வெளிநாட்டுப் பயணிகளுக்கு சீனா எச்சரிக்கை

1 mins read
7c90d80b-6315-4509-813c-42ef524786b9
வெளிநாட்டவர்களுக்கான குடிநுழைவு நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இணையவழி வருகை அட்டைச் சமர்ப்பிப்பு நடைமுறையைச் சீனா 2025 நவம்பரில் அறிமுகப்படுத்தியது. - படம்: இபிஏ

பெய்ஜிங்: கட்டணம் எதுவும் செலுத்தாமல் சீனாவிற்குள் நுழைவதற்கு வகைசெய்யும் நோக்கத்துடன் இணையவழி வருகை அட்டைச் சமர்ப்பிப்புச் சேவையை சீனா அண்மையில் அறிமுகம் செய்தது.

இந்நிலையில், அச்சேவையை நாடுவோரைக் குறிவைத்து போலி இணையத்தளங்கள் முளைத்துள்ளதால் வெளிநாட்டுப் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சீனாவின் தேசியக் குடிநுழைவு நிர்வாக அமைப்பு (என்ஐஏ) செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) ஓர் அறிக்கைவழி விழிப்பூட்டியுள்ளது.

கூடுதல் கட்டணம் செலுத்த தேவையின்றி, வெளிநாட்டவர்களுக்கான குடிநுழைவு நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இணையவழி வருகை அட்டைச் சமர்ப்பிப்புத் திட்டம் கடந்த நவம்பர் 20ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டதாக என்ஐஏ குறிப்பிட்டது.

இந்நிலையில், என்ஐஏவின் அதிகாரத்துவ இணையத்தளம், அரசாங்கச் சேவைத் தளங்கள், என்ஐஏவின் ‘12367’ செயலி, வீசேட் (அலிப்பே) குறுந்திட்டங்கள் அல்லது உரிய வருகை அட்டை கியூஆர் குறியீடு போன்ற அதிகாரத்துவ வழிகளில் வருகை அட்டைச் சமர்ப்பிப்புகளை மேற்கொள்ளும்படி விண்ணப்பதாரர்களுக்கு என்ஐஏ அறிவுறுத்தியுள்ளது.

இணையம் வழியாக வருகை அட்டை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாத வெளிநாட்டவர்களுக்காக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தரையிறங்கும் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னிலக்கச் சாதனங்கள் அல்லது வருகை அட்டை அச்சுப் படிவம் மூலமாக அவர்கள் அதனை மேற்கொள்ளலாம்.

குறிப்பாக, இணையவழி வருகை அட்டைக்கான போலி இணையத்தளங்களுக்கு எதிராகவே என்ஐஏ அறிக்கை வெளியாகி இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்
சீனாவருகை அட்டைவெளிநாட்டவர்