போர் நிறுத்தம் முறிந்தது: அதிபர் டிரம்ப்

போர் நிறுத்தம் முறிந்தது: அதிபர் டிரம்ப்

2 mins read
பேச்சுவார்த்தை தொடரும் என்றும் அறிவிப்பு
d8eb0ab4-856a-4c67-9feb-28a188ccff02
ஹோர்முஸ் நீரிணையில் மூன்று கப்பல்களை ஈரான் தாக்கியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: ஹாேர்முஸ் நீரிணையில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது.

ஈரான் அனைத்துலகச் சந்தையில் எண்ணெய் விற்பனை செய்ய வழங்கியிருந்த உரிமத்தையும் அமெரிக்கா ரத்து செய்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிகப் போர் நிறுத்தம் முறிந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதன்கிழமை (ஜூலை 8) தெரிவித்தார்.

இருப்பினும், ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஈரானின் சிரிக், பண்டார் அப்பாஸ் உள்ளிட்ட பகுதிகளில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஏவுகணை மையங்களும் வானூர்தித் தளங்களும் குறிவைக்கப்பட்டன.

இந்தத் தாக்குதலில் பொதுமக்களுக்குப் பாதிப்பில்லை என்றாலும், பல மீன்பிடிப் படகுகள் தீக்கிரையாகின. அண்மையில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் இறுதி ஊர்வலத்திற்காக கொம் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அமெரிக்காவிற்கு எதிராக முழக்கமிட்ட நிலையில் இத்தாக்குதல் நடந்துள்ளது.

சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்தது என்ற அமெரிக்க அதிபரின் அறிவிப்பால், அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5 விழுக்காடு உயர்ந்துள்ளது.

அதிபர் டிரம்ப், ஈரான் இறுதி உடன்படிக்கைக்கு வரவேண்டும். இல்லையெனில், அந்நாட்டின் வளங்கள் முழுமையாக அழிக்கப்படுமென இதற்கு முன்னதாக அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.

அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்று ஈரான் கூறியுள்ளது. கத்தாரின் எரிவாயுக் கப்பல் மீதான தாக்குதலுக்கு ஈரானே காரணம் எனக் கத்தார் குற்றம் சாட்டியுள்ள நிலையில், வளைகுடாப் பகுதியில் மீண்டும் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அமெரிக்க ஆதரவு நாடுகளைத் தாக்கிய ஈரான்

அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து, பதிலடியாக, பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்கியது.

இதனை ஈரானின் புரட்சிக் காவல்படை புதன்கிழமை உறுதிப்படுத்தியது.

ஏற்கெனவே நீடிக்குமா என்ற சந்தேகத்தில் தொடர்ந்த சண்டை நிறுத்த உடன்பாட்டுக்கு தற்போதைய நிலவரம் பங்கம் விளைவித்துவிட்டது. இருநாடுகளுக்கு இடையே மீண்டும் தாக்குதல்கள் தொடங்கிவிட்டன.

பஹ்ரைனில் உள்ள பண்டார் சல்மான் ராணுவத் தளம், குவைத்தில் உள்ள ஆகாயப் படை விமானத் தளம் ஆகியவற்றை ஏவகணைகளைக் கொண்டும், ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தியும் ஈரான் தாக்கியுள்ளது.

அதனைத் தடுக்க முயன்ற அமெரிக்காவின் ஆளில்லா வானூர்தியைச் சுட்டுவீழ்த்தியதாகவும் ஈரானிய புரட்சிக் காவல்படை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்