பாகிஸ்தான் வெடிகுண்டு தாக்குதலில் ராணுவ வீரர்கள் உட்பட 24 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் வெடிகுண்டு தாக்குதலில் ராணுவ வீரர்கள் உட்பட 24 பேர் உயிரிழப்பு

2 mins read
4050d18e-6eeb-494c-97f1-37ef5fccf827
பலுசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோர் தவிர 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

குவெட்டா: பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (மே 24) நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பேர் உயிரிழந்ததாக மூத்த அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் கூறினார்.

பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ரயில் ஒன்றைக் குறிவைத்து நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அந்தத் தாக்குதலில் உயிரிழந்த 24 பேரில் ராணுவ வீரர்கள் பலரும் அடங்குவர்.

குண்டுவெடிப்பில் உருக்குலைந்த ரயில் பெட்டி பக்கவாட்டில் சாய்ந்து கிடப்பதை சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட படங்கள் காட்டின. இன்னும் யாரும் உயிருடன் இருக்கிறார்களா என்பதை இடிபாடுகளுக்கு இடையே மீட்புப் பணியாளர்கள் தேடினர்.

தண்டவாளத்திலிருந்து விலகி, சாய்ந்து கிடந்த ரயில் பெட்டியிலிருந்து ரத்தம் சொட்டச் சொட்ட பலரையும் தூக்குப் படுக்கையில் சுமந்து சென்றதையும் பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தில் சூழ்ந்திருந்ததையும் காணமுடிந்ததாக ஏஎஃப்பி கூறியது.

பாகிஸ்தானின் வடமேற்கு வட்டாரத்தில் உள்ள பெஷாவர் நகர் நோக்கிச் சென்ற ரயிலில் ராணுவத்தினரும் அவர்களின் குடும்பத்தினரும் இருந்ததாக அந்தச் செய்தி நிறுவனத்திடம் அதிகாரி ஒருவர் கூறினர்.

குவெட்டா நகரில் உள்ள சாமன் பட்டாக் என்னும் இடத்தில் ரயில் சமிக்ஞையை ரயில் கடந்து சென்றபோது வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று அதனுடன் மோதியதால் பலத்த சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

குண்டுவெடித்ததும் ரயிலின் சன்னல்கள் தூக்கி வீசப்பட்டன. அருகிலிருந்த பல்வேறு வாகனங்களும் சேதமடைந்தன.

வரும் செவ்வாய்க்கிழமை (மே 26) நிகழும் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுவதற்காக ராணுவ வீரர்கள் ரயிலில் சென்றுகொண்டிருந்ததாக மற்றோர் அதிகாரி கூறினார்.

பெரிய நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் பலுசிஸ்தான் மாகாணம் மிகவும் ஏழ்மையானது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளியல் மேம்பாடு உள்ளிட்டவற்றில் நாட்டின் பிற பகுதிகளைவிட அது பின்தங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்