வாஷிங்டன்: சீனாவின் மேம்பட்ட தொழில்கள் சிலவற்றில் அமெரிக்க முதலீடுகளுக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வாஷிங்டன் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் புதன்கிழமை அதுகுறித்து அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது.
தேசியப் பாதுகாப்பிற்கு அது அவசியம் என்று அதிபரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், பெய்ஜிங்கின் சினத்தை அது தூண்டக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
சீனாவுடனான பொருளியல் மோதலில் அமெரிக்காவின் முக்கிய நடவடிக்கையாக அந்தக் கட்டுப்பாடு கருதப்படும். வருங்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூடுதல் பொருளியல் கட்டுப்பாடுகளுக்குத் தொடக்கமாகவும் அது அமையக்கூடும்.
செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட பகுதி-மின்கடத்திகள் போன்ற உயர் தொழில்நுட்பப் பிரிவுகளில் முதலீடு செய்ய விரும்பும் அமெரிக்க நிறுவனங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் பொருந்தும். அமெரிக்கப் பணமும் நிபுணத்துவமும் சீனாவிற்குச் செல்வதைத் தடுத்து நிறுத்துவது அதன் நோக்கம்.
புதிய கட்டுப்பாட்டின்கீழ், சீனத் தொழிற்சாலைகளில் பெரிய அளவிலான முதலீடுகளைச் செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் அதுகுறித்து அரசாங்கத்திற்குத் தகவல் அளிக்க வேண்டியது கட்டாயம். இருதரப்புப் பணப் பரிமாற்றம் குறித்து அமெரிக்க அரசாங்கம் தெளிவான கண்ணோட்டத்தைப் பெற அது உதவும்.
சீன ராணுவம், கண்காணிப்புப் பிரிவுகளுக்கு உதவக்கூடிய முதலீடுகளை இலக்காகக் கொண்டு அந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று பைடன் நிர்வாகம் கூறுகிறது. பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கையாள்வதே நோக்கம் என்றும் சீனாவுடனான சட்டரீதியிலான வர்த்தகத்திற்கு இடையூறு விளைவிப்பது நோக்கமன்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

