தோக்கியோ: தோக்கியோவில் உள்ள பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு வணிக வளாகத்தில் குளிர்பதனப் பெட்டியில் குழந்தையின் உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சுமிடாவில் அந்தப் பொழுதுபோக்குத் தளம் உள்ளது. குழந்தையின் தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் குளிர்பதனப் பெட்டியில் இருந்ததாகக் காவல்துறை கூறியது.
அங்கிருந்த ஊழியர் ஒருவர் அலுவலகத்தின் குளிர்பதனப் பெட்டியைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது குழந்தையின் உடற்பாகங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர், சனிக்கிழமை (டிசம்பர் 6) உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு (சிங்கப்பூர் நேரம் இரவு 8 மணி) காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, அந்த அலுவலகத்தைக் காவல்துறையினர் சோதனையிட்டனர். குளிர்பதனப் பெட்டிக்குள் உணவு வைக்கும் இடத்தில் ஒரு பிளாஸ்டிக் பையில் குழந்தையின் தலை இருந்தது. உணவு வைக்கும் இடத்தில் தலைக்கு அடியில் கை, கால் உறுப்புகள் இருந்தன.
அக்குழந்தை ஒரு வயதிற்குட்பட்டதாக இருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்தது. விசாரணை தொடர்கிறது.

