ஹனோய்: மனிதகுலத்திற்குத் தற்போது இருக்கும் ஒரே பெரிய அச்சுறுத்தல் பருவநிலை மாற்றம்தான் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை வியட்னாமில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறினார்.
அணுசக்தி மோதலால் ஏற்படுத்த முடியாத பாதிப்பைக் கூட இந்தப் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
அடுத்த பத்தாண்டுகள் அல்லது இருபது ஆண்டுகளில், வெப்பமயமாதல் காரணமாக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் எனவும் இது நமக்கு எதிர்காலத்தில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் அவர் சொன்னார்.
இது, வானிலை நிகழ்வுகள் அதிகரிப்பதற்கு ஒரு முக்கியமான காரணமாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.
இதிலிருந்து நாம் மீள்வதற்கு வழியில்லை என்றும் இதற்கிடையில் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்றும் திரு பைடன் கூறினார்.
இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சநிலை மாநாட்டில் தலைவர்கள் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கும் 10 ஆண்டுகளுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் திறனை மூன்று மடங்கு அதிகரிக்கவும் ஒப்புக்கொண்டதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 2023ஆம் ஆண்டு மௌயியில் ஏற்பட்ட காட்டுத்தீ உட்பட வானிலை, பருவநிலை பேரழிவுகளில் அதிகக் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்கா, இவ்வாண்டு நிறைய வானிலை நிகழ்வுகளைச் சந்தித்துள்ளதாகவும் இதனால் அந்நாட்டுக்கு பல மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அந்நாட்டுச் சுற்றுச்சூழல் தகவல்களுக்கான தேசிய மையம் கூறியது.

