்கை குறைவு என்றது அந்த அமைப்பு.

2023ஆம் ஆண்டு முழுமைக்கும் 129 செய்தியாளர்கள் மரணமடைந்ததாக சம்மேளனத்தின் தலைமைச் செயலாளர் அந்தோணி பெல்லங்கர் ஏஎஃப்பி செய்தி நிறுனத்திடம் கூறினார்.

இவ்வாண்டு மாண்டவர்களில் 55 பேர் பாலஸ்தீன ஊடக ஊழியர்கள். காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட மோசமான தாக்குதல்களின் விளைவாக அந்த மரணங்கள் நிகழ்ந்ததாக சம்மேளனம் குறிப்பிட்டது.

2023 அக்டோபர் 7ல் இஸ்ரேல்-காஸா போர் தொடங்கியது முதல் இதுவரை 138 பாலஸ்தீன செய்தியாளர்கள் உயிரிழந்துவிட்டதாகவும் அது குறிப்பிட்டது.

மத்திய கிழக்கிற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு மிக மோசமான வட்டாரமாக ஆசியான அமைந்திருப்பதாக அது கூறியது.

ஆசியாவில் இவ்வாண்டு 20 ஊடக ஊழியர்கள் கொல்லப்பட்டனர். ஆசியாவின் பிற பகுதிகளான பாகிஸ்தானில் ஆறு பேரும் பங்ளாதேஷில் ஐவரும் இந்தியாவில் மூவரும் கொல்லப்பட்டதாக சம்மேளனம் பட்டியல் இட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்