திரங்கானுவில் உள்ள பெட்ரோனாஸ் மிதவையில் விபத்து; மூவர் மரணம்

திரங்கானுவில் உள்ள பெட்ரோனாஸ் மிதவையில் விபத்து; மூவர் மரணம்

1 mins read
மிதவையில் மேம்பாட்டுப் பணிகளைச் செய்யச் செல்லும்போது விபத்து நிகழ்ந்தது
74665c50-27dc-49a6-9d9a-d08c5dc8e0de
ஜோகூர் பாருவில் உள்ள ஒரு பெட்ரோனாஸ் நிலையம். - படம்: எஸ்பிஎச் ஊடகம்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கத்தின் எரிசக்தி நிறுவனமான பெட்ரோனாசின் கடலில் மிதக்கும் கிடங்கு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (மே 24) நடந்த விபத்தில் மூவர் மரணமடைந்ததோடு ஒருவருக்குக் காயம் ஏற்பட்டது.

விபத்து குறித்த அறிக்கையைப் பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட் எனப்படும் அந்நிறுவனம் திங்கட்கிழமை (மே 25) வெளியிட்டது. அதில் சம்பவத்தன்று, மதியம் 12.50 மணியளவில் மலேசிய தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள திரங்கானு மாநிலத்தின் கடற்பகுதியில் இயங்கும் மிதவையில் விபத்து நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூவரும் மருத்துவமனை சென்றடைவதற்கு முன்பே மரணமடைந்துவிட்டதாக அங்கு உறுதிசெய்யப்பட்டது. விபத்தில் காயம் அடைந்த ஊழியர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அதிகாரிகள் விபத்து குறித்த விசாரணையை நடத்திவருவதாகப் பெட்ரோனாஸ் தெரிவித்தது. மேல் விவரங்களை நிறுவனம் வழங்கவில்லை.

அந்த ஊழியர்கள் மிதவையில் மேம்பாட்டுப் பணிகளைச் செய்ய அதில் இருந்து ஒரு அவசரகாலப் படகில் ஏறி, கடலில் அது இறங்கும்போது, படகைத் தாங்கியக் கயிறு திடீரென அறுந்துவிட்டது. அதனால் படகில் இருந்த அனைவரும் கடலில் விழுந்துவிட்டனர் என்று காவல்துறை கூறியதாக பெர்னாமா ஊடகம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
எரிசக்திஎரிபொருள்கடல்மேம்பாடுஊழியர்கள்மரணம்விபத்து